For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவு: கருணாநிதி, ராமதாஸ், ஈவிகேஎஸ் இரங்கல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நிலக்கோட்டை காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

அனைத்துக் கட்சித் தலைவர்களாலும், அருமையாக "அக்கா" என்று அழைக்கப்பட்ட, நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாள் அவர்கள் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப் பட்டு குணம் அடையாத நிலையில் இன்று மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கட்சி மாச்சரியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, என்பாலும், என் குடும்பத்தினரிடமும் தனி அன்பு கொண்டு, சென்னை வரும்போதெல்லாம் என்னைச் சந்திப்பதையே ஒரு கடமையாகக் கொண்டு வாழ்ந்த வந்த அந்த மூதாட்டி மறைந்து விட்டார்.

இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டு, முதலில் சோழவந்தான் தொகுதியிலிருந்தும், பிறகு நிலக்கோட்டை தொகுதியிலிருந்தும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களின் நல்வாழ்வுக்காக பெரிதும் பாடுபட்டவர் அக்கா பொன்னம்மாள் அவர்கள்! தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் விருதினை, கழக ஆட்சியில் அவருக்கு வழங்கிப் பெருமைப்பட்டவன் நான். அவரது மறைவுக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் அந்தத் தொகுதி மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Karunanidhi, Ramadoss,evks condolence to former nilakottai mla ponnammal

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எளிமைக்கு பெயர் பெற்றவருமான நிலக்கோட்டை ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் மதுரையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நம்பிக்கையை பெற்ற தலைவர் பொன்னம்மாள் அவர்கள். சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நட்பு பாராட்டியவர். அதேநேரத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டத் தயங்காதவர். சட்டப்பேரவையில் காங்கிரஸ் மீது எவரேனும் அவதூறு பரப்பினால் அவர்களுடன் வாதம் புரிந்து உண்மையை நிலை நாட்டியவர்.

சோழவந்தான், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர் என்ற பெருமை பெற்றவர். உடல்நலக் குறைவால் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர் விரைவில் குணமடைந்து இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மரணம் அடைந்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சகோதரி ஏ.எஸ். பொன்னம்மாளின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

சிறுவயது முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து கட்சிப் பணியாற்றி, 9 சட்டமன்றத் தேர்தல்களில் நிலக்கோட்டை,சோழவந்தான்,பழனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்று அளப்பரிய தொண்டாற்றிய திருமதி.பொன்னம்மாள் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிக்க துயரமடைந்தேன்.

ஏறத்தாழ 35 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, சாதாரண ஏழை,எளிய மக்களின் குறைகளை அறிந்து பொழுதலர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள். 88 வயது நிரம்பிய அவர் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு.ராகுல்காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்து மேல் சிகிச்சை செய்ய எல்லா உதவிகளையும் காங்கிரஸ் கட்சி சார்பாக செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறியதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி.ஏ.எஸ்.பொன்னம்மாள் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து மக்களாலும் "அக்கா பொன்னம்மாள்" என்று அன்போடு அழைக்கப்பட்ட அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

English summary
Dmk leader karunanidhi and pmk founder ramadoss condolence to senior congress leader nilakottai mla ponnammal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X