For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்களை கண்டவுடன் சுடச் சொன்னவர் தானே இந்த ரணில்: கி. வீரமணி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் கண்டவுடன் சுடு என்று சொன்னவர் தான் இப்பொழுது இலங்கைத் தீவின் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே. தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்த நிலைதான் இப்பொழுதும் என தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2000ஆம் ஆண்டில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்களை கழுத்தை அறுத்துக் குரூரமாகப் படுகொலை செய்த இலங்கை இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே என்ற கொடியவனுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனித உரிமை, மனிதநேயம் உள்ள அனைவரும் அத்தீர்ப்பை வரவேற்கின்றனர்.

எட்டுப் பேரைக் கொன்றவனுக்கே தூக்கு என்றால் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு என்ன தண்டனை என்பது தான் முக்கியமாகும்.

K. Veeramani blasts Sri Lankan government

சிங்களவர்கள் மனப்பான்மை என்ன?

ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் 10 ஆயிரம் பேர் டுவிட்டர் பக்கத்தில் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே மரணத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஆதரவாகக் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்கள். இன்றைக்கும் இலங்கை சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் மீதான வெறுப்பும், காழ்ப்பும் எத்தகையது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்றே போதும்.

வன்மங்கள் குறையவில்லையே!

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழர்கள் மீதான வன்மங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றன என்பதை பிரிட்டனின் ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சர் என்ற மனித உரிமை அமைப்பு இரு வாரங்களுக்கு முன் வெளியிட்டது.

தமிழர்கள் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தினர் விலக்கப்பட வேண்டும் என்று உலகெங்குமிருந்தும் வேண்டுகோள் விடப்பட்டும் புதிய அதிபர் மைத்திரி பால சிறீசேன இன்று வரை அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை என்பது ஒன்று; இலங்கைக்கு வெளிநாட்டுக் குழுவினர் விசாரணை என்பதையும் அனுமதிக்கப் போவதில்லை என்பது இன்னொன்று. இரண்டும் புதிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளப் போதுமானவை.
அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம்!

இந்த நிலையில் இலங்கை சென்றுள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் லிசாபிஸ்வாஸ் தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

இலங்கையில் இப்பொழுது ஆளும் சிறீசேன அரசின் ஆலோசனைகளைக் கேட்டுத் தான் செப்டம்பரில் ஜெனிவாவில் கூடும் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு செல்லுவோம் என்றே கூறிவிட்டார்.

இதே அமெரிக்காதான்...

இதே அமெரிக்காதான் இதற்குமுன் இரண்டு முறை இதே ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு சென்றது கடைசியாக 2014- மார்ச்சில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் வாசகங்களில் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் கையங்கரியத்தைச் செய்ததில் முந்தைய இந்தியா அரசுக்கும் முக்கிய பங்குண்டு.

மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை

எப்படியாக இருந்தாலும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் குறித்து பன்னாட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீனாவோடு ஒப்பிடும்போது முதலாளித்துவ நாடு ஒன்று இந்த அளவுக்காவது தலையிட்டதே என்ற ஆறுதல் எல்லோருக்கும் இருந்தது.

ஆனால், அந்த மரியாதையையும் இப்பொழுது அமெரிக்கா கெடுத்துக் கொண்டு விட்டது - மகா வெட்கக்கேடு!

திருடன் கையில் சாவியாம்!

உள்நாட்டு விசாரணையை இலங்கை நடத்திக் கொள்ளலாம் என்று பச்சைக் கொடியைக் காட்டியதன் மூலம் அமெரிக்கா பச்சையான துரோகத்தைச் செய்திருக்கிறது. திருடன் கையில் சாவியைக் கொடுக்கச் சொல்லுவது நல்ல மத்தியஸ்தம்தானோ!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மகிந்த ராஜபக்சேவால் 2010ஆம் ஆண்டில் மே மாதம் நியமிக்கபட்ட ஓர் உண்மையறியும் விசாரணை ஆணையமாகும். இது இலங்கையில் 2002 பேச்சுவார்த்தை தோல்வியில் இருந்து 2009 மே வரையான இறுதிக் கட்டப் போர் வரையிலான நடந்த நிகழ்வுகளையும் தோல்விகளையும் முரண்பாடுகளையும் விசாரித்து, அந்த மாதிரி தோல்விகளும் முரண்பாடுகளும் மீண்டும் நடைபெறாதவாறு தடுக்க என அமைக்கப்பட்டது.

ஆனால் ராஜபக்சேவின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக்குழுவின் தோல்விகள் குறித்து செப்டம்பர் 7, 2011 அன்று அனைத்துலக மன்னிப்பு அவை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை 69 பக்கங்களை உடையது. அந்த அறிக்கையில் உள்ள முக்கியமான குறிப்புகள்

• காலம் காலமாக இலங்கை அரசுகள் நியமித்த எந்தவொரு ஆணைக்குழுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவில்லை.

• படைத்துறை, துணைப் படைகள், விடுதலைப் புலிகள் யார் எனினும் குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் வகையில் சாட்சிகளை விசாரிக்கவில்லை. குறிப்பாக படைத்துறை குற்றம்சாட்டப்பட்டபோது இவ்வாறு விசாரிக்கவில்லை.

• சாட்சிகளைப் தாக்குதல்களில் பழிவாங்கல்களில் இருந்து பாதுகாக்க எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை.

• படைத்துறை அல்லது துணைப்படைகளோ செய்ததாக சொல்லப்படும் குற்றங்கள் தொடர்பானவைப் பற்றி அரசையோ, அரசு சார்பான சாட்சிகளையோ முறையாக விசாரிக்கவில்லை.

