For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மஞ்சள் தேய்த்துக் குளித்த கிழவி.. பழைய நெனப்புடா பேராண்டி...!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவை முதல்வர் என்று அதிமுகவினர் தொடர்ந்து கூறி வருவது, பழைய நெனப்புடா பேராண்டி என்ற பழமொழியை நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

கேள்வி பதில் பாணி அறிக்கையில் அவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில்தான் இது.

கருணாநிதியின் அந்த கேள்வி பதில் பாமி அறிக்கை:

மஞ்சள் குளித்த கிழவி

மஞ்சள் குளித்த கிழவி

கேள்வி: திரையரங்குகளில் காட்டப்படும் அரசு செய்திப் படங்களில் "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா" என்றே கூறப்பட்டு வருகிறதே? அவர்களுடைய கட்சிப் பத்திரிகையிலும் "மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அறிவித்தபடி" என்றே செய்திகள் வருகின்றனவே?

கருணாநிதி: கிராமங்களிலேதான் சொல்வார்கள்; ஒரு கிழவி குளிக்கும் போது, முகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தாளாம். அவளுடைய பேரன் அதைப் பார்த்து வியந்து, என்ன பாட்டி மஞ்சள் குளிக்கிறாய் என்று கேட்டானாம். அதற்கு அந்தக் கிழவி "பழைய நினைப்புடா பேராண்டி" என்றாளாம். அதைப் போல அ.தி.மு.க.வினருக்கு இப்படி ஜெயலலிதாவை முதல் அமைச்சர் என்று அழைத்துக் கொள்வதிலே ஒரு திருப்தி இருக்கிறது போலும்! இருந்து விட்டுப் போகட்டுமே! எல்லாம் பழைய நினைப்புடா பேராண்டி!

விழுப்புரம் சிசு மரணம்

விழுப்புரம் சிசு மரணம்

கேள்வி: தர்மபுரி சம்பவம் நடைபெற்ற சில மாத இடைவெளிக்குப் பிறகு, விழுப்புரம் அரசு மருத்துவமனையிலே சிசுக்கள் மரணமடைந்த செய்தி வந்திருக்கிறதே?

கருணாநிதி: ஒரு சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி, சேலம் நகரங்களில் அரசு மருத்துவ மனைகளிலே புதிதாகப் பிறந்த சிசுக்களின் மரணம் பற்றிய செய்தி தொடர்கதையாக வந்தது. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 சிசுக்கள் இறந்ததாகச் செய்தி வந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதியன்று மேலும் 3 சிசுக்கள் இறந்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தத் துறையின் அமைச்சருக்கு அரசு நிகழ்ச்சிகளில் முன்னாள் முதலமைச்சரின் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கத்தான் நேரம் இருக்கிறதே தவிர, இந்தச் சிசுக்களின் மரணம் பற்றியெல்லாம் கவலை இருக்குமா என்ன?

ஜெயலலிதா படத்துக்கு எதிர்ப்பு

ஜெயலலிதா படத்துக்கு எதிர்ப்பு

கேள்வி: ஜெயலலிதாவின் படத்தை பல்கலைக் கழக விழாவில் பயன்படுத்தியதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே?

கருணாநிதி: ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற நிலையில் இருக்கிற போது, அரசு நிகழ்ச்சிகளில் அவருடைய படத்தை மிகப் பெரிய அளவில் வைக்கச் சொல்லி அமைச்சர்களே மிரட்டுகிறார்களாம். முதல் அமைச்சர் பொறுப்பிலே இருப்பவரே, நிதி நிலை அறிக்கையைப் படிக்க பேரவைக்கு வரும்போது எடுத்து வரும் பெட்டியின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி எடுத்து வருகிறார். மரியாதை என்பது இப்படியெல்லாம் பாசம் உள்ளதைப் போல காட்டிக் கொள்வதால் வந்துவிடுமா?

சாராய ஆட்சி

சாராய ஆட்சி

கேள்வி: மத்திய நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் அவர்கள், "தமிழகத்திலே உள்ள ஊழல், சாராய ஆட்சியை விரட்டப் போராட வேண்டும்" என்று பேசியிருக்கிறாரே?

கருணாநிதி: ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே அமைச்சர், தமிழக ஆட்சியைப் பாராட்டிப் பேசி ஆளுங்கட்சியை ஆதரிக்கும் நாளேடுகளில் அது பெரிதாக வெளியிடப்பட்டது. அதே அமைச்சர்தான் தற்போது தமிழகத்திலே ஊழல் அதிகமாக உள்ளது என்றும், சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும், அமைச்சர்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றும் பேசியிருக்கிறார்.

