For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொய் வழக்கு போடுவதை ஆட்சியின் கடைசி கட்டத்திலாவது ஜெ., நிறுத்த வேண்டும்: ஸ்டாலின் கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தன்னைப் புகழவேண்டும் என்பதற்காக தன் கட்சிக்காரர்களை சட்டமீறலுக்கு உட்படுத்தும் ஜெயலலிதா, சட்டத்தை மதிப்போர் மீது பொய் வழக்கு போடுவதை, தனது ஆட்சியின் இந்த கடைசி கட்டத்திலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுக்குழுவிற்கு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று சாலைகளின் இருபுறமும் வைக்கப்பட்ட விளம்பரத் தட்டிகளை அகற்றிய மூன்று பேரை அதிமுக அரசு அநியாயமாக கைது செய்தது. அதுவும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதிமுகவினரின் விளம்பரத் தட்டிகள் எப்போது சென்னை மாநகரக் காவல்துறைக்கு பொதுச் சொத்துக்களானது என்பது விந்தையாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.

M.K.stalin facebook statement

தனது கட்சியின் பொதுக்குழுவுக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்று அதிமுகவினர் வைத்த அடுக்கடுக்கான பேனர்களால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நடைபாதைகளில் கூட மக்கள் நடக்க முடியாத அளவிற்கு பொதுக்குழுவிற்கு முதல் நாளில் இருந்து சாலையோரங்களை அதிமுக பேனர்கள் மயமாக்கி சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகளை எல்லாம் திணறடித்தார்கள். அதிமுக பேனர்கள் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருந்ததால் மக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால் சாலைகளும் பேனர்களால் மறிக்கப்பட்டு, பல இடங்களில் இரு சக்கர வாகனங்கள் பேனர்களிலேயே மோதும் ஆபத்தான நிலை உருவானது. அவசரத்திற்கு கூட ஓரிடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டார்கள். உரிய அனுமதியின்றி அளவுக்கதிகமாக வைக்கப்பட்ட இந்த பேனர்களை அகற்றவோ பொதுமக்கள் இயல்பாகத் தங்கள் பயணத்தை மேற்கொள்ளவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, நடைபாதைகளையும், சாலைகளையும் மறித்து அதிமுகவினர் வைத்த சட்டவிரோத பேனர்களை அகற்றி பொதுச் சொத்துக்களை காப்பாற்ற முயன்றவர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளது அதிமுக அரசு. அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை மனிதாபிமானமின்றி தாக்கியும் இருக்கிறார்கள் என்பது அதிமுக ஆட்சியில் காவல்துறை எப்படி ஏவல் துறையாக மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது.

ஏற்கனவே "மதுவிலக்கு பற்றி பாடல்" பாடிய கோவனைக் கைது செய்து உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு மூக்குடைபட்டது. ஆனாலும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையை அதிமுக அரசு கைவிட்டதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர்களை பொதுக்குழு முடிந்தும் அகற்றவில்லை.

அது மட்டுமின்றி அந்த சட்டவிரோத பேனர்களை அகற்ற பொதுமக்களே முன் வந்த போதும், அவர்கள் மீது "பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக" வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள். அதிமுக அரசின் மகுடிக்கு ஆட்டம் போடும் நிலைக்கு சென்னை மாநகர காவல்துறை வந்திருப்பது, காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் அளித்த சுதந்திரத்திற்கே சவாலாக அமைந்துள்ளது.

மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்ற அதிமுக அரசு இப்போது மக்கள் நலனையே புறக்கணித்து விட்டு, இது போன்ற அராஜக நடவடிக்கைகளிலும், அடக்குமுறைகளிலும் ஈடுபடுவது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. துன்பப்படும் மக்கள் பக்கம் நின்று நியாயம் கேட்டதற்காக, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த அக்தர் அகமது, ஜெயராமன், சந்திரமோகன் ஆகிய மூவரையும் பொய் வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்த இந்த அரசு இன்று வரை அவர்களை விடுவிக்கவில்லை. ஜெயலலிதா அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தன்னைப் புகழவேண்டும் என்பதற்காக தன் கட்சிக்காரர்களை சட்டமீறலுக்கு உட்படுத்தும் ஜெயலலிதா, சட்டத்தை மதிப்போர் மீது பொய் வழக்கு போடுவதை, தனது ஆட்சியின் இந்த கடைசி கட்டத்திலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோருகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK treasurer MK Stalin Condemned to tn cm jayalalitha should stop putting the lie cases for social activities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X