For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிபெருமாள் உடலை உடனே பெற்றுக்கொள்ளுமாறு குடும்பத்துக்கு சம்மன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: மதுவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த சசிபெருமாளின் உடலை உடனடியாக வாங்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் சசிபெருமாளின் உறவினர்களுக்கு முதல்கட்ட சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது, காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது. அப்போது சசி பெருமாளின் கோரிக்கையான மது விலக்கை அமல்படுத்தாத வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினர்.

Kanniyakumary district admin to send summon to Sasiperumal's family

நாகர்கோவில் வந்த சசி பெருமாள் உறவினர்கள் அவரது உடலை கூட பார்க்காமல் சேலம் திரும்பி விட்டனர். இதனால் 31ம்தேதிமுதல் சசி பெருமாள் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையின் பிணவறையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் ஆசாரிபள்ளம் சென்று சசி பெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் பிணம் வைக்கப்பட்டுள்ள பிரீசரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் வைக்கப்படுவதால் உடல் கெட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் செவ்வாய்கிழமையன்று அஞ்சலி செலுத்த வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலை ஏற்பட்டது. தினமும் ஏராளமானோர் சசிபெருமாள் உடலை பார்க்க வேண்டும் என்று கேட்டு பிரச்சினை செய்வதால், சசி பெருமாள் உடலை உடனடியாக அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் முடிவு செய்துள்ளனர்.

வழக்கமாக அடையாளம் தெரியாத சடலங்கள் 30 நாட்கள் வரை பிணவறையில் வைக்கப்படும். ஆனால் அடையாளம் தெரிந்த சடலங்கள் ஒரு வாரத்திற்கு மேல் பிணவரையில் வைக்கப்படுவதில்லை.அவற்றை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். இங்கு சசி பெருமாள் உடல் 6 நாட்கள் ஆன பின்பும் உறவினர்கள் அதனை வாங்க மறுப்பதால் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உடலை ஒப்படைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அடையாளம் தெரிந்த பிணங்களை அவர்களின் உறவினர்கள் வாங்காமல் இருந்தால் அவர்களுக்கு சம்மன் அனுப்பி பெற்றுக் கொள்ள சொல்வது வழக்கமான நடைமுறைதான். அதைதான் இப்போது மேற்கொள்கிறோம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சசி பெருமாளின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குறைந்தபட்சம் குமரி மாவட்டத்திலும், சேலத்திலுமாவது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இல்லாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது சகோதரர் செல்வம் கூறியுள்ளார்.

English summary
Kanniyakumary district administration has decided to send summon to Sasiperumal's family to get his body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X