For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடிய குணங்களை களைய வலியுறுத்தும் உன்னத திருநாள்.. கருணாநிதி ஓணம் வாழ்த்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திருவோணம் பண்டிகையையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

கேரள மாநில மக்களால் அறுவடைத் திருநாளாகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் "ஓணம் திருநாள்" கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் உட்பட அம்மாநில மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

Karunanidhi greets Malayalees on Onam

வீரமும், தீரமும், ஈரமும், கொடை நெஞ்சும் கொண்ட மாபலிச் சக்கரவர்த்தியை நேரில் நின்று வெல்ல முடியாதென்பதால், மகாவிஷ்ணு வாமன வடிவு கொண்டு, அவன் முன் தோன்றி மூன்றடி மண் வேண்டுமென இரந்து நிற்க; மாபலிச் சக்கரவர்த்தியும் மனமுவந்து அதனை ஈந்திட இசைந்திட; உடனே விசுவரூபம் கொண்டு ஓரடியை மண்ணிலும், இரண்டாம் அடியை விண்ணிலும் வைத்தபின் மூன்றாம் அடியை மாபலியின் தலையில் வைத்து அவனை அழித்தனன் என்று புராணம் கூறுகிறது.

புராணம் அப்படிக் கூறினாலும், அந்த மாமன்னன் மாபலிச் சக்கரவர்த்தியின்பால் மாறாத அன்பு கொண்ட மலையாள மக்கள் அவன் இந்த நாளில் தம் இல்லம் வருவான் எனும் நம்பிக்கையுடன் வீட்டினை அலங்கரித்து, வாயிலில் "அத்தப்பூ" கோலமிட்டு, புத்தாடை புனைந்து மலையாள மண்ணின் கலைப் பண்பாட்டுச் சிறப்புகள் பூத்துக் குலுங்கிட கொண்டாடும் ஓணம் திருநாள், ஆணவம், அகம்பாவம், வஞ்சகம், சூது போன்ற கொடிய குணங்கள் மனித சமுதாயத்திலிருந்து களையப்பட வேண்டுமென்பதையும், பொறுமை, அன்பு, அமைதி, மாற்றாரைப் போற்றும் மகத்தான மனிதநேயம் முதலிய நற்பண்புகள் போற்றி வளர்க்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உன்னதத் திருநாளாகும்.

பெருமைக்குரிய இந்த ஓணம் திருநாளைத் தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்பதற்காக, கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான நாகர்கோவில், கோவை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும், சென்னை மாவட்டத்திற்கும், 2006ஆம் ஆண்டிலேயே, அன்றைய கழக அரசினால் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது என்பதனை நினைவுபடுத்தி; திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழோடு மிக நெருங்கிய உறவு கொண்டுள்ள மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

English summary
Karunanidhi greets Malayalees on the occasion of Onam festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X