For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்து மறைமுக வரி வருவாயும் மாநிலங்களுக்கே.. பட்ஜெட்டில் தமிழக அரசின் "மாநில சுயாட்சி" குரல்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வருவாய்ப் பற்றாக்குறையால் மாநிலங்கள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தவிர்க்க மத்திய அரசு நேரடி வரி வருவாயை மட்டும் தனது அதிகார வரம்பில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து மறைமுக வரி வருவாயினையும் மாநிலங்களுக்கே வழங்கிட வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்று பட்ஜெட் அறிக்கையில் மாநில சுயாட்சிக்கான குரலை ஒலித்திருக்கிறது தமிழக அரசு.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு.

Leading Welfare State Gets Less Funds From Delhi, Rebels

தற்போது மத்திய அரசுக்கு எதிராக நிதி பகிர்வு விவகாரத்தில் புரட்சிக் குரல் எழுப்பியிருக்கிறது தமிழகம் என www.indiaspend.com இணையதளத்தின் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.indiaspend.com இணையதள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக சட்டசபையில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று முன் தினம் தாக்கல் செய்த முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப்பகிர்வு அளவை 32%-ல் இருந்து 42% ஆக உயர்த்தி வழங்கியுள்ளதை வரவேற்கிறோம்.

எனினும், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மொத்த நிதியின் அளவில் எந்த மாற்றமும் இல்லை. 2011-2012 ஆம் ஆண்டில் 53 சதவீதமாக இருந்த இந்த நிதியளவு தற்போது 49 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையும் இரண்டு விதமான நடவடிக்கைகளால் இது 45% கூட எட்ட முடியாதபடி செய்துள்ளது.

முதலாவதாக சொத்துவரி போன்ற வரிகளை, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தேவையில்லாத மேல்வரி (CESS) மற்றும் தலமேல்வரியாக (SURCHARGE) மாற்றியுள்ளது. இரண்டாவதாக, மாநிலங்கள் மூலமாக நிறைவேற்றப்படும் மத்தியத் திட்டங்களுக்கான நிதியை மத்திய நிதிநிலை அறிக்கை கணிசமாகக் குறைத்துள்ளது. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டம், சுற்றுலா கட்டமைப்பு மேம்பாடு, ஊராட்சிகள் வலிமைப்படுத்துதல் திட்டம், பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி மற்றும் உணவு பதப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் உள்ளிட்ட 8 மத்திய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

'வழக்கமான மத்திய உதவி' (Normal Central Assistance) ‘மாநிலத் திட்டங்களுக்கான சிறப்பு மத்திய உதவி' ஆகியவையும் வருங்காலத்தில் கிடைக்காது.

இதனால் 2014-2015 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடுகளின் அடிப்படையில், நமது மாநிலத்திற்கு வருடத்திற்கு ரூபாய் 1,137 கோடி அளவிற்கு வருவாய் வரவில் இழப்பு ஏற்படும்.

மேலும், மாநிலங்கள் இதுவரை பெற்றுவந்த குடிசைப் பகுதி மேம்பாடு, பாரம்பரிய நீர்நிலைகளைப் பாதுகாத்தல், கடலோரப் பாதுகாப்பு, பழம்பெரும் கட்டடங்களை புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான மானியம் போன்ற மாநிலங்களின் குறிப்பிட்ட தேவைக்கான மானிய நிதியுதவிகளும் (State Special Grant) சாலைகளைப் பராமரிப்பதற்கான மானியங்களும் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கூறிய திட்டங்களுக்காக கடந்த நிதி ஆணையத்தின் ஐந்தாண்டுக் காலத்தில் 4,669 கோடி ரூபாய் நிதியை நமது மாநிலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது தவிர தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், நிலைக்கத்தக்க வேளாண்மைக்கான வளர்ச்சித் திட்டம், தேசிய ஊரகக் குடிநீர்த் திட்டம், தேசிய சுகாதாரத் திட்டம், தேசிய நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2014-2015 ஆம் ஆண்டை விட வரும் 2015-2016 ஆம் நிதியாண்டில் 21,116 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான நிதிப் பங்கீட்டு முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு முனைந்திருப்பதால், மாநிலங்கள் கூடுதல் நிதிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

பகிர்ந்தளிக்கத்தக்க பொதுவான வரித் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவந்த நிதிப் பகிர்வை 4.969 சதவீதத்திலிருந்து 4.023 சதவீதமாகவும் சேவை வரித் தொகுப்பிலிருந்து கிடைத்து வந்த பங்கான 5.047 சதவீதத்தை 4.104 சதவீதமாகவும் பெருமளவு குறைத்திருப்பதன் மூலம், பதினான்காவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு பெரும் அநீதியை இழைத்துள்ளது. இதனால், தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்கள் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொள்வதுடன், தங்களின் நடைமுறை நிர்வாகத் தேவைகளுக்குக்கூட என்றென்றும் மத்திய அரசினைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.

மத்திய அரசு முன்வைக்கும் இத்தகைய கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவம், மாநிலங்களும், மத்திய அரசும் சமச்சீரற்ற வருவாய் ஆதாரங்களைக் கொண்டுள்ள நிலையில் அவற்றை சமமான பங்குதாரர்களாகக் கருதுவது வியப்பை அளிக்கிறது.

எனவே, வருவாய்ப் பற்றாக்குறையால் அத்தகைய மாநிலங்கள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தவிர்க்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து அடையவும் மத்திய அரசு நேரடி வரி வருவாயை மட்டும் தனது அதிகார வரம்பில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து மறைமுக வரி வருவாயினையும் மாநிலங்களுக்கே வழங்கிட வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்றே கருதுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் டாப் 10 மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதிப் பகிர்வு விவரம்:

உத்தரப்பிரதேசம்- 18%; பீகார் 9.7%;

மத்திய பிரதேசம் 7.5%;

மேற்கு வங்கம் 7.3%;

மகாராஷ்டிரா 5.5%;

ராஜஸ்தான் 5.5%;

கர்நாடகா 4.7%;

ஒடிஷா 4.6%;

ஆந்திரா 4.3%;

தமிழகம் 4%.

அதாவது மத்திய அரசு தமது நிதியில் தமிழகத்துக்கு 4% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

சேவை வரியில் மாநிலங்களுக்கான பகிர்வு விவரம்:

உத்தரப்பிரதேசம்- 18.2%;

பீகார் 9.8%;

மத்திய பிரதேசம் 7.7%;

மேற்கு வங்கம் 7.4%;

மகாராஷ்டிரா 5.7%;

ராஜஸ்தான் 5.6%;

கர்நாடகா 4.8%;

ஒடிஷா 4.7%;

ஆந்திரா 4.4%;

தமிழகம் 4.1%.

தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய வரியும் விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் செல்போன்கள், எல்.இ.டி. விளக்குகள் போன்றவற்றின் மீதான மதிப்பு கூட்டு வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை என்பது 30% அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2015-16 நிதி ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 681 கோடியே 33 லட்சமாகவும், மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 297 கோடியே 35 லட்சமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன.

வருவாய் பற்றாக்குறை ரூ.4 ஆயிரத்து 616 கோடியாக இருக்கும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அனைத்து மறைமுக வரி வருவாய்களையும் மாநிலங்களுக்கே வழங்கும் காலம் கனிந்துவிட்டதாக புரட்சிக் குரலை வெளிப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

English summary
Tamil Nadu-which is in an election year and runs India's most extensive welfare state-has rebelled against the devolution of financial power to the states, part of the decentralisation process put into motion by New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X