For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாதாள சாக்கடையில் கிடந்த பெண் உடல்... போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஜெயலலித- குற்றம்சாட்டும் கருணநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகரில் சாக்கடைகள் கழிவுகளைத் தான் அள்ளிச் செல்லும் என்று நினைத்ததற்கு மாறாக, மனித உயிர்களையும் அவ்வப்போது அள்ளிச் செல்கின்றன என்பது இந்த ஆட்சியிலேதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்க, முதல்வர் ஜெயலலிதாவோ காணொலி காட்சி மூலம் எதையாவது திறந்து வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்து வருவதாகவும் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியுள்ளார்.

அடாத மழை என்றாலும், விடாமல் செய்தியாளர்களை சந்திக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவ்வப்போது கேள்வி பதில் வடிவிலான அறிக்கையை வெளியிடுவார். இம்முறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக அரசில் அராஜகம் தலைவிரித்தாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக காவல்துறை நடவடிக்கை

தமிழக காவல்துறை நடவடிக்கை

அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறை தாக்கியவர்களை விட்டு விட்டு, தாக்கப்பட்டவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கிறதே?

என்ன செய்வது? தாக்கியவர்கள் ஆளுங்கட்சிக்காரர்களாக இருந்தால் என்ன செய்வார்கள்? தே.மு.தி.க. சார்பில் கடந்த வாரம் சென்னை மேற்கு மாவட்ட தொண்டர்கள், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுக்கச் சென்றபோது, அவர்களை வழி மறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் தலைமையிலே உள்ள குழுவினர் கடுமையாகத் தாக்கி அனைத்து நாளேடுகளிலும் அந்தச் செய்தி பெரிதாக வந்தது.

ஆனால் இந்த அரசு பாதிக்கப்பட்ட தே.மு.தி.க. தொண்டர்கள் மீதே பொய் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுத்தது. அந்த அளவுக்கு அராஜகம் தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கின்றது! பாதிக்கப்பட்டவர்கள் மீதும், புகார் கொடுக்கப் போகிறவர்கள் மீதும் வழக்கு தொடுப்பதை அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கமாக்கி வழக்கு தொடுப்பதில் புதிய பாணியைக் கொண்டு வந்து, குற்ற வழக்கு நடைமுறைகளையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டார்கள்.

காணொலி காட்சி

காணொலி காட்சி

முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை எல்லாம்கூட காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைப்பதாகச் செய்தி வருகிறதே?

எதையாவது திறந்து வைத்தாக வேண்டுமே? என்ன செய்வது? ஏதாவது புகைப்படம் ஏடுகளில் தினந்தோறும் வந்தாக வேண்டுமே? அதனால்தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். என்ன செய்வது? அதிகாரிகள் என்ன செய்வார்கள்? அன்றாடம் முதலமைச்சர் எதையாவது திறந்து வைத்ததாக செய்தி வர வேண்டியிருக்கிறதே? சட்டசபை நடந்தாலாவது, 110வது விதியின் கீழ் எதையாவது எழுதி வைத்து படிக்கச் சொல்லலாம்.

முதல்வர் பெயரில் கல்வெட்டு

முதல்வர் பெயரில் கல்வெட்டு

இப்போது என்ன செய்வார்கள்? ஒரு கோடி ரூபாய் மதிப்பில்கூட அல்ல, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 உதவி வனப் பாதுகாவலர் குடியிருப்புகளைத் திறந்து வைத்திருக்கிறார் என்றால், ஒரு குடியிருப்பின் மதிப்பீடு 13 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்தான்.
அதைத் திறந்து வைத்து முதலமைச்சர் பெயரில் ஒரு கல்வெட்டு இருக்க வேண்டும். அதைப்போல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களையெல்லாம் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கத் தொடங்கி விட்டார். இதில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தலைமைச் செயலாளரும், ஆலோசகரும் "போட்டோ" வுக்கு "போஸ்" கொடுக்கத் தவறுவதில்லை. அவர்களுக்கும் இந்த ஆட்சியில் அதுதான் வேலை போலும். என்னமோ நடக்குது; ஒன்றுமே புரியலே. இதுக்கும் அரசாங்கம் என்றுதான் பெயர்.

தமிழக மீனவர்கள் சிறை

தமிழக மீனவர்கள் சிறை

இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களைச் சிறை பிடித்துச் சென்றிருக்கிறதே?.

தமிழக மீனவர்கள் இவ்வாறு தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்று சிறையிலே அடைக்கப்படுவதும், அந்தச் செய்தி வந்த மறுநாளே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதும் தொடர்கதையாகவே நீண்டு கொண்டிருக்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நின்றபாடில்லை. இருநாட்டு மீனவர்களின் சந்திப்பும் இரண்டு மூன்று முறை நடைபெற்றும் எவ்வித பயனையும் ஏற்படுத்தவில்லை.

இலங்கை பயணம்

இலங்கை பயணம்

இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர்சிங் 4 நாள் பயணமாக இலங்கை சென்றிருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு உடனடியாக அவருடன் தொடர்பு கொண்டு, இந்திய மீனவர்களின் தொடர்ந்து வரும் இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வண்ணம் உடனடியாக சிங்கள அரசுடன் பேசி, உரிய முடிவினை எடுத்திட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மத்திய குழுவின் வருகை

மத்திய குழுவின் வருகை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த மத்தியக் குழுவினர், பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கே செல்லவில்லையே?.

