For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் இந்த வைத்தியநாதன்... எதற்காக அவரை ஜெயலலிதா அதிமுகவிலிருந்து நீக்கினார்?.. கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: நம்பிக்கைக் கருவூலம்தானே நமது கழகம் என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் விலை உயர்வு விவகாரம் குறித்து விளக்கியுள்ளார்.

யார் இந்த வைத்தியநாதன், எதற்காக அவர் கைது செய்யப்பட்டார், எதற்காக அவரை கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார் என்றும் கருணாநிதி கேட்டுள்ளார்.

கருணாநிதியின் விரிவான அந்த அறிக்கை:

ஆர்ப்பாட்டப் போராப்பாட்டு

ஆர்ப்பாட்டப் போராப்பாட்டு

பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைத் திரும்பப் பெறக் கோரியும், பெரு மழை காரணமாகத் தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கான ஏக்கரில் பாழாகி கிடக்கும் பயிர்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி உடனடியாக அறிவிக்கக் கோரியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் கண்டன "ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு" நடத்துவதென அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தக் காலத்திலும் இப்படி உயரவில்லை

எந்தக் காலத்திலும் இப்படி உயரவில்லை

பால் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை எந்த ஆட்சிக் காலத்திலும் இது போல லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்வை ஒரே நேரத்தில் செய்ததில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இந்த மூன்றரை ஆண்டுக் காலத்தில் தற்போது பாலின் விற்பனை விலையை உயர்த்துவது இரண்டாவது முறை. முதலில் ஆட்சிக்கு வந்தவுடன் 2011ஆம் ஆண்டிலேயே, கழக ஆட்சியில் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 ரூபாய் 75 பைசா என்றிருந்த நிலை யினை மாற்றி, 24 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவுக்கு உயர்த்தி யிருக்கிறார்கள். தற்போது 24 ரூபாய் என்பதிலேயிருந்து மேலும் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, 34 ரூபாய் என்று ஆக்கியிருக்கிறார்கள்.

எங்கள் அம்மா சொல்படிதான்

எங்கள் அம்மா சொல்படிதான்

இதுபற்றி இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வத்தைக் கேட்டால், "எங்கள் அம்மா, லிட்டருக்கு 6 ரூபாய் என்று உயர்த்தினார், அதற்குமேல் 10 ரூபாய் என்று உயர்த்தினால் தானே, நான் அம்மா வழிப்படி நடப்பதாகப் பொருள்; எனவேதான் லிட்டருக்கு பத்து ரூபாய் என்று உயர்த்தியிருக்கிறேன்" என்று சொல்லக்கூடும்!

நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட மாட்டார்களா

நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட மாட்டார்களா

இதுகுறித்து பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில் 1-1-2014 முதல் பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய போது, பாலின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அப்போது ஏன் பாலின் விற்பனை விலையில் மாற்றம் செய்யவில்லை? ஏழையெளிய பாமர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகத்தானே அப்போது பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி விட்டு, விற்பனை விலையை உயர்த்தாமல் இருந்தீர்கள்? ஆனால் தற்போது மட்டும் பாலின் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் என்றும், எருமைப் பாலுக்கு 4 ரூபாய் என்றும் உயர்த்தி விட்டு, விற்பனை விலையை 10 ரூபாய் என்று உயர்த்தியிருக்கிறீர்களே, அதனால் ஏழையெளிய நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட மாட்டார்களா?

அக்கறை அற்றுப் போய் விட்டதா

அக்கறை அற்றுப் போய் விட்டதா

ஏழையெளிய நடுத்தர மக்கள் மீது 2014 ஜனவரியில் இருந்த அக்கறை, தற்போது அற்றுப் போய் விட்டதா? கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் என்று உயர்த்திவிட்டு, விற்பனை விலையை மட்டும் இரண்டு மடங்காக லிட்டருக்கு 10 ரூபாய் என்று அறிவித்திருக் கிறீர்களே, இதனால் ஏழையெளிய நடுத்தரக் குடும்பத்தினர், குழந்தைகள், முதியோர் என அனைவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? மிகவும் ஏழையாக உள்ள மக்களேகூட அன்றாடம் காலையிலே ஒரு லிட்டர், மாலையிலே ஒரு லிட்டர் என்ற அளவுக்கு வாங்குபவர்கள்கூட, இனிமேல் மாதம் ஒன்றுக்கு 600 ரூபாய் அதிகமாகச் செலவழிக்க வேண்டிய அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சியின் அறிவிப்பு உள்ளது. அவர்களுடைய வாங்கும் சக்தி சிறிது சிறிதாக வற்றிப் போய்க் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் பாலுக்கு அதிகமாகச் செலவழிப்பது இயலக்கூடிய ஒன்றா?