நனைந்து வீணாகிப் போன அரிசி மூட்டைகள்

நனைந்து வீணாகிப் போன அரிசி மூட்டைகள்

கேள்வி: செங்கல்பட்டு புகைவண்டி நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3,500 டன் நெல் மூட்டைகள் மழையிலே நனைந்து வீணாகி உள்ளதே?

கருணாநிதி: இதற்குக் காரணமான அதிகாரிகள், அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்குச் சொந்தமான அந்த நெல் மூட்டைகளைத் திறந்த வெளியிலே வைக்கச் சொன்னது யார் என்பதைப் பார்த்து, அவர்களிடமிருந்து இந்த இழப்புக்கான தொகையைப் பெற வேண்டும்.

டாக்டர் ராணி வழக்கு

டாக்டர் ராணி வழக்கு

கேள்வி: திருச்சியில் டாக்டர் ராணி, அமைச்சராக இருந்த ஒருவர் மீது கொடுத்த புகார் மனுவின் மீது குற்றப் பத்திரிகை மூன்றாண்டுகளுக்குப் பிறகு காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே?

கருணாநிதி: அ.தி.மு.க. ஆட்சியிலே குற்றச்சாட்டு எதிர்க்கட்சியினர் மீது என்றால், குற்றப் பத்திரிகை ஒரு சில நாட்களுக்குள்ளேயே தாக்கல் செய்யப்பட்டு விடும். குற்றச்சாட்டு ஆளுங்கட்சியினர் மீது என்றால், குற்றப்பத்திரிகை ஒரு சில மாதங்களுக்குப் பிறகு தாக்கல் ஆகும். அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது என்றால் ஆண்டுக் கணக்கிலேதான் ஆகும்.

சதாசிவம் ஆற்றிய பணிகள் கொஞ்சமா நஞ்சமா

சதாசிவம் ஆற்றிய பணிகள் கொஞ்சமா நஞ்சமா

கேள்வி: மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், இந்நாள் கேரள மாநிலக் கவர்னருமான சதாசிவம் நியமிக்கப்படவிருக்கிறாராமே?

கருணாநிதி: அவர் கடந்த காலத்தில் ஆற்றிய பணிகள் (?) கொஞ்சமா? அவைகளை இந்த நாடே நன்கறியுமே! உச்ச நீதிமன்றத்திலே தலைமை நீதிபதியாக இருந்த போது, அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளின் காரணமாகத்தான், கேரள மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டு தற்போது அந்தப் பதவியிலே இருந்து வருகிறார். சதாசிவம் அவர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற நேரத்தில், சென்னையில் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நீதிபதி பானுமதி அவர்கள் நீதிபதி சதாசிவம் அவர்களைப் பாராட்டியதை விட முதல் அமைச்சரைத்தான் "அம்மா" என்றும், "புரட்சித் தலைவி" என்றும் பாராட்டியிருந்தார்.

அமீத் ஷா வழக்கில்

அமீத் ஷா வழக்கில்

சதாசிவம் அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்ட போதே, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அவர்கள் மீதான வழக்கிலே விடுதலை செய்து தீர்ப்பு கொடுத்ததற்காகத்தான் அந்தப் பதவி வழங்கப்படுவதாக அப்போதே பேசப்பட்டது. அதே அடிப்படையில்தான், சதாசிவம் அவர்கள் ஆற்றிய சேவைக்கு இதெல்லாம் போதாது என்று கருதுகிற அரசு, தற்போது மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியிலே அவரை நியமிக்கக் கருதுகிறதோ என்னவோ. ஆனால் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சி. அகர்வாலா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவிலே, சதாசிவம் தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டத்திற்குப் புறம்பாக தமிழக அரசிடமிருந்து, தன் சம்பந்திக்கு (மகனின் மாமியாருக்கு) நிலம் வாங்கி, அதனை தன் மருமகள் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும், கோவையில் தன் மகனுக்காக மாருதி கார் முகவர் உரிமையைப் பெற்றுத் தந்திருப்பதாகவும், அதற்காக ஐந்து கோடி ரூபாய் டெபாசிட் தொகை செலுத்துவதில் இருந்தே அவருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருப்பதோடு, அரசியலில் இறங்கி விட்ட ஒருவர், அரசியல் கலப்பற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அப்பழுக்கற்ற தலைவராக எவ்வாறு செயலாற்ற முடியும் என்றெல்லாம் புகார் எழுப்பியிருக்கிறார். இந்தப் புகார் என்ன ஆகிறது என்று உச்சநீதிமன்றம்தான் கூற வேண்டும்!

சூப்பர் சலுகைகளை வழங்கும் நீதிமன்றங்கள்

சூப்பர் சலுகைகளை வழங்கும் நீதிமன்றங்கள்

கேள்வி: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சில நீதிமன்றங்களில் "சூப்பர்"சலுகைகளை துணிச்சலாக வழங்குகிறார்களே?

