For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் ஓ.பி.எஸ் வீடு முற்றுகை: நீதித்துறை தற்காலிக பணியார்கள் போராட்டத்தால் பரபரப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் 150 தட்டச்சர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் தற்காலிக தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் சுமார் 758 பேர் 2009ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் (டிஎன் பிஎஸ்சி) தேர்வு செய்து இந்த இடங்களை நிரப்பும் என்று அறிவித்துள்ளது. இதனால், 6 ஆண்டுகளாக பணியாற்றும் நீதித்துறை தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Judicial temporary staffs seize CM’s house

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 750 நீதித்துறை தற்காலிக பணியாளர்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, நீதித்துறையில் எங்களுக்கு உள்ள அனுபவத்தை கருத்தில் கொண்டு, ஒரு சிறப்பு தேர்வை நடத்தி நீதித்துறை காலியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று முறையிட முயற்சி செய்தனர்.

இதற்காக, அனைவரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனித்தனி குழுவாக நேற்று சென்னை வந்தனர்.

பின்னர், காமராஜர் சாலையில் இருந்து ஊர்வலமாக காலை 10 மணிக்கு தலைமை செயலகம் செல்ல முயன்றனர். இதையடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கோட்டை எதிரே உள்ள பூங்கா முன் நிறுத்தினர்.

5 பேரை மட்டும் தலைமை செயலகம் அழைத்து செல்வதாக கூறினர். ஆனால், முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால், சுமார் 150 பேர் நேற்று மாலை 6 மணி அளவில் ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்று திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்களில் 5 பேரை மட்டும் முதல்வரை பார்க்க வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

முதல்வரை சந்தித்த நீதித்துறை தற்காலிக பணியாளர்களின் பிரதிநிதிகள், தங்களது கோரிக்கைகளை அளித்தனர். கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார். இதையடுத்து, நீதித்துறை தற்காலிக பணியாளர்கள் முதல்வர் வீடு முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து நீதித்துறை தற்காலிகப் பணியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு நீதித்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களாகிய நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும்படி கடந்த 9.1.2015 அன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்தோம்.

அதைப் பரிசீலித்த முதல்வர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தற்காலிக ஊழியர்கள் பெயர்ப் பட்டியலுடன் சந்திக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால், முதல்வரை சந்தித்த ஒரு மாத வேளையில் தற்காலிக ஊழியர்கள் பலர் வேலையை விட்டு நிறுத்தப்படுவதற்கான சூழல் ஏற்பட்டது. சிலர் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பலர் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக நீதித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் தற்காலிக தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் இளநிலை உதவியாளார்கள் என கடந்த 2009ம் ஆண்டு முதல் 758 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் வாயிலாக வரும் பணியாளர்களை எங்களது பணியிடங்களில் நிரப்பப்படும்போது, எங்களுக்குக் கிடைத்த இந்த தற்காலிக பணியிலிருந்து நாங்கள் பணி நீக்கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் பணியில் சேர மாவட்ட நீதிபதியால் அழைக்கப்பட்டு நாங்கள் பணியிலிருந்து நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை ஜெயலலிதா அவர்களிடமும் தனிப் பிரிவிலும், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களிடமும் பலமுறை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தோம். ஆனாலும், நாங்கள் பணியிலிருந்து நிற்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

எங்களது குடும்பங்கள் இந்த வேலையை நம்பிதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்த வேலையின் மூலம் கிடைக்கும் சிறிய சம்பளத்தை வைத்துதான் எங்களுடைய அன்றாட வாழ்க்கையும், எங்களது பிள்ளைகளுடைய வருங்கால படிப்பு மற்றும் திருமண செலவினையும் எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, எங்களது குடும்ப சூழ்நிலை, வயது, நீதித்துறையில் எங்களுக்கு உள்ள அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பரிசீலனை செய்து, ஒரு சிறப்புத் தேர்வினை நடத்தி, எங்கள் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிரோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

English summary
District Judicial court temporary staffs seized TamilNadu Chief Minister O.Paneerselvam house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X