மக்களைப் பாதித்தால் அது பன்னீர் செல்வம் அறிவிப்பா

மக்களைப் பாதித்தால் அது பன்னீர் செல்வம் அறிவிப்பா

இந்த அறிவிப்பிலேகூட கொள்முதல் விலையை உயர்த்தும்போது, "இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது" என்று குறிப்பிட்டு விட்டு, விற்பனை விலையை உயர்த்தியிருப்பதாகச் செய்துள்ள அறிவிப்பிலே மட்டும் அம்மா வழியில் செயல்படும் தமிழ் நாடு அரசு என்று குறிப்பிடாததைப் பார்க்கும்போது, மக்களைப் பாதிக்காத அறிவிப்பு என்றால் மக்களின் முதல்வர் அம்மாவின் அறிவிப்பு என்றும், மக்களைப் பாதிக்கின்ற அறிவிப்பு என்றால் பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு என்றும் கூறிக் கொள்வார்களா? மேலும் பன்னீர்செல்வத்தின் அறிக்கையில், ஏதோ தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் நிறுவனம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது என்று கூறியிருக்கிறார்.

திமுக ஆட்சிக்காலத்தில்

திமுக ஆட்சிக்காலத்தில்

தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 1-9-2009 அன்றும், 5-1-2011 அன்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பாலின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போது, பொதுமக்கள் குறிப்பாக ஏழையெளிய நடுத்தரப் பிரிவினர் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதைக் கருதித்தான் பாலின் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 17 ரூபாய் 75 காசு என்பதிலிருந்து ஒரு பைசாகூட உயர்த்த வில்லை என்பதையும், அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த இந்த மூன்றரை ஆண்டுக்குள்; இரண்டு முறை மொத்தம் லிட்டர் ஒன்றுக்கு 16 ரூபாய் 25 பைசா உயர்த்தி, தற்போது லிட்டர் 34 ரூபாய் என்ற அளவுக்கு நிர்ணயித்திருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், கழக ஆட்சியின் மகிமையையும், அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கினையும் புரிந்து கொள்ள முடியும். இதுதான் தி.மு. கழக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தை அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்றதற்கான அடையாளமா என்பதை இந்நாள் முதல்வர்தான் விளக்கவேண்டும்.

ஏன் ஏன் ஏன்...!

ஏன் ஏன் ஏன்...!

தி.மு. கழக ஆட்சியில் ஆவின் நிறுவனம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டதாக அறிக்கை விடும் இந்நாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக செய்த அமைச்சரவை மாற்றத்தின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியை மாற்றியது ஏன்? ஆவின் நிறுவனத்தை அதல பாதாளத்திலிருந்து மீட்டு மேல் நிலைக்குக் கொண்டு வந்தார் என்பதற்காகவா? அதற்குப் பிறகு ஆவின் பால் விற்பனையில் பாலிலே பெருமளவு கலப்படம் செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் யார்? அ.தி.மு.க. பிரமுகர் இல்லையா? அவர் எதற்காகக் கைது செய்யப் பட்டார்?

கூலி வேலை பார்த்த வைத்தியநாதன்

கூலி வேலை பார்த்த வைத்தியநாதன்

சாதாரண கூலி வேலை பார்த்த அவர், 83 வாகனங்களுக்கு உரிமையாளராக - பெரும் செல்வந்தராக மாறியது எவ்வாறு? ஆவின் ஊழியர்கள் மூன்று பேர் கடந்த மாதம் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்களே, எதற்காக? காண்ட்ராக்டர் வைத்தியநாதனை அ.தி.மு.க.விலேயிருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டாரே, எதற்காக? ஆவின் நிறுவனத்தில் எத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது? அதற்குப் பொறுப் பேற்க வேண்டியது தி.மு.கழக ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா? ஆவின் நிறுவனத்தை அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்றது யார் என்று இப்போது புரிகிறதா? இவ்வளவு ஊழல்களை முதுகிலே சுமந்து கொண்டு, தி.மு.க. ஆட்சியின் மீது குறை சொல்வதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?

மின்கட்டண உயர்வு

மின்கட்டண உயர்வு

பால் விலை உயர்வை அறிவிப்பதற்கு முன்பாகவே மின் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டு, அதற்கான திட்டவரைவினை மின் வாரியமும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஏற்கனவே அறிவித்து, அந்த மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள், மின் நுகர்வோர், பொறியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தரப்பினரும், மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப் பினைத் தெரிவித்து, அந்தச் செய்தியும் நாளேடுகளில் வந்துள்ளன.

