For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே மாதம் வெயில் என்றால்.. செப்டம்பரில் மழை ஊத்துமே... கருணாநிதி "நச்" கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: இவ்வாறு மாநாட்டுத் தேதியை ஒத்திவைக்கக் காரணம், மே மாதம் கடுமையான கோடை என்று சொல்லியிருக்கிறார்கள். மே மாதத்தில் கடுமையான கோடை என்பது தற்போதுதான் தெரிந்ததா? மே மாதத்தில் மாநாடு என்று முன்பு அறிவித்த போது, அந்த மாதத்தில் கடுமையான கோடை என்பது இந்த அரசினருக்குத் தெரியவில்லையா? செப்டம்பர் மாதத்திற்கு தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்களே, அந்த மாதத்தில் மழை கடுமையாக இருக்குமே; ஜெயலலிதா வழக்கில் அதற்குள் தீர்ப்பு வரவில்லை என்றால், செப்டம்பரில் மழை என்பதால் மீண்டும் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்படுமா? என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், ஜெயலலிதா இல்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இப்படி தள்ளி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மகிழ்ச்சியோடு தெரிவித்த ஓ.பி.எஸ்.

மகிழ்ச்சியோடு தெரிவித்த ஓ.பி.எஸ்.

13-2-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், அ.தி.மு.க. அரசின் சார்பாக நிதிநிலை அறிக்கையைப் படித்த இன்றைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அந்த அறிக்கையின் பக்கம் 31இல் "நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று படித்தார்.

ஆனால் என்ன ஆனது...

ஆனால் என்ன ஆனது...

இது சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் படித்த அறிவிப்பு! ஆனால் அமைச்சர் பேரவையில் படித்தபடி அக்டோபர் மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றதா என்றால் அதுதான் இல்லை. நிதிநிலை அறிக்கையிலே கூறப்பட்ட அறிவிப்புக்கே இந்தக் கதி என்றால், மற்ற அறிவிப்புகளுக்கு ஏதாவது பொருள் இருக்க முடியுமா? மாநாடு நடத்துவதாக அறிவித்து, ஐந்து மாதங்கள் கழிந்த பிறகும் நடத்தாமல் அதனை ஒத்தி வைப்பது என்பது எத்தகைய புத்திசாலித்தனம் என்பதை அ.தி.மு.க. ஆட்சியினர்தான் விளக்க வேண்டும்.

பூதாகர அறிவிப்பு

பூதாகர அறிவிப்பு

2012ஆம் ஆண்டிலேயே ஒரு முறை ஒரே நாளில் 12 கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகவும், அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கு மென்றும் பூதாகாரமாக அறிவிப்பெல்லாம் செய்து, ஏடுகளில் எல்லாம் பெரிதாகச் செய்தி வெளியிட்டார்கள். அந்த 12 கம்பெனிகளின் முதலீடும் தமிழகத்திற்கு வந்து அவர்கள் எல்லாம் தொழில்களைத் தொடங்கி விட்டார்களா, அந்தக் கம்பெனிகளில் 36 ஆயிரத்து 855 பேர் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்களா என்ற விவரங்களை யெல்லாம் அரசின் சார்பில் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் ஆட்சியினர் வாயே திறக்கவில்லை. நடந்திருந்தால் அல்லவா நாவசைத்துச் சொல்ல முடியும்!

இன்னும் தொடங்கப்படாத பணிகள்

இன்னும் தொடங்கப்படாத பணிகள்

மீண்டும் ஒரு முறை 5,081 கோடி ரூபாய்க்கு 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்கள் இன்னமும் உற்பத்தி பணியைத் துவக்கவில்லை என்றும் செய்தி வந்தது. மேலும் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 26,625 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 10,660 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்றும், இதனால் 10,022 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்கள்.

பதிலே இல்லை

பதிலே இல்லை

அதன் பிறகு 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று இன்றைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு அடுத்து ஓராண்டே உள்ள நிலையில், 2015 மே மாதத்தில் மாநாடு நடத்தி என்ன பயன் ஏற்படப் போகிறது என்று நான் அப்போதே கேட்டிருந்தேன். அதற்கும் பதிலளிக்கவில்லை.