• பொறுப்பானவர்களை நீதிக்கு முன் கொண்டுவரும்படி இதுவரை ஒரு பரிந்துரையையும் முன்வைக்கப்படவில்லை.

இத்தகைய குறைபாடுகள் கொண்டதாகத்தான் ராஜபக்சே அமைத்த குழு இருந்தது என்பதை அனைத்துலக மன்னிப்பு அவை கூறியது இந்த இடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்ச் சுகி தாருஸ்மான் தலைமையில் அய்.நா.வால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, தன் அறிக்கையை அய்.நா. செயலாளர் பான்கீ மூனிடம் அளித்து விட்டது (13.4.2011)

இலங்கையில் நடைபெற்றது போர்க் குற்றமே என்பதற்கான ஆதாரங்களை விலாவாரியாக அந்த அறிக்கை பட்டியலிட்டதே! நியாயமாக அதன் அடிப்படையிலேயேகூட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லவா!
ஈழத் தமிழர் பிரச்சினையில் அய்.நா. தன் கடமையை சரிவர ஆற்றவில்லை என்று அய்.நா. செயலாளரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தான் மிச்சம்.

நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு

மனித உரிமை ஆணையத்தில் ஆறு ஆண்டுகள் இயக்குநராகப் பணியாற்றிய நவநீதம்பிள்ளை அய்.நா.வின் பாதுகாப்புக் குழுவிலேயேகூட இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாரே (23.8.2014).

காலங் கடந்தாலும் நியாயம் கிடைக்கும் என்று எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலே, அமெரிக்கா இப்பொழுது முதுகில் குத்தி விட்டது.

இந்தியாவின் தற்போதைய நிலை என்ன? காங்கிரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது மோடி தலைமையிலான பிஜேபி அரசு.

ராஜபக்சேவிடம் கூறிய உறுதிமொழி என்ன?

தான் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ‘சார்க்' நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தபோதே பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் முக்கியமான வெளிநாட்டுக் கொள்கையை வெளிப்படுத்தி விட்டாரே!

வர்த்தகம், வணிகம், பொருளாதார முன்னேற்றம், கலாச்சாரப் பரிவர்த்தனை ஆகிய அனைத்து அம்சங்களிலும், பயன் நிறைந்த வகைகளில் இலங்கை அரசுடன் உறவு கொண்டிருப்பதே இந்தியாவின் கொள்கை என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் கூறினாரா இல்லையா? அமைதி முன்னேற்றம், பிராந்தியப் பாதுகாப்பு முக்கியமாக இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சங்களிலும் இலங்கையை ஒரு முக்கியமான தோழமை நாடு என்று கருதுவதாக மேலும் ராஜபக்சேவிடம் அழுத்தமாகக் கூறினாரே!

இந்திய அயலுறவுத் துறை அமைச்சரின் கருத்து என்ன?

இந்தியாவின் அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பியரியை அண்மையில் சந்தித்தபோது ஐ.நா. அமைப்பு இலங்கை மீதான விசாரணையை மேற்கொள்வதில் தமக்குள்ள ஆட்சேபணைகளை இந்தியா கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினாரே!

மழை அடங்கிப் புயல் அல்லவா வெடித்து விட்டது

மழை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை என்பதுகூட இதற்குப் பொருந்தாது; மழை நின்றபின் புயல் அல்லவா வெடித்துக் கிளம்பியுள்ளது.

இன்றைக்கு ஈழத் தமிழர்களை இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற வளையங்கள் நெருக்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த நாடுகளுக்கிடையே உள்ள பல்வேறு அரசியல், பொருளாதார, சர்வதேசப் பிரச்சினைகளுக்குக் கிடைத்த பரிசோதனை நோயாளியாகத் தான் ஈழத் தமிழர்கள் இருக்கும் நிலை!

ரனில் விக்கிரம சிங்கே எப்படி?

தமிழக மீனவர்கள் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் கண்டவுடன் சுடு என்று சொன்னவர்தான் இப்பொழுது இலங்கைத் தீவின் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே. தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்த நிலைதான் இப்பொழுதும்!

வழக்கம் போலவே அரசியல் தானா?

இதனை நாம் எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதுதான் நம் முன் உள்ள முக்கிய பிரச்சினை.

தமிழ்நாட்டில் வழக்கம் போன்றே இதிலும் அரசியல் செய்ய ஆசைப்படாமல் ஒன்று திரண்டு, இந்தியா மூலமாக சர்வதேச அழுத்தத்தைக் கொடுக்கச் செய்தால் ஒழிய மீட்சிக்கு வழியில்லை. முதல் கட்டமாக இந்தியாவுக்குக் கொடுத்தாக வேண்டும்.

தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன?

கட்சித் தலைவர்கள் அவரவர்களுக்கு உகந்த முறையில் போராட்டங்களை அறிவித்துள்ளனர். என்றாலும் ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் தமிழ்நாட்டின் பலத்தினைக் காட்ட வேண்டிய தருணம் இது.

‘டெசோ' தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் தெளிவான அறிக்கையினை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்ட மன்றத்தின் நடப்புக் கூட்டத்தில்கூட இந்த வகையிலே தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாமே! மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

அமெரிக்காவுக்குக் கண்டனம் என்பதுடன் இந்தியாவுக்கு மிகப் பெரிய அழுத்தம் என்பதே நமது போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் - இருக்கட்டும்!

இங்குள்ள தமிழர் ஒன்றுபட்டால் ஈழத் தமிழன் உரிமை பெறுவான் என்பது நமது ‘தாரக மந்திரமாக' இருக்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DK leader K.Veeramani has blasted the Sri Lankan government for its partiality towards tamils there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X