சொகுசு கார்களை பார்த்தாலே பயந்து நடுங்கும் சென்னைவாசிகள்.. ஏன் இந்த விபரீதங்கள்?

பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் சொகுசு கார்களில் சொகுசாக பயணம் மேற்கொள்ளலாம் என்றால் சொர்க்கத்துக்கு செல்லும் நிலை ஏற்படுகிறதே என்று நடுக்கத்தில் உள்ளனர் பணம் படைத்த இளசுகள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் சொகுசு கார்களால் விபத்து அதிகரித்து உயிரை இழக்கும் அபாயங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அக்கார்களை வைத்துள்ள இளசுகள் பயங்கர நடுக்கத்தில் உள்ளனர்.

கார்கள் வைத்திருந்தாலே நல்ல மரியாதை கிடைக்கும் இந்த காலகட்டத்தில் சொகுசு கார்களை வைத்திருப்பதால் அவர்கள் தனித்து பார்க்கப்படுகின்றனர். ஆடி, ரோல்ஸ், ராய்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய கார்கள் தற்போது பணம் படைத்தவர்களிடமும், சினிமா பிரபலங்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

பல லட்சங்களைத் தொடும் இந்த கார்களில் கெத்தாக வலம் வரும் தொழிலதிபர்களின் மகன், மகள், சினிமா துறையினர் ஆகியோர் தங்கள் வீக் என்ட் பார்ட்டிகளுக்கு செல்கின்றனர்.

குடித்து கும்மாளம்

இத்தகையோர் கலந்து கொள்ளும் ஹோட்டல்கள் பெரும்பாலும் இசிஆர் சாலைகளில் உள்ளன. அங்கு இரவு நேர பார்ட்டிகளில் கண்ணு மண்ணு தெரியாமல் குடித்து கும்மாளம் போட்டு விட்டு நிற்கக் கூட முடியாத நிலையில் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆடி கார் ஐஸ்வர்யா

திருவான்மியூர் காமராஜர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் அதிகாலை நேரத்தில் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பஸ் நிறுத்தம் அருகே, சாலையை கடக்க முயன்றார். அப்போது, டைடல் பார்க்கில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச்சென்ற ஆடி கார், முனுசாமி மீது மோதியது. இந்த விபத்தில், அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விசாரணையில் செல்வந்தரின் மகளான ஐஸ்வர்யா குடிபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது.

அருண்விஜய்

இதேபோல் நடிகை ராதிகாவின் மகள் திருமண விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இரவு பார்ட்டியில் குடித்து ஆட்டம் விட்டு சொகுசு காரில் வீடு திரும்பிய நடிகர் அருண் விஜய், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீஸாரின் வாகனத்தின் மீது மோதினார்.

விஜயகுமார் தலையிட்டு..

அருண் விஜய்யை போலீஸார் கைது செய்தனர். இதையறிந்த அவரது தந்தை நடிகர் விஜயகுமார் உடனடியாக காவல் நிலையம் விரைந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து நடிகர் அருண் விஜய், வீடு திரும்பினார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, ஆழ்வார்பேட்டை அருகே காரில் வந்து கொண்டிருந்த போது அங்கு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மணி காயமடைந்துள்ளார். பின்னர் நடிகர் தனுஷ் சமரசம் பேசி பணத்தை செட்டில் செய்தார். அப்போதும் சௌந்தர்யா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

10 சொகுசு கார்கள்

சென்னை இசிஆர் சாலையில் 150 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த 10 சொகுசு கார்கள் கானத்தூர் காவல் நிலைய போலீஸார் மடக்கி பிடிக்கப்பட்டன. செல்வந்தர்களின் கார்கள் என தெரிந்ததும் காதும் காதும் வைத்ததுபோல் போலீஸார் காரை விடுவித்தனர்.

அஸ்வின் சுந்தர் கார்

மிகச் சிறந்த கார் பந்தய வீரரான அஸ்வின் சுந்தர் நேற்று இரவு பிஎம்டபிள்யூ காரில் மனைவியுடன் சென்றபோது மரத்தில் கார் மோதியதில் கீப்பிடித்து உயிர் இழந்தார். அஸ்வினுக்கு குடிப்பழக்கம் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளதால் போலீஸார் வேறு கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

எமனாகும் சொகுசு கார்கள்

பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் போதிலும் இந்த வகையான கார்கள் விபத்தில் சிக்குவதால் அதை வைத்திருக்கும் இளசுகள் பீதியில் உறைந்துள்ளனர். அதேபோல் இதுபோன்ற விபத்துகளை அறியும் சாமானிய மக்களும் எதிரே கார் வந்தாலே அலறுகின்றனர்.

என்னதான் தீர்வு

யானைக்கும் அடிசறுக்கும் என்பதை போல இதுபோன்ற அதிகம் சீறி பாயும் கார்களின் வேகத்தை அதை ஓட்டுநரே குறைத்து கொள்ள வேண்டும். குடித்து வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் குடித்து விட்டு கார் ஓட்டும் பணமுதலைகளிடம் சம்திங் பெறாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கினால் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு காணமுடியும்.

 

English summary
Luxurious cars make terror ride in Chennai.
Please Wait while comments are loading...