For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலை புலிகள் மீது பழிபோட்டு வம்பை விலைக்கு வாங்குவதா?: தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேவையில்லாமல் விடுதலைப் புலிகள் மீது குறை கூறி, அவர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தெரிவித்திருப்பது வீண் வம்பை விலைக்கு வாங்கும் செயல் என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

Karunanidhi condemns Tamilnadu governments plea in the Mullai Periyar dam issue

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டுமெனக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா அவர்கள் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு உத்தரவிட்டது.

இந்த அணையின் பராமரிப்பு பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பராமரிப்புப் பணிக்காகச் செல்லும் தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளை, கேரள வனத் துறையினர் உள்ளே அனுமதிக்காமல் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அணையைப் பார்வையிடவும், பராமரிக்கவும் முடியாத நிலைமை இருந்து வந்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டுமென்றும், மற்றும் சில கோரிக்கைகளையும் முன் வைத்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றம் அதுபற்றி மத்திய அரசு பதில் தர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தான் மத்திய அரசு நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க முடியாது என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உதவி வேண்டுமென்று கேரள அரசு கேட்டால் மட்டுமே அது குறித்துப் பரிசீலனை செய்ய முடியுமென்றும்; தமிழகத்தின் நிலையையும், தேவையையும் அலட்சியப்படுத்திடும் வகையில், தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நேற்று (3-7-2015) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களுக்கு நான்கு வாரங்களுக்குள் கேரள அரசும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு பராமரிப்புப் பணி தமிழக அரசின் வசம் இருப்பதால், அங்கே அந்தப் பணியை ஆற்றுவதற்காகச் செல்லும் தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் பாதுகாப்பு மிக மிக அவசியம். ஆனால் மத்திய அரசு, இதனை உணர்ந்து கொள்ளாமல், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பினை வழங்க முன்வராதது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

எனவே மத்திய அரசு இனியாவது தன்னுடைய கவனக்குறைவான நிலையைத் திருத்திக் கொண்டு, தமிழகத்தின் நலனைக் காத்திட, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவினைத் தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறு பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பினை (சி.ஐ.எஸ்.எஃப்) வழங்கிட ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்திட முன்வர வேண்டும். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசும் மத்திய அரசிடம் முறையாக எடுத்துச் சொல்லி, தேவையான அழுத்தம் தந்து, மத்திய பாதுகாப்புக் கோருவதன் அவசியத்தை நேரிலே வலியுறுத்தியிருக்க வேண்டும்.

அதே நேரத்தில் நேற்றைய தினம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை மனுவிலே, முல்லைப் பெரியாறு அணை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை, பயங்கர வெடிபொருள்கள் ஏற்றிய வாகனங்களைக் கொண்டு மோதச் செய்து தகர்க்க, லஸ்கர் - இ - தொய்பா, ஜெய்சி முகமது போன்ற பயங்கர வாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதாகத் தொடர்ச்சியாக பல தகவல்கள் ஐ.பி.க்குக் கிடைத்து வருகின்றன என்றும்; இலங்கையில் எல்.டி.டி.ஈ. எனப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வி அடைந்ததை அடுத்து, மீதமுள்ள அதன் உறுப்பினர்கள் மீண்டும் ஒன்று திரள முயற்சித்து வருகின்றனர் என்றும்; இந்தத் தீய சக்திகள், இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு இந்தியா உதவவில்லை எனக் கூறி இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க முயற்சிக்கின்றன என்றும்; எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்துவது அவசியம் என்றும் தெரிவித்திருப்பதாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பணியாற்றும் தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படை அவசியம் என்று வாதாட வேண்டியது மிகவும் அவசியம் என்ற போதிலும், தேவையில்லாமல் விடுதலைப் புலிகள் மீது குறை கூறி, அவர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தெரிவித்திருப்பது வீண் வம்பை விலைக்கு வாங்கும் செயல் என்றுதான் கூற வேண்டும்.

மத்திய பாதுகாப்பு தேவை என்பதற்கான வலுவான உண்மைக் காரணங்களைத் தெரிவித்து, ஏற்கத் தக்க வகையில் வாதாடுவதை விடுத்து, விடுதலைப் புலிகள் மீது மாசு கற்பிப்பதைப் போலவும், அவர்களின் முதுகிலே குத்தி அவமானப்படுத்துவதைப் போலவும், தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமது கடமையைச் செய்யும் தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பாதுகாப்பு வேண்டும் என்பதையும், அரசியல் சட்டத்தின் 262வது பிரிவின்படி இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதி நீர் பிரச்சினைக்குத் தீர்வு காண சட்டம் கொண்டு வர இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்து விளக்கி, மத்தியப் பாதுகாப்புப் படையை அங்கே அமைப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
DMK Chief Karunanidhi condemns Tamilnadu governments plea in the Mullai Periyar dam issue which is accusing LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X