For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கலைப்பதா? மத்திய அரசுக்கு கருணாநிதி எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கலைக்கப் போவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தான் மகளிர் சமூக - பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும், ஜனநாயக ரீதியான அதிகாரங்களை பெறவும் முன்னுரிமை தந்து, பெண்களுக்குச் சொத்துரிமை, உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவிகித இட ஒதுக்கீடு, அரசுப் பணிகளில் 30 சதவிகித ஒதுக்கீடு, பல்வேறு திருமண உதவித் திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறு நிதி உதவித் திட்டம், இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் என்பன போன்ற பல்வேறு திட்டங்களைத் தொடங்கி, அவர்கள் வாழ்விலே ஒளியேற்றிடுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

Karunanidhi opposes move to scrap women SHGs

அந்த வரிசையில் கிராமப் புற ஏழையெளிய பெண்களை சமூக, பொருளாதார நிலைகளில் உயர்த்திடும் நோக்கில் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதி உதவியுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம் 1989ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் திமுக அரசினால் தொடங்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், பன்னாட்டு விவசாய வளர்ச்சி நிதித் திட்டம் முழுவதுமாக புதிதாக உருவாக்கப் பட்ட மகளிர் திட்டத்தோடு இணைக்கப்பட்டது. இதுவே மகளிர் சுய உதவிக் குழுத் திட்டமாகும்.

1997-98ல் 14 மாவட்டங்களிலும், 1998-99ல் 7 மாவட்டங் களிலும், 1999-2000ல் 7 மாவட்டங்களிலும் என சென்னை நீங்கலாக 28 மாவட்டங்களில் செயல்படத் தொடங்கி, 31-12-2010 வரை 75,66,497 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்ட 4,88,970 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப் பட்டன. இவர்களின் மொத்த சேமிப்பு மட்டும் 2,658 கோடி ரூபாய். 30-9-2010 அன்றைய அளவில், சுயஉதவிக் குழுக்களுக்கு 1989ஆம் ஆண்டு முதல் 9,521 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டது.

2006-2007ஆம் ஆண்டு முதல், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், 96,699 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு 96 கோடியே 70 இலட்ச ரூபாய் சுழல் நிதி மானியமாக மட்டும் வழங்கப்பட்டது.

2008-2009ஆம் ஆண்டில் மட்டும், அதுவரை சுழல் நிதி பெறாத தகுதி வாய்ந்த ஒன்றரை இலட்சம் சுய உதவிக் குழுக்களுக்கும் சுழல் நிதி மானியம் வழங்க அரசு முடிவு செய்து, அதன்படி சுழல் நிதி மானியம் பெறாத அனைத்து ஒன்றரை இலட்சம் சுய உதவிக் குழுக் களுக்கும் வங்கிக் கடனுடன் 150 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும்பொருள்களைச் சந்தைப்படுத்து வதற்காக மாவட்டங்கள்தோறும் பொருள்காட்சிகள் நடத்தப்பட்டதோடு, மாநில அளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நிரந்தர சந்தை வளாகம் ஒன்று "அன்னை தெரசா மகளிர் வளாகம்" என்ற பெயரில் திமுக ஆட்சியில் தொடங்கப் பட்டது.

இவ்வாறு கிராமங்களிலிருந்து தொடங்கி, தமிழகத்தின் தலைநகர் வரை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சேமிப்பு, கடன் வசதி, உற்பத்திப் பொருள் களுக்கு உரியசந்தை என அனைத்து வகைகளிலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் உருவாக்கித் தரப்பட்டன. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டுக்காக உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருந்த ஸ்டாலின், அதிலே மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பல மணி நேரம் செலவிட்டு மகளிருக்கான சுழல் நிதியினைதானே நேரடியாக வழங்கி அதிலே ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தினார் என்பதை தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் நன்கறிவார்கள்.

ஆனால் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று ஆங்கில நாளேட்டில் இன்று வெளிவந்துள்ளது. அந்தச் செய்திக்கு தலைப்பே, "Centre's Move to scrap Self-Help Groups can shake up T.N. Politics, benefit the Poor" (ஏழைகளுக்கு உதவிடும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சி) என்பதாகும்.

அந்தச் செய்தியில், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மத்திய அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களை மூடப்போவதாக அறிவித்திருக்கும் செயல் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், தமிழ்நாட்டு மகளிர்க்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு உடனடியாக மத்திய அரசினைத் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டு மகளிரின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிவிப்பதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எவ்வித பாதகமும் ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi on Wednesday expressed concern over Women and Child Development Minister Maneka Gandhi's recent move to scrap the women's self-help groups (SHGs) scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X