மருத்துவமனையில் இருக்கும் நிலையில் ஜெ.பெயரில் வெளியான இலவச வைஃபை" அறிக்கை!

சென்னை: உடல் நலக்குறைவினால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், அரசு பள்ளிகளில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்று அவரது பெயரில் இன்று அறிக்கை வெளியாகி உள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அனைத்து மக்களும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகை சிறிய பரப்புடையதாக்கி 'உலகமே சிறு கிராமம்' என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் உலகையே சுருக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தகவல் தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடையும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

Jayalalithaa orders Amma Wi-Fi Zone

  • தொழில் முனைவோரின் திறனை மேம்படுத்தும் வகையில் சென்னையிலுள்ள டைடல் பார்க்கின் முதல் தளத்தில் 6,860 சதுர அடியில் 90 இருக்கை வசதி கொண்ட தொழில்முனைவோர் மையம் ஒன்று நிறுவப்பட்டு 1.3.2016 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் தொழில்முனைவோர் மையங்களை ஏற்படுத்த ஆணையிட்டுள்ளேன்.
  • அதன்படி, இந்த ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள டைடல் பார்க்கில், வாடகைக் கட்டடத்தில் 2 கோடி ரூபாய் முதலீட்டில் 50 இருக்கை வசதியுடன் கூடிய தொழில் முனைவோர் மையம் ஒன்று அமைக்கப்படும். இந்த மையத்திற்கு 'நாஸ்காம்' நிறுவனம் ஒரு அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.
  • எங்களது தேர்தல் அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், Wi-Fi என்னும் கம்பியில்லா இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் 'அம்மா வைஃபை மண்டலம்' ஏற்படுத்திட ஆணையிட்டுள்ளேன்.

Jayalalithaa orders Amma Wi-Fi Zone

  • இந்த இடங்களில் Wi-Fi என்னும் கம்பியில்லா இணைய வசதி மற்றும் கட்டணமில்லா இணைய வசதி ஏற்படுத்தப்படும். மேலும், "மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா இணையதள வசதி செய்து தரப்படும்"" என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவை 10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். மேலும், இந்த சேவையினை நன்முறையில் தொடர்ந்து வழங்குவதற்கு ஆண்டுதோறும் ஏற்படும் செலவினத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
  • தமிழ்நாடு மின்னணு நிறுவனம் கடந்த 2004-05-ஆம் ஆண்டு சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு 'எல்கோSEZ‟ (ELCOSEZ)'-ஐ நிறுவியது. தற்போது சோழிங்கநல்லூர் எல்கோSEZ 45,000 இளைஞர்களுக்கு நேர்முக வேலைவாய்ப்பையும், 90,000 இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சோழிங்கநல்லூர் 'எல்கோSEZ' தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த ஏற்றுமதியின் மதிப்பு 16,536 கோடி ரூபாய் ஆகும். இது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியில் 25 சதவீதமாகும். சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும்
  • தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க ஏதுவாக, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்கோSEZ-ல், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், தகவல் தொழில் நுட்ப கட்டடம் ஒன்றினை 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளேன்.
  • தேசிய மக்கள்தொகை பதிவு ஆவணத்திலிருந்து பெறப்படும் குடிமக்களின் உயிரியத் தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு ஆதார் எண்களை ஒருங்கிணைத்து மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பொது அடையாள எண் ஆணையகம் (Unique Identification Authority of India- UIDAI) ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளாராக தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை அங்கீகரித்துள்ளது. குடிமக்களுக்கும், அரசு துறைகளுக்கும் சிறந்த சேவைகளை வழங்கிட ஏதுவாக, ஆதார் பதிவுகளை மேற்கொள்ளவும், மாநில மக்கள் தொகை பதிவேட்டினை பராமரிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மாநிலம் முழுவதும் 650 நிரந்தர பதிவு மையங்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
  • இந்த நிரந்தர பதிவு மையங்களை தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை பராமரிக்கும். முதற்கட்டமாக, இந்நிரந்தர பதிவு மையங்கள், சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தாலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னை நீங்கலான இதர மாநகராட்சிகளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் நிறுவப்பட்டு, ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும். ஆதார் அடிப்படையிலான பல்வேறு வகையான அட்டைகள் வழங்கும் பணியும் இம்மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும். இத்திட்டம் 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
  • தமிழக அரசின் சேவைகள், சம்பந்தப்பட்ட துறைகளின் வாயிலாக, பொதுமக்களுக்கு, இணையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, பெருவாரியான மக்கள், சிறந்த தொழில்நுட்ப வசதியுள்ள கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அரசு சேவைகள் கைபேசி செயலிகள் வாயிலாக அளிக்கும் வகையில் "அம்மா இ-சேவை" என்ற ஒரு திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். முதற்கட்டமாக 25 முக்கிய சேவைகள் இத்திட்டம் வாயிலாக வழங்கப்படும். இந்த கைபேசி செயலித் திட்டம் 1 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
  • தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் மின் ஆளுமை இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை ஆழ்வார்பேட்டையிலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை எழும்பூர் மற்றும் நுங்கம்பாக்கத்திலும் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களுக்காக கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக இடத்தில் 5 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் ஒன்று கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளேன். இக்கட்டடத்தில், தற்போது வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மின் ஆளுமை இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியவை செயல்படும். இந்த நடவடிக்கைகள் மூலம், தகவல் தொழில்நுட்பத்தின் பயன் பொதுமக்களை எளிதில் சென்றடைய வழிவகை ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

உடல்நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தேர்தல் அறிக்கையில் கூறியவைகளை உடனடியாக அறிக்கைகள் மூலம் அறிவித்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.

English summary
Amma Wi-Fi Zone and Assured Multi-Modal Access to e-Services Information Technology Department - Announcement of new Schemes by the Honble Chief Minister J.Jayalalithaa.
Please Wait while comments are loading...

Videos