For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழை சொல்லிக் கொடுக்காமல் உலகத் தமிழ் மாநாடு... செம்மொழி அந்தஸ்து எதுக்கு? உயர்நீதிமன்றம் காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாரம்பரியமிக்க தமிழை இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்காமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், செம்மொழி தமிழ் என்று கூறிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்படப்போகிறது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.லட்சுமிநாராயணன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ் தெரியாத பிற மாநில மக்களுக்கும், வெளிநாட்டவருக்கும் தொலைதூர கல்வி மூலம் தமிழ் மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2013ம் ஆண்டு முதல் பல கோரிக்கை மனுக்களை தமிழக அரசுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன் (தற்போது ஆந்திரா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றலாகி உள்ளார்), என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்து தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பின் நகல் அண்மையில் வெளியானது.

மாநாடுகளால் என்ன பயன்?

மாநாடுகளால் என்ன பயன்?

அத்தீர்ப்பில் நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் கூறியிருப்பதாவது: அடுத்த தலைமுறையினருக்கு தமிழை எடுத்துச் செல்லாமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், தமிழ் செம்மொழி என்று சொல்லிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்பட போகிறது? ஆதி காலம் முதல் வழக்கத்தில் இருந்து வரும் தமிழுக்கு நீண்ட பாரம்பரியமும், இலக்கண இலக்கியமும் உண்டு.

தமிழ் பிராமி எழுத்துகள்

தமிழ் பிராமி எழுத்துகள்

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கி.மு. 1-ம் நூற்றாண்டை சேர்ந்தது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் ஆதிச்சநல்லூரில் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. சமண மலையில், கி.மு. 2-ம் நூற்றாண்டு தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன. பாண்டிய மன்னர்கள் 3 தமிழ் சங்கங்களை நடத்தி தமிழ் இலக்கியத்தை வளர்த்துள்ளனர்.

தமிழ் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்

தமிழ் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்

கி.பி. 6-ம் நூற்றாண்டில் சைவ மதம் தொடர்பாக எழுதப்பட்ட 11 ஆயிரம் ஓலைசுவடிகளை கண்டு எடுக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலம், பிரஞ்ச் மொழி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையினரால் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டுகளில், 55 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழில் எழுதப்பட்டவை ஆகும். இதுமட்டுமல்ல தமிழ் பிராமி எழுத்துகளை கொண்ட கல்வெட்டுகள் இலங்கை, எகிப்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

அலுவல் மொழியாக தமிழ்

அலுவல் மொழியாக தமிழ்

எகிப்து நாட்டில் கடலோரத்தில் எடுக்கப்பட்ட உடைந்த ஜாடியில், கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவில் தமிழ் அலுவல் மொழியாக உள்ளன. இலங்கையில் சீன மொழியுடன், தமிழ் மொழியும் அலுவல் மொழியாக உள்ளது. சிங்கப்பூரில் ஆங்கிலத்துடன் தமிழும் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மழலையர் பள்ளிகளிலும், நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

அடுத்த தலைமுறைக்கு தமிழ் எங்கே?

அடுத்த தலைமுறைக்கு தமிழ் எங்கே?

கனடா நாட்டில் ஜனவரி மாதத்தை, தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடுகின்றனர். உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்கள் தமிழ் பேசுகின்றனர். அதிகம் பேசப்படும் மொழியில் தமிழ் மொழி 15-வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொலைதூர கல்வியில் தமிழ்

தொலைதூர கல்வியில் தமிழ்

இந்தியை போல, தமிழையும் பிற மாநில மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று தமிழக அரசை மனுதாரர் கடந்த 2013ம் ஆண்டு முதல் வேண்டுகோள் விடுத்து வருகிறார். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கிறோம். குறைந்த கட்டணத்தில் தமிழை தொலை தூரக்கல்வி முறையில் பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் திட்டத்துக்கு தமிழ் வளர்ச்சித்துறை செயலர் 12 வாரத்துக்குள் தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும். ஒருவேளை இந்த கல்வி முறைக்கு கூடுதலாக பணம் தேவைப்பட்டால், அதற்கும் அவர் ஒப்புதல் அளிக்கவேண்டும். இதற்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு ரூ37.37 லட்சம் ஒதுக்க வேண்டும்.

வெளிநாட்டவருக்கு அவசியம்

வெளிநாட்டவருக்கு அவசியம்

மேலை நாட்டவர் எல்லாம், தமிழை உலக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனால், தமிழ் வளர்ச்சி துறை எதையும் செய்யாமல் உள்ளது. மத்திய அரசும் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய மொழிகளிலேயே செம்மொழி என்ற அந்தஸ்தை தமிழுக்கு முதலில் கொடுத்துள்ளது. இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஹரியானாவில், தமிழ், இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

தற்போது இலங்கை தமிழர்கள் பல்வேறு நாடுகளில் குடியேறி உள்ளனர். எனவே, தமிழை கண்டிப்பாக பிற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டில் வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

தமிழ் படிக்க உதவி தொகை

தமிழ் படிக்க உதவி தொகை

இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வரவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் இளைய தலைமுறையினர் தமிழின் பெருமையையும், தமிழ் இலக்கியத்தையும் புரிந்துகொள்ள முடியாத நிலை கண்டிப்பாக ஏற்படும். மேலும், மத்திய, மாநில அரசுகள், செம்மொழியான தமிழை வெளிநாட்டவருக்கும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வழிவகை செய்யவேண்டும். எனவே, தமிழ் மொழியை காக்கவும், அதை ஊக்குவிக்கவும், தமிழக அரசின் கவனத்துக்கு கீழ் கண்ட பரிந்துரைகளை பரிந்துரைக்கின்றோம்.

தமிழை வளர்க்க, தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கும் உதவி தொகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மொழிபெயர்ப்புக்கு தொகை

மொழிபெயர்ப்புக்கு தொகை

தமிழ் மொழி இலக்கியங்களை வேறு மொழிகளுக்கும், வேறு மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழ் மொழிக்கும் மொழி பெயர்க்க பெரும் தொகையை ஒதுக்கவேண்டும். தமிழை வளர்க்க ஆய்வுகள் பல செய்யும் தமிழ் அறிஞர்களை அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும்.

சர்வதேச பல்கலை. கழகங்களில் தமிழ்

சர்வதேச பல்கலை. கழகங்களில் தமிழ்

உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கவும், தமிழை ஆராய்ச்சி செய்வதற்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களுடன் கலந்து பேசி, அடுத்த தலைமுறையினருக்கும் தமிழை எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
The Madras High Court has directed Tamil Development Department to start correspondence course to teach Tamil at a nominal cost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X