வெட்கக் கேடு அல்லவா

வெட்கக் கேடு அல்லவா

மே மாதம் நடக்கவிருந்த இந்த மாநாட்டை யொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சியே அந்த முன்னோட்ட மாநாட்டில் நடைபெறவில்லை என்பது வெட்கக்கேடு அல்லவா?

பாய்ந்து விழுந்து என்ன பயன்

பாய்ந்து விழுந்து என்ன பயன்

தமிழக அரசின் தொழில் அமைச்சர் "குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச் சலுகையும் தருகிறோம் என்று சொல்லி, ஆந்திர மாநிலத்திற்கு அழைக்கிறார்கள். அதுபோல ஆந்திர முதல்வர் இந்த வழியாகச் சென்னைக்கு வந்து செல்லும்போதெல்லாம் நம் தொழிலதிபர்களை அழைத்து குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம் என்று பேசுவார்" என்று கூறியதிலிருந்தே தமிழகத்தின் நிலைமை என்ன என்று தெரிகிறதே; இவர்கள் ஆளுகின்ற ஒரு மாநிலத்திற்கு வேறொரு மாநில முதல் அமைச்சர் வந்து கூட்டம் போட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்றால், அதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டுமே தவிர, எங்கள் மீது பாய்ந்து விழுந்து என்ன பயன் என்று நான் கேட்டிருந்தேன்.

இங்கே ஏன் வருகிறார் கர்நாடக முதல்வர்

இங்கே ஏன் வருகிறார் கர்நாடக முதல்வர்

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க, கர்நாடக மாநில முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள ஒரு நகரில், தமிழகத்திலே உள்ள தொழில் அதிபர்களையெல்லாம் அழைத்து கர்நாடகாவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை சாதாரண ஒரு தொழில் அதிபர் கூடப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறியிருந்தேன்.

கற்பனையாக சொல்லவில்லை

கற்பனையாக சொல்லவில்லை

கர்நாடக முதலமைச்சர் கோவையில் கூட்டம் போட்டு தமிழக தொழில் முதலீட்டாளர்களை அழைக்கிறார் என்று நாங்கள் கற்பனையாகச் சொல்லிவிடவில்லை. தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கின்ற ஒரு ஏடு... அந்த இதழில் ஜனவரி 22ஆம் தேதி ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பே, "தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம் - கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு" என்பதாகும்.

கோவையில் பேசியபோது ஜெ. சொன்னது என்ன

கோவையில் பேசியபோது ஜெ. சொன்னது என்ன

முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப் பட்ட 33 நிறுவனங்களில், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலைத் தொடங்கியிருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்க முடியுமா? புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம். உண்மையில் தொழில் தொடங்கினால்தானே பயனளிக்கும்!

என்னவாயிற்று அது

என்னவாயிற்று அது

இந்த நிலையில் இப்போது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடனும், அதைப்போல தமிழகத்தில் மேலும் முதலீடு செய்வது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னருடனும் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு செய்தி வந்தது. அதுவும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

முன்னோட்ட மாநாடு வேறு

முன்னோட்ட மாநாடு வேறு

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மே மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து, அதற்காக முன்னோட்ட மாநாடு என்ற ஒன்றை நடத்தி, அதிலே முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் என்று விளம்பரம் செய்து, அதுவும் நடக்கவில்லை. இதற்கிடையே மே மாதம் நடைபெறவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக வெளி நாட்டினரைக் கவர்ந்திழுக்கச் செல்வதாக ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு, அதற்காக அதிகாரிகள் எல்லாம் வெளிநாடுகளுக்குப் படையெடுத்த செய்தியும் வந்தது.