எல்லோரும் எதிர்ப்பு

எல்லோரும் எதிர்ப்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தன்னிச்சையாக 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக மின் கட்டண உயர்வை அறிவித்தது. பொதுமக்களின் பிரதிநிதிகள், தமிழ்நாடு மின்சாரப் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி, அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியம் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் டி. கோபாலகிருஷ்ணன், தெற்கு ரயில்வேயின் முதன்மை எலெக்ட்ரிகல் பொறியாளர் பி.வி. சந்திரசேகர், பிரயாஸ் எனர்ஜி குழுமத்தின் ஆராய்ச்சியாளர் ஆன் ஜோசி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித் திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் எஸ். காந்தி பேசும்போது, மின் வாரியத்தின் வருவாய் அறிக்கை 450 பக்கங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அறிக்கை 25 பக்கங்கள்கூட இல்லை. சுருக்கப்பட்ட இந்த அறிக்கையிலிருந்து எப்படி மின்வாரியத்தின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமென்று கேட்டிருக்கிறார்.

கணக்கே கொடுப்பதில்லை

கணக்கே கொடுப்பதில்லை

அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர் நாகல்சாமி, "மின் வாரியம் ஆண்டுதோறும் சட்டப்படி வரவு, செலவுக் கணக்கை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர்கள் கொடுப்பதில்லை. மின் கட்டண உயர்வு தொடர்பாக அவர்கள் விண்ணப்பம் அளிக்கா விட்டால்கூட, எவ்வளவு செலவாயிற்று? எவ்வளவு வருமானம் வந்தது? என்பதையாவது எங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். மின் வாரியம் எங்களுக்குச் சில தகவல்களைத் தருகிறார்கள். ஆனால், அவற்றின் உண்மைத் தன்மையையும் அவை குறித்த சரியான தகவல்களையும் ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லை.

அனுமானத்தின்படி

அனுமானத்தின்படி

இந்த நிலையில், மின் வாரியத்தின் வருவாய், செலவு ஆகியவை தொடர்பாக எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அனுமானம் செய்து கட்டண உயர்வு தொடர்பாக அறிவிப்பு வழங்கப்பட்டது. பொது மக்கள் தங்களின் கருத்துகளை முழுமையாக எடுத்துச் சொல்லும் வகையில் தேவையான அனைத்து விவரங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தகவல்கள் மின்வாரியத் தால் வழங்கப்படவில்லை. எங்களது அனுமானத்தின் படி வெளியிடப்பட்டுள்ள விவரங்களை நான் ஆதரித்துப் பேசவில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்காத இடங்களிலிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50க்கு மேல் வாங்க வேண்டாமென்று உத்தரவிட்டுள்ளோம். அது நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் அதிக விலை கொடுத்து ஒரு யூனிட்டுக்கு ரூ. 12 முதல் 14 வரை கொடுத்து வாங்க வேண்டாம் என்று உத்தரவு கொடுத்துள்ளோம். அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

மின்வாரியத்தின் மீது எத்தனை புகார்கள்

மின்வாரியத்தின் மீது எத்தனை புகார்கள்

ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி மின்சாரம் வாங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளோம். ஆனால் அந்த உத்தரவுகளும் செயல்படுத்தப் படவில்லை" என்றெல்லாம் மின் வாரியத்தின் மீது, ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகச் சுமத்தியிருக் கிறார். இந்த நிதித் துஷ்பிரயோகம் சம்பந்தமான குற்றச் சாட்டுகளுக்கெல்லாம் அ.தி.மு.க. அரசு வெளிப்படையாகப் பதில் அளித்தாக வேண்டும். அந்தத் துறையின் அமைச்சர் இருக்கிறாரா? அல்லது அவருடைய முக்கிய "பணி"யை அல்லும் பகலும் ஆற்றிக் கொண்டிருக்கிறாரா?

வாய் மூடிக் கொண்டிருக்கலாமா....

வாய் மூடிக் கொண்டிருக்கலாமா....

தி.மு. கழக ஆட்சியில் மிகக் குறைந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, அ.தி.மு.க. தலைவி, அதனைக் கண்டித்து அறிக்கை விட்டாரே, தற்போது அவருடைய ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது பற்றி வாய் மூடிக் கொண்டிருக்க லாமா? ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தினார்களே, அது போதாதா? மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டுமா? தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 6,805 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வகையில், மின் கட்டணங்களை 15 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை உயர்த்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து, உத்தேச கட்டண உயர்வுப்பட்டியலையும் ஏடுகளிலே வெளியிட்ட போது, அது பற்றி நான் விரிவாக ஏற்கனவே விளக்கியிருந்தேன்.

