For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம்: ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விசாரணை கமிஷன்- கருணாநிதி எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் துணைவேந்தர் நியமனங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அடுத்த ஆட்சிக் காலத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டால் ஊழலுக்கு சொந்தக்காரர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதி இன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கு எட்டு கோடி ரூபாய் பேரம் நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருக்கிறாரே?

பதில்: எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டால் இந்த ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அவசர அவசரமாகப் பதவி ஏற்பவர்களும் பரிதவிக்கத்தான் நேரிடும்!

துணை வேந்தர் பதவிகளும், அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் பதவிகளும் பல மாதங்களாகக் காலியாக இருந்த நிலையில், பலரும் அதைச் சுட்டிக்காட்டியபோது, அது பற்றிக் கவலைப் படாதிருந்த அ.தி.மு.க. அரசு விரைவில் தேர்தல் வருகிறது என்றதும் அவசர அவசரமாக உள்நோக்கத்துடன் இந்தப் பணி இடங்களைப் பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுகிறது என்றும், அதிலே இலட்சக் கணக்கான ரூபாய் பேரம் பேசப்படுவதாகவும் அறிக்கைகளும், வழக்குகளும் வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அவசர அவசரமாக அந்த இடங்களில் சிலரை நியமிப்பதும், அவர்கள் அரசை விட வேகமாக அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதையும் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் விடுத்த அறிக்கை உண்மையாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம்தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது. தற்போது செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரிகளையும், கல்வித் துறையில் ஆய்வக உதவியாளர்களையும் நியமிப்பதில் அரசு அதிவேகம் காட்டி வருகிறதாம்!

Karunanidhi on VC's appointment issue

அரசு ஊழியர்கள் போராட்டம்

கேள்வி: அரசு அலுவலர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதம்...

பதில்: அ.தி.மு.க. ஆட்சியில் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சத்துணவு, அங்கன்வாடி அலுவலர்களும், வணிக வரித் துறை அலுவலர்களும் என்ன பாடு படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ஏடுகளைப் படித்தாலே போதும்!

முதலமைச்சர் ஜெயலலிதா, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்துப் பேசாததைக் கண்டித்தும், அறுபது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசு அலுவலர்கள் 8-2-2016 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் பல ஆயிரம் ஊழியர்கள் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பில் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச முயற்சி செய்து, அது நிறைவேறவில்லை என்றும், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்றாவிட்டால், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அங்கே தெரிவித்திருக்கிறார்கள்.

அரசு அலுவலர்களை நேரிலே சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதை கௌரவக் குறைவாக கருதி வந்த அ.தி.மு.க. அரசு நேற்றையதினம் அழைத்துப் பேசி விட்டு, இறுதியாக அவர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் வருமென்று காத்திருக்கிறார்கள்.

அரசு அலுவலர்களைப் போலவே, வணிக வரித் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வணிக வரி வசூல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முறையற்ற பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும், முறையான பதவி உயர்வினை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பன போன்ற பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 4-2-2016 அன்று சென்னையில் 500 பேர் உட்பட, தமிழகம் முழுவதும் 6000க்கு மேற்பட்ட வணிக வரித் துறைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அறிவிக்கப் படாத வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டார்கள். 6-2-2016 அன்று இந்தத் துறையின் அமைச்சர் இவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என்றும், உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென்றும் கூறியதற்கிணங்க, உண்ணா விரதத்தைக் கை விட்ட போதிலும், அரசாணை வெளியிடும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்து, சத்துணவு, அங்கன்வாடி அலுவலர்கள் தங்களுக்கு பணிவரன்முறை வழங்க வேண்டும், வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை விபரீதம்

கேள்வி: திருவண்ணாமலையில் கூட்ட நெரிசலால் கோயில் குளத்தில் மூழ்கி நான்கு பேர் பலியாகியிருக்கிறார்களே?

பதில்: அ.தி.மு.க. அரசின் அலட்சியம், அக்கறையின்மை காரணமாக திருவண்ணாமலையில் இந்த நான்கு உயிர்கள் அநியாயமாகப் பலியாகியுள்ளன. அரசு நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டிருந்தால், இந்த உயிர்கள் இப்படிப் போய் இருக்காது. அரசு முன் கூட்டியே தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டு, தற்போது கீழே பணியாற்றும் அலுவலர்கள் மீது பழியைப் போட முனைந்துள்ளது என்பது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியை ஒத்ததாகும்.

கலைவாணர் அரங்கத்தின் கதி?

கேள்வி: ஓமந்தூரார் தோட்டத்தில் 61 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைப்பதாகச் செய்தி வந்துள்ளதே?

பதில்: தி.மு. கழக ஆட்சியில் அந்த அரங்கம் புதுப்பிக்கப்பட்டு "கலைவாணர் அரங்கம்"என்று பெயரிடப்பட்டு என்னால்தான் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கலைவாணர் பெயரில்தான் அந்த அரங்கம் அழைக்கப்பட்டு இயங்கி வந்தது. மீண்டும் கழக ஆட்சியில் அந்தக் கலையரங்கினை புதிதாக விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான பணிகள் எல்லாம் நடைபெற்றன.

