காவிரி: கர்நாடகாவுக்கு போட்டியாக தமிழக சட்டசபை கூட்டம் நடத்த கருணாநிதி வலியுறுத்தல்!

By:

சென்னை: காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகா சட்டசபையை கூட்டும் போது தமிழக அரசும் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

காவிரிப் பிரச்சினை குறித்த வழக்கினை விசாரித்து உச்ச நீதிமன்றம், 20-9-2016 அன்று கர்நாடக மாநிலம், தமிழகத்திற்கு 21-9-2016 முதல் 27-9-2016 வரை 7 நாட்களுக்கு விநாடிக்கு ஆறாயிரம் கன அடி நீரைத் திறந்து விட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கட்சிக் கூட்டம்

20ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டதும், உச்ச நீதி மன்ற உத்தரவு குறித்து ஆலோசிக்க, கர்நாடகத்தில் முதலமைச்சர் தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் 21ஆம் தேதி காலை 11 மணிக்கெல்லாம் நடைபெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து அதே 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு விதான்சவுதாவில் முதலமைச்சர் சித்த ராமையா தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றி ருக்கிறது.

மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்

அந்தக் கூட்டத்தில் மாநில அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நீதிபதி மோகன் கதாரசி உட்பட பலர் கலந்து கொண்டு விவாதித்திருக்கிறார்கள். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து 21ஆம் தேதி அதாவது நேற்றிரவே மீண்டும் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

சிறப்பு சட்டசபை கூட்டம்

இந்தக் கூட்டங்களில் கர்நாடக ஆளுநரின் அனுமதியோடு நாளை மறுநாள் அதாவது 24ஆம் தேதியன்று சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டம் நடத்துவது என்றும், அதுவரை காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதில்லை என்றும் முடிவெடுத்திருப்பதாக இன்று (22-9-2016) செய்திகள் வந்துள்ளன.

10 ஆண்டுக்கு பின் சந்திப்பு

ஆங்கில நாளிதழ், "தி இந்து" இந்தச் செய்தியில், கர்நாடக முதல் அமைச்சர் பற்றிக் குறிப்பிடும் போது, "Mr.Siddaramaiah was keen to have the support of all Parties before proceeding further. In fact, ahead of the all-party meeting, he had even gone to meet his betenoire, the former Prime Minister H.D. Deve Gowda, at the latter's residence, the first such meeting in a decade" (அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டுமென்ற நோக்கில், தான் விரும்பவில்லை என்றாலும் முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டிற்கே, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா சென்று சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஒன்றாகும்) என்று தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா, உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு பாரபட்சமானது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை பிரதமர் மோடி ஏற்கக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார். கர்நாடக பா.ஜ.க. வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோரும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எக்காரணம் கொண்டும் கர்நாடகாவுக்கு எதிராக செயல்படக் கூடாது, தற்போதைய சூழ்நிலையில் உச்ச நீதி மன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்து விட முடியாது; காவிரி நீர் கர்நாடகாவுக்குச் சொந்த மானது என்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அனைவரும் வரவேற்பு

இது கர்நாடகாவில் தற்போது உள்ள பரபரப்பான சூழ்நிலை; அடுத்தடுத்து நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன அங்கே! ஆனால் தமிழ்நாட்டில் என்ன நிலைமை? உச்ச நீதி மன்ற உத்தரவு வெளி வந்தவுடன் அதனை வரவேற்று நான் அறிக்கை விடுத்துள்ளேன். தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லாம் அதனை வரவேற்று அறிக்கை விடுத்துள்ளார்கள்.

மனநிறைவு தருகிறதா?

ஆனால் ஆட்சியிலே இருப்போர், குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதா என்ன செய்கிறார்? உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு மன நிறைவு தருகிறதா இல்லையா என்பதை மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கற்பனையாக பேசியிருக்கிறார்

நேற்றையதினம் "காணொலி" காட்சி வாயிலாக நமது முதலமைச்சர் மெட்ரோ ரெயிலைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு சில மீட்டர் துhரத்திலே உள்ள மீனம்பாக்கத்தில் அதற்காக நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கோட்டையிலேயே உட்கார்ந்து கொண்டு காணொலிக் காட்சி வாயிலாக அந்த விழாவிலே கலந்து கொண்டாராம்! கலந்து கொண்டதோடு அங்கே முதல் அமைச்சர் பேசியும் இருக்கிறார்! யாருக்கு முன்னால் பேசினார்? தலைமைச் செயலாளரையும், ஆலோசகரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு பெரும் கூட்டம் ஆவலோடு தன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பேசியிருக்கிறார்.

சிந்தனையே இல்லையே

தமிழகத்திலே சம்பா சாகுபடியை முறையாகச் செய்திட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள இந்த தண்ணீரே போதுமானதல்ல என்று தமிழ் நாட்டு விவசாயிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். சம்பாப் பயிரை முழுமையாகக் காப்பாற்ற என்ன வழி என்பது பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல், காவிரி பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டாமல், ஏன் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூடக் கூட்டாமல் தமிழகத்திலே ஆட்சி நடைபெறுகிறது என்றால், இதைவிட வெட்கக் கேடான ஒரு நிலை இருக்க முடியுமா?

தூக்கத்திலா?

உச்ச நீதி மன்றமும், ஏன் மத்திய அரசும் தமிழகத்தையும், கர்நாடகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா? தமிழகத்திலே ஆட்சி அரைத் தூக்கத்திலா அல்லது முழுத் தூக்கத்திலா என்று நினைக்க மாட்டார்களா?

சட்டசபையை கூட்ட வேண்டாமா?

கர்நாடகாவில் அவசர அவசரமாக 24ஆம் தேதியன்று சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்திலே உடனடியாக சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டாமா? அடுத்து என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொண்டு எப்படிப்பட்ட செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கலந்தாலோசனை செய்திட வேண்டாமா?

கண்விழியுங்கள்...

அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா? 110வது விதிகள் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் நடைமுறைக்கு வராத திட்டங்களை அறிவித்துக் கொண்டு காலத்தையும், காகிதத்தையும் வீணடிக்காமல், அ.தி.மு.க. அரசு குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதா இனியாவது கண் விழித்து காவிரிப் பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

 

English summary
DMK leader M. Karunanidhi on Thursday urged Tamil Nadu government should convene Assembly session for Cauvery issue.
Please Wait while comments are loading...

Videos