For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை வன்முறை.... ஹவாலா பணம் கொள்ளையில் தொடர்பு... போலீசார் மீது கருணாநிதி பாய்ச்சல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கோவையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, ஹவாலா பணம் கொள்ளையில் போலீசாருக்கு தொடர்பு சம்பவங்களை சுட்டிக்காட்டி காவல்துறையினரை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொட்ரபாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

22-9-2016 அன்று கோவையில், இந்து முன்னணியின் பொறுப்பாளர்களில் முக்கியமான ஒரு இளைஞர், சசிகுமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வேதனையிலும் வேதனையான செய்தி. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்டனம்

கண்டனம்

ஆனால் அந்தப் படுகொலையைக் காரணமாக வைத்து, கோவை மாநகரில் நடைபெற்று வரும் வன்முறைகள் கண்டிக்கத் தக்கவையாக உள்ளன. கோவை யில் நடைபெற்ற படுகொலையும் கூலிப்படையினரின் செயல் தான் என்றும் செய்திகள் வருகின்றன. தற்போதெல்லாம் கூலிப் படையினர் கொலை செய்வதை வருமானம் ஈட்டித் தரும் ஒரு தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். அண்மைக் காலத்தில் இவர்களின் அடாவடியும் அட்டகாசமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

கொலை செய்தவர்கள் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது முன்னுரிமைக்குரிய மிக மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதே நேரத்தில், இந்து முன்னணியினர், சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொண்டு, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, இந்தக் கொலைக்கே சம்பந்தம் இல்லாதவர்களை - அப்பாவிகளை யெல்லாம் மிரட்டுவதும், தாக்குவதும், கடைகளை மூடும்படி கட்டாயப்படுத்துவதும் விரும்பத் தக்க செயல்கள் அல்ல. உண்மையில், அவை சமூக விரோதச் செயல்கள் ஆகும். குறிப்பாக கோவையில் சிறுபான்மை சமுதாயத்தினர் நடத்துகின்ற பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றைப் பயங்கரமாகத் தாக்கி நாசம் செய்திருக்கிறார்கள். வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் இப்படிப்பட்ட வன்முறைச் செயல்களுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல், உண்மைக் குற்றவாளிகளைத் தாமதமின்றிக் கண்டுபிடித்து உரிய தண்டனை சட்டப்படி வாங்கிக் கொடுப்பது தான் நியாயமாக இருக்கும். அத்தகைய செயல்களில் காவல் துறை ஈடுபட வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.

பெட்ரோல் குண்டு வீச்சு

பெட்ரோல் குண்டு வீச்சு

அதே நேரத்தில் திண்டுக்கல்லிலும், கோவையிலும் பா.ஜ.க. அலுவலகங் களின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவரின் கடை மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல்லில் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு வன்முறை தீர்வென்று கருதும் போக்கு தீமை பயக்கக் கூடியது; கடும் கண்டனத் திற்குரியது.

விசாரணை கைதி சாவு

விசாரணை கைதி சாவு

கோவையில் நடைபெற்ற வன்முறையைப்போலவே, சென்னையில் கண்ணகிநகர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமடைந்துள்ளன. காரணம், நகை பறித்தல் வழக்கு ஒன்றில், 21 வயதான சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கடந்த 22ஆம் தேதியன்று இரவு கண்ணகி நகர் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் விசாரணையின் போது கார்த்திக்கை கடுமையாகத் தாக்கியதால் அவர் இறந்த சம்பவம், காவல் துறையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு மற்றும் ஓர் உதாரணம். கார்த்திக்கின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். கார்த்திக் சாவுக்குக் காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தால், அங்கே வன்முறை சம்பவம் நடந்திருக்காது. அதற்கு மாறாக, அங்கேயுள்ள காவல் துறையினர், கார்த்திக்கின் உறவினர்களை அழைத்து பணம் கொடுத்து நிலைமையை சமாளிக்க முற்பட்ட தாகவும் செய்தி வந்துள்ளது.

வழிப்பறி கொள்ளை

வழிப்பறி கொள்ளை

இவைகளை விட வெட்கக் கேடான, காவல் துறையைப் பற்றிய சம்பவம் ஒன்று கோவையில் நடைபெற்றுள்ளது. அதாவது ஹவாலா பணக் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு 3.90 கோடி ரூபாயைக் கொள்ளை அடித்துக் கொடுத்த பரமத்தி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு உதவியாக குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் சரவணன், வேலாயுதம் பாளையம் தலைமைக் காவலர் தர்மேந்திரன், மற்றும் சில காவலர்கள் உதவியாக இருந்துள்ளார்கள். கடந்த மாதம் 25ஆம் தேதியன்று கோவை மதுக்கரையில், போலீஸ் சீருடையில் இருந்த நான்கு பேர் கார் ஒன்றைக் கடத்தியிருக்கிறார்கள். அந்தக் காரில் 3.90 கோடி ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. விசாரணை யில் இந்தப் பணம் ஹவாலா பணம் என்பதும், கேரளாவைச் சேர்ந்த ஹவாலா பணக் கடத்தல்காரரான ஸ்ரீதர் என்பவருக்கு பரமத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரும் வேறு சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தக் கொள்ளையில் துணை புரிந்த காவல் துறை யினருக்கு, கடத்தல் கும்பல் தலைவன் ஒன்றரை கோடி ரூபாய் வழங்கியதாக செய்தி வந்திருக்கிறது.

கார் கடத்தலிலும்

கார் கடத்தலிலும்

இவர்களுக்கு கடந்த ஜுன் மாதம், திருப்பூர் மாவட்டம், அவினாசியில் நடந்த கார் கடத்தலிலும் தொடர்பு இருப்பதும், கரூர் மாவட்டம், க. பரமத்தி போலீஸ் தலைமைக் காவலர் பழனிவேல், தென்னிலை போலீஸ் தலைமைக் காவலர் அர்ஜுனன் ஆகியோருடன் சேர்ந்து காரைக் கடத்தியதும் தெரிய வந்து, இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்தது என்பார்களே, அதைப் போல கடத்தல் காரர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினரே, கடமையை மறந்து மனசாட்சியை நசுக்கி யெறிந்து விட்டு, இதில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல் துறைக்கும் ஏற்பட்டுள்ள அவமான மாகும். ஒரு காலத்தில் "ஸ்காட்லாண்ட்" காவல் துறைக்கு ஈடாக பாராட்டப்பட்ட காவல் துறையின் நிர்வாகம், இந்த அளவுக்கு சீர்கெட்டிருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். அரசு எவ்வழியோ அவ்வாறே அரசின் துறைகளும் செயல்படுகின்றன என்பதற்கு இதுவே தக்க உதாரணம்!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi criticizing the Tamilnadu Police for various incidents including Coimbatore violences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X