உத்தேசித்துள்ள உயர்வு

உத்தேசித்துள்ள உயர்வு

தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு வீடுகளுக்கு எவ்வளவு என்றால், இரண்டு மாதங்களுக்கு, 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 4 என்பது, ரூ. 4.60 எனவும், 501 யூனிட்டுக்கு மேல் பயன் படுத்துவோருக்கு ஒரு யூனிட் ரூபாய் 5.75 என்பதி லிருந்து ரூபாய் 6.60 என்ற அளவுக்கும் உயர்த்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 500 யூனிட் வரை மட்டுமே தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்து வோருக்கு தமிழக அரசு மானியம் அளிப்பதில்லை.

கட்டாயம் ஏற்படும்

கட்டாயம் ஏற்படும்

இந்த நிலையில் சாதாரண நடுத்தர மக்கள் தற்போது வளர்ந்து வரும் வாழ்க்கை முறைச் சூழ்நிலையில் இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுக்குக் குறையாமல் பயன்படுத்துவார்கள். இப்போது உயர்த் தப்படும் மின் கட்டண உயர்வால் 600 யூனிட்டுக்கு - யூனிட் ஒன்றுக்கு 85 பைசா வீதம் - இதுவரை 3,450 ரூபாய் மட்டுமே கட்டணமாகச் செலுத்தி வந்தவர்கள், இனிமேல் கூடுதலாக 510 ரூபாய் சேர்த்து 3,960 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம்

அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம்

அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இவ்வாறு மின் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று தொடர்ந்து அறிவித்து, மக்களை கசக்கிப் பிழிவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக வந்த போது 1-12-2001 முதல் மின் கட்டணங்களை உயர்த்தினார். மீண்டும் 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் 15-3-2003 அன்று 1,398 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வுகளைச் செய்தார். அ.தி.மு.க. ஆட்சி என்றாலே, எல்லாத் தரப்பு எதிர்ப்புகளையும் அலட்சியப்படுத்தி, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என்று தொடர்ந்து உயர்த்திக் கொண் டிருப்பதே வழக்கமாகப் போய் விட்டது என்பதுதான் உண்மை.

பட்ட காலிலேயே படும்

பட்ட காலிலேயே படும்

அடுத்து, கடந்த பத்து நாட்களாக தமிழகத்திலே பெய்து வரும் கன மழையினால் எந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள் ளார்கள் என்பதை நேற்றைய தினமே விவரமாகத் தெரிவித்துள்ளேன். குறிப்பாக "பட்ட காலிலேயே படும்" என்பதைப் போல விவசாயப் பெருங்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இடுபொருள்களுக்காகக் கடன் வாங்கிச் சாகுபடி செய்த பயிர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதிலும், இதுவரை எந்தவொரு அமைச்சரும் வெள்ளப் பகுதிகளுக்கு வந்து பார்வையிடவில்லை. விவசாயிகளின் வேதனைக் கண்ணீர் துடைக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆறுதல் கூறவும் ஆள்வோர் இதுவரை முன்வரவில்லை.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு

இவற்றையெல்லாம் மனதிலே கொண்டுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் நவம்பர் திங்கள் 3ஆம் நாள் காலையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் கண்டன "ஆர்ப்பாட்ட - போர்ப்பாட்டு" நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தைச் சிறப்பாக நடத்தி, தமிழகத்தை ஆளுவோர் மீது தேவையான அழுத்தத்தை ஏற்படுத்திட இன்று முதல் உரிய முயற்சிகள் எடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளருடனும் கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நீ நினைக்கக் கூடாது

நீ நினைக்கக் கூடாது

பொருளாளர்தானே கேட்டுக் கொண்டார், பொதுச் செயலாளரும், தலைவரும் கேட்டுக் கொள்ளவில்லையே, தலைவர் அறிவிப்பு தானே செய்தார் என்று நீ நினைக்கக் கூடாது அல்லவா? அதற்காகத்தான் இந்தக் கடிதம். நம்முடைய இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்புகளைக் கண்டு அ.தி.மு.க. அரசு, இதிலே உள்ள நியாய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களாகவே முன்வந்து பாலின் விற்பனை விலையைக் குறைத்து, மின் கட்டணத்தையும் உயர்த்த மாட்டோம் என்று அறிவிப்பதோடு, விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையையும் அறிவிக்கக் கூடும். நடக்கிறதா என்று எதிர்பார்ப்போம்! அதற்காகத்தான் ஆர்ப்பாட்டத்திற்கு ஒருவார காலம் இடைவெளி கொடுத்திருக்கிறோம்!

நம்பிக்கை எனக்குண்டு

நம்பிக்கை எனக்குண்டு

அறிவிக்கிறார்களோ இல்லையோ, ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை நீ இன்றே முழு வீச்சில் தொடங்கியிருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு! அந்த நம்பிக்கைக் கருவூலம்தானே திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi has questioned the Aavin milk price and power tariff revision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X