For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிபெருமாள் மரணம் தற்கொலையா? நீதி விசாரணை நடத்துக..- கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அவரது மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

Karunanidhi demands judicial inquiry

காந்தியவாதி, சசிபெருமாள் இறந்தது தொடர்பாக இந்த ஆட்சி யில் காவல்துறையினர் அவர் 174வது பிரிவின் கீழ் (தற்கொலை) செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

இது முழுப் பூசனிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்கின்ற காரியமாகும். எனது அறிக்கையிலும், கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் பேட்டியிலும், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அளித்த பேட்டியிலும் இந்த ஆட்சியினரின் அலட்சியம், தாமதம் காரணமாகத் தான் காந்திய வாதி சசிபெருமாள் இறக்க நேரிட்டது என்பதை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறோம்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர், தம்பி வைகோ அளித்த பேட்டியிலே கூட மருத்துவமனையிலே சசிபெருமாளின் உடலைப் பார்த்தபோது, அவர் கழுத்து, மார்பு, வயிறு முழுவதும் இரத்தத்தால் நிறைந்து உடைகள் நனைந்திருந்தன என்றும் மூக்கு வழியாகவும் இரத்தம் வந்துள்ளது என்றும், அவரை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக கோபுரத்திலிருந்து அகற்ற முற்பட்டதில், பலத்த ரத்த காயம் ஏற்பட்டு, இருதயம், நுரையீரல், கல்லீரல் பகுதிகளில் அடிபட்டு அவர் இறந்திருக்க வேண்டும்,

அப்படியானால் சசிபெருமாள் மரணம் இயற்கை மரணமல்ல, கொலையால் ஏற்பட்ட மரணமாகத் தான் இருக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார். சசிபெருமாளின் அண்ணன் திரு. வெங்கடாசலம் அளித்த பேட்டியில் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.

சசிபெருமாள் 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியிலே ஏறி, ஐந்து மணி நேரம் போராடிய வரை காவல் துறையினரும், அரசினரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

காவல்துறையினர் பதிவு செய்திருப்பதைப் போல அது தற்கொலை என்றால், அதனை உரிய நேரத்தில் காவல் துறையினர் தடுப்பதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்க வேண்டாமா?

அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தாலும், தாமதத்தாலும் தான் சசிபெருமாள் உயிரிழந்திருக்கிறார். அவருடைய மரணத்திற்கு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றுக் கொண்டு, இதுபற்றிய முழுவிவரமும் நாட்டு மக்களுக்குத் தெரிய உயர் நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணை ஒன்றை நடத்துவதே முறையாக இருக்கும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader M. Karunanidhi on Saturday demanded a judicial inquiry into the Gandhian Sasiperumal death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X