தமிழக அரசின் சார்பில் எந்தெந்த பகுதிகளைப் பார்வையிட வேண்டும் என்று தெரிவித்தார்களோ, அந்தப் பகுதிகளிலேதான் மத்திய குழுவினர் பார்வையிட்டதாகத் தெரிகிறது. அண்மையில் பெய்த பெருமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாகை, தூத்துக்குடி மாவட்டங்களும் அடங்கும். ஆனால் மத்தியக் குழுவினர் அந்த மாவட்டங்களுக்குச் செல்லவில்லை.

தென் மாவட்டங்கள் மீது கோபமா?

தென் மாவட்டங்கள் மீது கோபமா?

இதைப்பற்றி செய்தியாளர்கள் ஏன் அங்கே செல்லவில்லை என்று கேட்டபோது, தமிழக அரசு வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே எங்களது பயணம் அமைந்தது என்று பதிலளித்திருக்கிறார்கள். தென் மாவட்டங்கள் மீது தமிழக அரசுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. பிரதமரோ பேசியபோது, தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், மத்தியக் குழுவின் அறிக்கை வந்த பிறகு போதுமான நிதி எவ்வளவு என்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு அலட்சியம்

தமிழக அரசு அலட்சியம்

தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரண உதவிகளைப் பெறுவதில் அலட்சியமும் காலதாமதமும் செய்யாமல், உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, தேவைப்பட்டால் முதலமைச்சரே டெல்லி சென்று நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதிக நிதியைப் பெற்று, அதனை முறையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்திடுவதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

தேர்தலுக்கு முன்னோட்டமாக நிதி

தேர்தலுக்கு முன்னோட்டமாக நிதி

நிவாரண நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது; ஆங்காங்கே அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் அமைத்து, குழுவினர் முன்னிலையிலேயே நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஒவ்வொரு ஊராட்சியிலும் நிவாரண நிதி பெறுவோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஊராட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட வேண்டும்; நிவாரண நிதி வழங்குவதை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக ஆளுங்கட்சி கருதிச் செயல்படக்கூடாது.

வெள்ள நிவாரண நிதி

வெள்ள நிவாரண நிதி

வெள்ள நிவாரண நிதியாக தி.மு.க. அளித்த ஒரு கோடி ரூபாயைப் போலவே திரைப்படத்துறையைச் சார்ந்த நண்பர்கள் சிலரும் நிதி அளித்திருக்கிறார்களே?.

தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி கோரி ஒரு கோரிக்கை அறிக்கை முதலமைச்சர் பெயராலோ அல்லது தமிழக அரசின் பெயராலோ இதுவரை வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் இதற்குள் ஏராளமான நிதி வந்திருக்கும். ஆனால் என்ன காரணத்தாலோ இந்த அரசு அதிலே அக்கறை இல்லாமல் இருக்கிறது. வேறு எதில்தான் அக்கறையாக இருக்கிறது என்று என்னைத் திரும்பக் கேட்டு விடாதீர்கள்.

இளம்பெண் சடலம்

இளம்பெண் சடலம்

சென்னை மாநகரில் பாதாளச் சாக்கடையிலிருந்து இளம் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாகவும், அவரை யாராவது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை சாக்கடையில் வீசியிருப்பார்களா என்று விசாரணை நடந்து வருவதாகவும் செய்தி வந்துள்ளதே?

சென்னை மாநகரில் சாக்கடைகள் கழிவுகளைத் தான் அள்ளிச் செல்லும் என்று நினைத்த தற்கு மாறாக, மனித உயிர்களையும் அவ்வப்போது அள்ளிச் செல்கின்றன என்பது இந்த ஆட்சியிலேதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் செய்தியை அனைத்து நாளேடுகளும் வெளியிட்டுள்ளன. இருபது நாட்களாக ஒரு பெண்மணி காணப்படவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கூறப்பட்ட பிறகும், அவருடைய வீட்டிற்கு மிக அருகிலே உள்ள இந்தச் சாக்கடை புதைகுழியில் தேட வேண்டுமென்று யாரும் நினைக்கவில்லை. தற்போதுகூட, அந்தப் பகுதியிலே உள்ள மக்கள் சாக்கடை கழிவுகள் பொங்கி வழிவதாக குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறி, அதைப் பற்றிக் கவனிப்பதற்காக வந்தவர்கள் கழிவு களை அகற்றிட முனைந்த போது, அந்தப் பெண்ணின் உடல் வெளியே வந்துள்ளது.

அதிகாரிகள் மாற்றம்

அதிகாரிகள் மாற்றம்

ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரிகளில் சிலர் அ.தி.மு.க.வினராகவே மாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

தற்போது பெய்து வரும் மழை பற்றி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அந்த மாவட்ட ஆட்சியர், வி. சம்பத், ஐ.ஏ.எஸ்., "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் மழை அதிகமாகப் பெய்துள்ளது" என்று கூறியிருக்கிறார். சட்டசபையில் இருக்கும் அதிகாரி பற்றி அந்தத் துறையில் ஒரு பெண் அலுவலர் உயர் நீதிமன்றத்திலேயே புகார் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. அரசு அந்த அதிகாரிக்கு ஐந்தாண்டு காலத்திற்கு பதவி நீடிப்பு வழங்கியுள்ளது. வேளாண்மைத் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, மேல் அதிகாரிகளின் மிரட்டலுக்கு அஞ்சி தற்கொலையே செய்து கொண்ட சம்பவமும் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

English summary
Karunanidhi said on Tuesday his statement, Jayalalitha government was Video conference government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X