For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களின் சுயநலத்திற்காக தமிழக மக்களை காவு கொடுப்பதா? கேட்கிறார் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடக அரசு ஒவ்வொரு நாளும் காவிரியில் 148.2 கோடி லிட்டர் கழிவு நீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோரப்பகுதிகள் நச்சு பூமியாகி வருகின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடகத்துக்கு இருக்கும் நிலையில், அதை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு அமைதி காக்கிறது. ஆட்சிப் பொறுப்பிலுள்ள சிலரின் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனை காவு கொடுப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆற்று நீரைத் திறந்து விடுவதில் தயக்கம் காட்டும் கர்நாடக அரசு, கழிவு நீரை திறந்து விடுவதில் மட்டும் தாராளம் காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் காவிரியில் 148.2 கோடி கழிவு நீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோரப்பகுதிகள் நச்சு பூமியாகி வருகின்றன.

'Karnataka Polluting Cauvery by Discharging Waste' says Ramadoss

கர்நாடக சட்டமேலவையில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கதாகி, கர்நாடகத் தலைநகர் பெங்களூரு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

காவிரியை வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டும் பயன்படுத்தி வந்த கர்நாடகம், இப்போது கழிவு நீரை வெளியேற்றுவதற்கான சாக்கடையாகவும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடகத்தின் இந்த சட்டவிரோத செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 5 கோடி பேருக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரி திகழ்கிறது. இத்தகைய பெருமை கொண்ட காவிரியில் கழிவு நீரைக் கலப்பது மிகப்பெரிய பாவச் செயலாகும். ஃபுளோரைடு மிகையால் பாதிக்கப்பட்டுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 6755 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.1928 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 ஊரகக் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு குடிநீர் வழங்குவதற்கான ரூ.1295 கோடி வேலூர் விரிவான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு காவிரி ஆற்றிலிருந்து தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

காவிரியில் வரும் தண்ணீர் தூய்மையாக இருந்தால் மட்டுமே இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நோக்கம் நிறைவேறும். நச்சுகள் நிறைந்த கழிவு நீர் கலந்த காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது. ஏற்கனவே ஃபுளோரைடு கலந்த நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நீரைத் தருவதாகக் கூறி, நச்சு கலந்த நீரை வழங்குவது துரோகமாகும்.

தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரில் கழிவு நீரைக் கலக்க கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. மாறாக, காவிரியில் தூய்மையான தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். இதைப் பொருட்படுத்தாமல் காவிரியில் கழிவு நீரை வெளியேற்றுவது பெரும் குற்றமாகும். ஆற்று நீர் தூய்மை, கழிவு நீர் வெளியேற்றம், மாசுக்கட்டுப்பாடு ஆகியவை தொடர்பான 13 மத்திய அரசு சட்டங்களின் படியும், பல்வேறு மாநில அரசு சட்டங்களின்படியும் இது குற்றமாகும். இந்த சட்டங்களின்படி கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுப்பதுடன், கழிவு நீரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறவும் முடியும். ஆனால், கர்நாடகத்தின் இச்செயலை கண்டிக்கவோ, உச்ச நீதிமன்றத்தை அணுகி கழிவு நீர் வெளியேற்றத்தை தடுக்கவோ எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடகத்துக்கு இருக்கும் நிலையில், அதை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு அமைதி காக்கிறது. ஆட்சிப் பொறுப்பிலுள்ள சிலரின் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனை காவு கொடுப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்ட மக்களின் நலன் கருதி காவிரியில் கழிவு நீரை திறக்கக்கூடாது என கர்நாடக அரசை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கர்நாடக அரசுக்கு தண்டனை பெற்றுத் தருவதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Dr.Ramass Accusing Karnataka of polluting Cauvery river by discharging millions of litres of domestic and industrial waste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X