விவசாயிகள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை... ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் : தமிழக மக்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடும் கதிராமங்கலம் போராட்டக் குழுவினரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக செயல் தலைவர் நேரில் சந்தித்துள்ளார்.

M.K.Stalin met Kathiramangalam supporters

விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்கும் எண்ணெய்க்கிணறு அமைக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஸ்டாலினிடம் கதிராமங்கலம் கிராம மக்கள் கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது:

கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசிக்கு அதிமுக ஆட்சியில் தான் குத்தகை உரிமை வழங்கப்பட்டுள்ளது. சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தோம் அதனை உடனடியாக எடுக்காமல், பல முறை அழுத்தம் கொடுத்த பிறகு எடுத்தார்கள். அப்போது எம்எல்ஏ செழியன் இந்த பிரச்னைகள் குறித்து எடுத்துச் சொல்லியுள்ளார். நானும் செல்லியிருக்கிறேன், குத்தகை உரிமையை அதிமுக வழங்கும் முன் இந்தப் பகுதி மக்களின் கருத்துகளையும் விவசாயிகளின் ஆலோசனையையும் கேட்டிருக்க வேண்டும். அதன் பின்னர் குத்தகை அளித்திருக்க வேண்டும், ஆனால் அப்படி செய்யவில்லை.

இதனால் குழாய் வெடித்து விவசாய நிலங்கள் அழியும் நிலைக்கு வந்துள்ளன. இதனைக் கண்டித்து 19.5.2017 முதல் நீங்கள் போராடி வருகிறார்கள். ஆனால் ஆளும் கட்சி காவல்துறையை வைத்து அடக்குமுறை செய்திருக்கிறது. தங்களின் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பலரும் போராடி வருகின்றனர்.

அதிமுக அரசு இந்தச்சூழலை எப்படி கையாண்டிருக்க வேண்டும், முதல்வர் இங்கு வந்திருக்க வேண்டும் அல்லது அமைச்சர்கள் வந்து பேசி இருக்க வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற டெல்லியில் அய்யாகண்ணு தலைமையிலான போராட்டத்தில் அரை நிர்வாணப் போராட்டம், முழு நிர்வாணப் போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.

பிரதமர் விவசாயிகளை அழைத்து பேசியிருக்க வேண்டும், கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்காவிட்டாலும் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்தியிருக்க வேண்டும்.

M.K.Stalin met Kathiramangalam supporters

பெண்கள் போராடுவது ஃபேஷனாகிவிட்டது என்று சொன்ன போது எதிர்ப்புக் குரல் கொடுத்த பின்னர் முதல்வர் அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றார். போராட்டத்தை நடத்த எல்லோருக்கும் உரிமை உள்ளது. கதிராமங்கலம் திட்டம் திமுக காலத்தில் போடப்பட்டதாகச் சொல்கிறார்கள், திமுகவின் எத்தையோ திட்டங்களை முடக்கிய அதிமுக இந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கலாமே. திமுக ஆட்சியில் கதிராமங்கலத்தில் ஆய்வு செய்ய தான் அனுமதி அளித்தோம், அதிமுகதான் ஓஎன்ஜிசிக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.

மத்திய அரசு சொல்வதை அப்படியே அடிபணிந்து ஏற்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது, அதனால் தான் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள். நிச்சயம் கதிராமங்கலம் மக்களின் போராட்டம் ஓரிரு நாளில் வெற்றி பெறும். கைது செய்து சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Gandhi's Rare Portrait to be Auctioned in UK-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
DMK working president M.K.Stalin met Kathiramangalam portestors and hold his support.
Please Wait while comments are loading...