For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை மதித்துப் போற்றும் ஜன நாயக ஆட்சி தமிழகத்திலே இல்லை

By Mathi
Google Oneindia Tamil News

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, மேகதாது பிரச்சினையில் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நோக்கத்தோடு, ஒன்றிணைந் திருக்கிறார்கள். அந்த மாநில முதலமைச்சர் தனக்கே எல்லாம் தெரியும், தனக்கு யாருடைய தயவும் தேவையில்லை என்று ஆணவமாக எண்ணாமல், அவ்வப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, மற்ற கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்கிறார். ஆனால், தமிழகத்திலோ, "அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்திடுக" என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தால், அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இங்குள்ள ஆட்சியினர் தயாராக இல்லை. பிரச்சினை என்றால் உடனே, முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவார்; சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தால் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவார்; இல்லையென்றால் நேரடியாகவே நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திடுவார். தன்னைச் சுற்றியே தமிழகம் இயங்க வேண்டும் என்றெண்ணிடும் முதலமைச்சர் இங்கே!

Karunanidhi urges to convene All Party meet for Cauvery row

தற்போது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. மற்றொரு போராட்டம் 30ஆம் தேதியன்று நடத்தப்படவுள்ளது. அந்தப் போராட்டத்தையொட்டி நடைபெறவுள்ள சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் வெற்றிகரமாக நடந்தேற கழகத் தோழர்களும், பொதுமக்களும் ஒத்துழைத்திட வேண்டுமென்று நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளேன். அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையாவது அழைத்து அரசின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினார்களா என்றால் அதுவும் இல்லை. மக்களை மதித்துப் போற்றும் ஜன நாயக ஆட்சி தமிழகத்திலே இல்லை; எல்லாம் சர்வாதிகாரத் தர்பார், தன் முனைப்பு!

கர்நாடக மாநிலத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அனைத்துக் கட்சிக் குழுவினருடன் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி அவர்களையும், மற்ற அமைச்சர்களையும் நேரடியாகச் சந்தித்து மேகதாது திட்டம் குறித்துப் பேசி யிருக்கிறார்கள். அதற்குப் பிறகாவது, இந்தப் பிரச்சினையிலே உண்மையான அக்கறை ஆளுங்கட்சிக்கு இருந்திருக்குமேயானால், தமிழகத்திலே உள்ள விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்குமேயானால், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று தமிழக அரசின் சார்பில் பிரதமரைச் சந்தித்திருக்க வேண்டாமா?

செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி களுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று நான் அறிக்கை விடுத்தேன். அதற்கான காசோலையைப் பெறக் கூட தமிழக அரசினர் எவ்வளவு அலட்சியமாக இருந்தார்கள் என்பதை தமிழகம் நன்கறியும். இன்னும் சொல்லப் போனால், பீகார் மாநில முதலமைச்சர் ஐந்து கோடி ரூபாய் அந்த மாநிலத்தின் சார்பாக நிவாரண நிதியை வழங்குவதாகவும், ஒடிசா மாநிலத்தின் சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்குவதாகவும் அறிவித்தார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்ய கர்நாடக அரசு தயாராக இருந்தும், அதற்காக அந்த அரசின் அதிகாரி தமிழக அரசின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அதைப் பெறுவதற்கு தமிழக அரசு இழுத்தடிப்பதாகவும் அப்போதே செய்திகள் வந்ததை மறந்திருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால், தமிழக மக்களின் எந்தப் பிரச்சினைக்காக வாவது தமிழக ஆளுங்கட்சி, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை அல்லது பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்தினைப் கேட்டறிந்திருக்கிறதா?

மாநிலத்தைப் பாதித்திடும் மிக முக்கியப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளையும், எல்லா பிரிவு மக்களையும் அரவணைத்து பொதுக் கருத்து - பொது நோக்கம் - பொதுப் பாதை உருவாக்கத் தவறிவிட்ட, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான இவர்களின் தான்தோன்றித்தனமான நடைமுறைகள் பற்றி நன்கு அறிந்த அண்டை மாநில மக்கள் மேகதாதுவில் அணை கட்டுவோம்,

காவிரியில் தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடகமும், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவோம் என்று ஆந்திராவும், சிறுவாணியில் அணை கட்டுவோம் என்று கேரளாவும் கூறுகிறார்கள். மொத்தத்தில் பாழ்பட்டு வருவது தமிழகமும், பாதிக்கப்படுவது தமிழ் மக்களும்தான்!

ஆளும் அ.தி.மு.க. வினரோ எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்று, எல்லாவற்றையும் அலட்சியப் படுத்தி ஒதுக்கி விட்டு, தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே நேரத்தையும், நினைப்பையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது, அண்ணா வழியில் "ஏ, தாழ்ந்த தமிழகமே!" என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has urged that TN govt should convene the All Party meet for Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X