ஒரு லட்சம் கோடி என்று சொல்லி விட்டு

ஒரு லட்சம் கோடி என்று சொல்லி விட்டு

தமிழக அரசின் தொழில் அமைச்சர் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் வர உள்ளதாகவும், அதன் மூலம் ஒரு இலட்சம் கோடி ரூபாய் தமிழகத்திலே முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் அவ்வாறு அறிவித்த ஒரு சில நாட்களிலேயே முதலீட்டாளர்கள் மாநாடு மேலும் தள்ளி வைக்கப்படுவதாக அரசினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த அளவுக்கு அமைச்சரவை ஒருங்கிணைப்பு பாருங்கள்

எந்த அளவுக்கு அமைச்சரவை ஒருங்கிணைப்பு பாருங்கள்

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளூர் தொழில் அதிபர்களை அழைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், தொழில் துறையின் சிறப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதாகவும், அதிலே அமைச்சர்கள் பேசிய போது மே மாதத்தில் மாநாடு நடைபெறும் என்றுதான் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே, மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு செப்டம்பரிலே நடைபெறும் என்று சென்னையில் அறிவிப்பு வந்துள்ளது. அமைச்சரவை எந்த அளவுக்கு ஒருங்கிணைப்போடு செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!

ஜெ. இல்லாததால் இந்த நிலை

ஜெ. இல்லாததால் இந்த நிலை

இந்த முதலீட்டாளர்கள் மாநாடு இவ்வாறு தள்ளி வைக்கக் கூடக் காரணம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகி, அவர் முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கிற போது இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் மாநாடு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தள்ளிப் போகும் தொடக்க விழாக்கள்

தள்ளிப் போகும் தொடக்க விழாக்கள்

இந்த மாநாடு மாத்திரமல்ல; தமிழக அரசின் வேறு சில திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு முடிந்த போதிலும், ஜெயலலிதா முதல் அமைச்சராக இல்லாத நேரத்தில், அந்தத் திட்டங்களைத் தொடங்கி வைத்து விடக் கூடாது என்பதற்காகவே திறப்பு விழாக்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டவை தொடங்கி வைக்கப்படாத காரணத்தால், அந்தப் பேருந்துகள் வீணாகக் கிடப்பதாகவும், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரும் இழப்பு என்று செய்திகள் வருகின்றன. அதைப் போலவே மெட்ரோ ரெயில் திட்டங்கள் போன்றவைகளின் திறப்பு விழாக்களும் நடைபெறவில்லை.

மே மாதம் வெயிலடிக்கும் என்று தெரியாதா

மே மாதம் வெயிலடிக்கும் என்று தெரியாதா

இவ்வாறு மாநாட்டுத் தேதியை ஒத்திவைக்கக் காரணம், மே மாதம் கடுமையான கோடை என்று சொல்லியிருக்கிறார்கள். மே மாதத்தில் கடுமையான கோடை என்பது தற்போதுதான் தெரிந்ததா? மே மாதத்தில் மாநாடு என்று முன்பு அறிவித்த போது, அந்த மாதத்தில் கடுமையான கோடை என்பது இந்த அரசினருக்குத் தெரியவில்லையா? செப்டம்பர் மாதத்திற்கு தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்களே, அந்த மாதத்தில் மழை கடுமையாக இருக்குமே; ஜெயலலிதா வழக்கில் அதற்குள் தீர்ப்பு வரவில்லை என்றால், செப்டம்பரில் மழை என்பதால் மீண்டும் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்படுமா?

காலதாமதம் முறைதானா

காலதாமதம் முறைதானா

நமது மாநிலத்தில் முதலீடுகளைச் செய்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாகவும், அந்த நாடுகளில் கருத்தரங்குகளை நடத்திய போது இது தெரிய வந்ததாகவும் அரசுத் தரப்பில் கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்ற போது, தமிழக அரசு அந்த மாநாட்டினை நடத்தாமல் காலதாமதம் செய்வது முறை தானா?

வாய்ச் சவடால் அரசு

வாய்ச் சவடால் அரசு

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் முடிந்த பிறகு, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கான தேதியினை மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கிறது என்றால் தொழில் வளர்ச்சியிலே அ.தி.மு.க. அரசுக்கு உள்ள அக்கறை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? ஆனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியிலே தங்களுக்குத்தான் பொறுப்பு என்பதைப் போல அ.தி.மு.க. ஆட்சியினர் பேசி வருகிறார்கள். "கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள், வானத்தைக் கீறி வைகுண்டத்திற்கு வழி காட்டுகிறோம்" என்று வாய்ச் சவடால் அடிப்பவர்களுக்கும், இந்த ஆட்சியினருக்கும் வேறுபாடு உண்டா என்ன? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has slammed TN govt for postponing the investors meet again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X