For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகள் இன்றே கடைசி: அக்.25 முதல் தனி அதிகாரிகள் நிர்வாகம்- அரசாணை வெளியீடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகத்தில் தடை உள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, செவ்வாய்கிழமை முதல் தனி அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புகளை ஏற்க உள்ளனர். இதற்கான அரசாணை இன்று வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு போன், கார், தனி அலுவலகம் வழங்கப்பட்டு வந்தது. பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால் போன், கார் உள்ளிட்டவற்றை இன்று மாலைக்குள் திரும்பி ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த தலைவர்கள், உறுப்பினர்கள் வரும் வரை யாரும் நுழையாத வகையில் அவர்களது அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,18,974 ஊரக உள்ளாட்சி மற்றும் 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று கொண்டனர். அவர்களின் ஐந்தாண்டு பதவி காலம் இன்றுடன் முடிகிறது.

உள்ளாட்சித் தேர்தல் ரத்து

உள்ளாட்சித் தேர்தல் ரத்து

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் அவசர கோலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. மேல்முறையீடு வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் தடை 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

தனி அதிகாரிகள் நியமனம்

தனி அதிகாரிகள் நியமனம்

அக்டோபர் 24ம் தேதியான இன்றுடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிகிறது. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்களின் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, அதை தவிர்க்க தனி அதிகாரியை நியமிக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை கூடி விவாதித்தது. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஊராட்சி மற்றும் நகராட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டம் பிறப்பித்தார். இந்த அவசர சட்டம் கடந்த 17ம் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. மக்கள் பிரநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, இன்று மாலைக்குள் தனி அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தனி அதிகாரிகள் அக்டோபர் 25ம் தேதி முதல் உள்ளாட்சி நிர்வாக பொறுப்பை ஏற்க உள்ளனர்.

டிசம்பர் 31 வரை நிர்வாகம்

டிசம்பர் 31 வரை நிர்வாகம்

சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கு அந்தந்த மாநகராட்சி கமிஷனர், 124 நகராட்சிகளும் அந்தந்த நகராட்சி கமிஷனர், 528 பேரூராட்சிகள் செயல் அலுவலர் (இஓ), 388 ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், 31 மாவட்ட ஊராட்சிகள் அந்தந்த மாவட்ட ஊராட்சி செயலர், 12,524 கிராம ஊராட்சிகள் அரசால் நியமிக்கப்படும் திட்ட அலுவலர்கள் ஆகியோர் நிர்வகிப்பார்கள். உள்ளாட்சி பணிகளை நிர்வகிக்கும் தனி அதிகாரிகளின் பொறுப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை அல்லது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாள் வரை இருக்கும்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு நியமனம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு நியமனம்

தனி அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு செவ்வாய்கிழமையில் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறும் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் அரசு அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும். இவர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை அல்லது தேர்தல் நடைபெறும் நாள் வரை பதவியில் இருப்பார்கள். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், 20 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகளின் கீழ் செயல்பட உள்ளன குறிப்பிடத்தக்கது.

English summary
Special officers would exercise the powers and discharge the functions of the elected representatives until the day on which the first meetings of these representatives are held after ordinary elections to the urban and rural local bodies or up to December 31 this year, whichever is earlier. The Madras High Court which had set aside the election notification of the Tamil Nadu State Election Commission and directed to appoint special officers till newly elected representatives take over after fresh elections are held.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X