கருணாநிதி: ஒரு சில நீதிமன்றங்கள் அவ்வாறு சட்ட விதிமுறைகளை மீறி நடப்பதால், பா.ஜ.க. அரசுக்குத்தான் கெட்ட பெயர் வருகிறது. ஆட்சியாளர்கள் சொல்லித்தான் இப்படியெல்லாம் நடைபெறுகிறதோ என்று வழக்கறிஞர்கள் மத்தியிலேயே பேசப்படுகிறதாம். 15ஆம் தேதியன்றுதான் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாமா என்பது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி, அந்த வழக்கினை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆனால் மறுநாளே, அதாவது 16ஆம் தேதியன்றே 3 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஏப்ரல் 21 அன்றே விசாரிக்கும் என்ற செய்தி வெளி வந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் "பெரிய அமர்வுக்கு"பரிந்துரை செய்யப்பட்ட ஏராளமான மற்ற வழக்குகளிலே காட்டப்படாத அவசரம், இதிலே மட்டும் காட்டப்படுவதற்கு என்ன காரணம்?

அது மாத்திரமல்ல

அது மாத்திரமல்ல

அது மாத்திரமல்ல; சில நாட்களுக்கு முன்புதான் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது, "ஜெயலலிதா ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே சட்ட விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டார்" என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதோடு, அந்த அமைப்பின் சார்பில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, ஆயிரம் வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுப் புகார் மனு கொடுத்ததாகச் செய்தி வந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஜெயலலிதா மீதான ஜாமீன் மனுவினை விசாரிக்கக் கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் மக்கள் சந்தேகப்படுகின்ற அளவுக்கு உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி வழங்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே நீதி வழங்கப்படுவதாக எல்லோருக்கும் தோன்ற வேண்டும்.

வகேலா இடமாற்ற விவகாரம்

வகேலா இடமாற்ற விவகாரம்

கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா அவர்களின் திடீர் மாற்றம் கூட எப்படிப்பட்ட அய்யங்களை எழுப்பியிருக்கிறது என்று நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தேன். ஏனென்றால் இந்தச் சந்தேகம் நமக்கு மாத்திரமல்ல; "தீக்கதிர்" நாளேட்டில் இது பற்றி ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் சில முக்கியப் பகுதிகள்: நீதிபதி வகேலாவின் பணியிட மாற்றம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவதாக உள்ளது. அவரது பணி இட மாற்றத்திற்கு அரசியல் தலையீடு காரணமாக இருக்குமோ என்ற ஐயத்தை எளிதாகப் புறந்தள்ளி விட முடியாது. ஜெயலலிதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்துப் பேசியது மரியாதை சந்திப்பு என்று கூறப்பட்ட போதும், அதுகுறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செய்யப்பட்டது தவறானது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் வகேலா மாற்றப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது.

இன்னொரு முக்கியத் தகவல்

இன்னொரு முக்கியத் தகவல்

எனக்குக் கிடைத்த இன்னொரு முக்கியமான தகவலையும் தெரிவிக்கிறேன். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பவானி சிங் ஆஜரானது தொடர்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவு செய்யலாம் என்று 15ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட மறுநாளே, அதாவது 16ஆம் தேதியன்றே, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 21ஆம் தேதியன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தப்பட்ட வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு ஓராண்டு கடந்தும், இன்னும் அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படவில்லை.

அவசரம் அவசரமாக பணியாற்றிய

அவசரம் அவசரமாக பணியாற்றிய "அவர்"

அதைப் போலவே சுமார் முப்பதுக்கும் மேலான இதுபோன்ற வழக்குகளில் பெரிய அமர்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு, பல மாதங்கள் ஆகியும், பெரிய அமர்வு அமைக்கப்படாமல் அந்த வழக்குகள் எல்லாம் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஆனால் ஜெயலலிதா சம்மந்தப்பட்ட வழக்கில் மட்டும், அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே மின்னல் வேகத்தில் பெரிய அமர்வு ஏப்ரல் 21ஆம் தேதியன்று விசாரிக்குமென்று அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தப் பெரிய அமர்வு அமைக்கப்படுவது சம்பந்தமாக, முக்கியமான ஒருவரே அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்திலே பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து ஏற்பாடுகளைச் செய்தார் என்றும், ஜெயலலிதா வழக்கிலே இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டப்படுவது ஏன் என்றும், மூன்று நீதிபதிகள் யார் என்று தெரியாத நேரத்தில், அமர்வு 21ஆம் தேதி நடைபெறும் என்று எவ்வாறு அறிவிக்கப்படலாம் என்றும், இந்தச் சம்பவங்கள் எல்லாம் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தெரிந்துதான் நடைபெறுகின்றனவா என்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியிலே மிகப் பெரிதாக விவாதிக்கப்படுகிறதாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has expressed his views in various issues through a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X