தற்போது அந்த அரங்கம்தான் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது. ஆனால் அது பற்றி வந்துள்ள செய்தியில், புதிய கலை அரங்கம் என்று தான் உள்ளதே தவிர, கலைவாணர் பெயர் அந்த அரங்கத்திற்கு மீண்டும் இருக்குமா என்று தெரியாத நிலையில் செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை கலைவாணரின் பெயரினை மறைக்கின்ற முயற்சியில் ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளதா என்பது அந்த அரங்கம் திறந்த பிறகு தான் தெரியும்.

வள்ளுவர், தொல்காப்பியர், செம்மொழி, பாவேந்தர் பாரதிதாசன் - போன்ற புகழ்ப் பெயர்களை யெல்லாம் மறைத்த மாபெரும் வரலாற்றைப் படைத்திருப்பவர்கள் அன்றோ அ.தி.மு.க. ஆட்சியினர்!

ஸ்டிக்கர் விவகாரம்

கேள்வி: உடுமலைப்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் 68 தம்பதிகளுக்கு நடத்தப்பட்ட இலவசத் திருமண விழாவில், தம்பதிகளின் நெற்றிப் பொட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படம் பொறித்த ஸ்டிக்கரை ஒட்டியது பற்றி?

பதில்: நான் சொன்னது நிரூபிக்கும் வகையில்தான், தேர்தலுக்கு முன்பாகவே இவ்வாறு நெற்றிப்பொட்டில் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறித்த ஸ்டிக்கரை ஒட்டி பொருத்தம் பார்த்திருக்கக் கூடும்!

ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிப் பாட நூல்களில் இருந்த அய்யன் திருவள்ளுவர் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கத் தொடங்கி, இன்று ஜெயலலிதா படம் பொறித்த ஸ்டிக்கரை நெற்றிப் பொட்டில் ஒட்டி மகிழ்ச்சி அடையும் அளவுக்கு ஸ்டிக்கர் கலாச்சாரம் சென்று விட்டது!

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலையிலேகூட ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுப்பதை, புகைப்படத்தோடு வெளியிட்டிருக்கிறார்களே என்ற ஒரு கேள்விக்கு 7-1-2016 அன்று நான் அளித்த பதிலில், தப்பித் தவறி 2016ஆம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, அவர்கள் முதுகிலே ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவார்கள் என்று எழுதியிருந்தேன் அல்லவா? அதை நிரூபிக்கும் வகையில்தான், தேர்தலுக்கு முன்பாகவே இவ்வாறு நெற்றிப்பொட்டில் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறித்த ஸ்டிக்கரை ஒட்டி பொருத்தம் பார்த்திருக்கக் கூடும்!

கேள்வி: ஆளுநர் உரையில் பதிலளிக்கும் போது முதலமைச்சர் ஜெயலலிதா சட்டம் ஒழுங்கு பற்றியும், காவல் துறையினரின் திறமைகள் பற்றியும் பெருமையாகப் பேசியிருக்கிறாரே?

போலீஸுக்கு கோர்ட் குட்டு

பதில்: "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"என்பார்களே, அதுபோல் தமிழகக் காவல் துறையின் தனிப் பெரும் திறமைக்கு தக்க உதாரணமாகத் திகழ்கிறது!

காவல் துறைக்குப் பொறுப் பேற்றிருப்பவர் முதலமைச்சர்; அவர் அந்தத் துறை பற்றிப் பெருமையாகப் பேசாமல் என்ன செய்வார்? ஆனால் அந்தத் துறையின் பெருமை பற்றி உதாரணம் தேடி அலைய வேண்டியதில்லை. "தமிழகக் காவல் துறை மீது நம்பிக்கை இல்லை"என்று முன்பொரு முறை அறிவித்த உயர் நீதிமன்றம், நேற்றுகூட கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. நெய்வேலி அருகே ஐந்து பேர் ஒரு இளம் பெண்ணைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து ஆகியோர் கூறும்போது, "இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் தற்போது மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உள்ள கோப்புகளை ஆராய்ந்து பார்த்தோம். போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. போலீசார் இத்தகைய வழக்கில் ஏன் மெத்தனமாக உள்ளனர்? இது வேதனை அளிக்கிறது. டி.என்.ஏ. சோதனைகூட நடத்தவில்லை. அடையாள அணி வகுப்பும் நடத்தவில்லை. சாட்சிகளிடம் சரியான வாக்குமூலம் வாங்கவில்லை.

அவர்கள் என்ன வாக்குமூலம் அளித்தார்கள் என்று பதிவு செய்யவில்லை. போலீசார் சிறிதளவுகூட புலன் விசாரணை செய்யவில்லை. முறையாக விசாரிக்காமல் பணியாற்றுகிறார்கள். இதனால் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. போலீசாருக்கு திறமை இல்லை. திறன் குறைவாக உள்ளது. ஏன் போலீஸ் டி.ஜி.பி.யை நேரில் அழைக்கக் கூடாது? இது போன்ற வழக்குகளில் கைதிகள் தொடர்ந்து விடுதலையாகி வருகிறார்கள். இதற்கு போலீசார் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்"என்றெல்லாம் தமிழகக் காவல் துறையினரின் திறமைகள் பற்றி (!) கடுமையான கருத்து வழங்கியிருக்கிறார்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"என்பார்களே, அதுபோல் தமிழகக் காவல் துறையின் தனிப் பெரும் திறமைக்கு (?) இதுவே தக்க உதாரணமாகத் திகழ்கிறது.

English summary
DMK leader Karunanidhi condemned the appointments of VC's in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X