For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பகோணம் மகாமகம் திருவிழா பிப். 13ல் கொடியேற்றம்: பிப்.22ல் தீர்த்தவாரி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் பெருவிழா பிப்ரவரி 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக பெருவிழா, பிப்ரவரி13ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமக தீர்த்தவாரி, பிப்ரவரி 22ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள் நடக்க உள்ளது.

இந்நிலையில், மகாமக பெருவிழா, 2016ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு அடையாள லோகோ வெளியிடப்பட்டு உள்ளது. இதில், ஆதிகும்பேஸ்வரர் கோவில் கோபுரம், மகாமக குளம், அதில் சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த அடையாள சின்னம், அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் வெளியிடப்படும் தகவல்களில் இடம்பெறும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அறநிலையத் துறை சார்பில் தபால் அட்டை, சிறப்பு தபால் கவர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 'மொபைல் ஆப்ஸ்' வெளியிடப்பட்டு உள்ளது.

மகாமகம் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்ட நாள் தொடங்கி 22ம் தேதி வரை புனித நீராடலாம் என ஆதீனங்கள் தெரிவித்து உள்ளனர். வட மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா போல் கும்பகோணம் மகாமக விழாவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆன்மீக திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி கும்பகோணத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாமகக் குளத்தின் பரப்பளவு 6 ஏக்கர் 2813 சதுர அடியாகும். இதனைச் சுற்றியுள்ள 16 சன்னதிகள் சோடசமகாலிங்க சுவாமி என்று அழைக்கப்படுகிறது. அவற்றில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சோடசமகாலிங்க சுவாமி கோவில், கும்பகோணம் நகர் காசிவிஸ்வநாத சுவாமி கோவிலின் துணை ஆலயமாகும். இத்திருக்குளத்தை மகாமகக் குளம், மகாமகத் தீர்த்தம், கன்னிகா தீர்த்தம், அமுதவான தீர்த்தம் என அழைப்பர். புண்ணிய காலத்தில் புனித நீராடும் வகையில் இத்திருக்குளத்தில் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.

மகாமகக் குளத்தில் நீராடும் முன் காவிரியில் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். மகாமகத்தன்று காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், ஆதிகும்பேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர் ஆகிய 12 சைவத் தலங்களுக்கும், சாரங்கபாணி, ராமசாமி, ஹனுமார், சரநாராயணப் பெருமாள், ஆதிவராகப் பெருமாள், ராஜகோபால சுவாமி கோவில், சக்கரபாணி பெருமாள் ஆகிய 7 வைணவத் தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிக பலனைத் தரும். மேலே குறிப்பிட்ட 12 சைவத் தலங்களிலிருந்தும் சுவாமிகள் எழுந்தருளி மகாமகக் குளம் சென்று தீர்த்தவாரி நடைபெறும். அதேபோல் 5 வைணவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும்.

கும்பகோணம் மகாமகம்

கும்பகோணம் மகாமகம்

கும்பகோணம் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகப் பெருவிழா, வருகிற 22ந் தேதி சூரியன் கும்பராசியிலும், குரு சிம்மராசியிலும் வரும்போது பவுர்ணமி திதியில் மாசி மாத மக நட்சத்திரம் அன்று ரிஷப லக்னத்தில் சேரும் புனித நாளில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 14 உலகங்களிலும் உள்ள தேவர்கள் யாவரும் புனித நீராட வருகிறார்கள் என்பது வரலாறு.

புனித நதிகள்

புனித நதிகள்

மகாமகத் தினத்தன்று மகாமகக் குளத்தில் புனித நீராடுதலுக்கு ஈடானது ஒன்றுமில்லை. இப்புனித மகாமகம் நடைபெறுவதற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.
ஒரு சமயம் கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகள் ஒன்றுசேர்ந்து கயிலாய மலை சென்று சிவபெருமானை வணங்கி, எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெரிய பாதகங்களைச் செய்தவர்களும், நீராடி எல்லா பாவங்களையும் எங்களிடம் விட்டுவிட்டு நற்கதி அடைந்து வருகிறார்கள். எங்களிடம் விட்ட பாவங்களை நாங்கள் எங்கு சென்று போக்கிக் கொள்வது என்று கேட்டார்கள்.

புண்ணியம் கிடைக்கும்

புண்ணியம் கிடைக்கும்

அப்போது இறைவன் தீர்த்த தேவதைகளிடம் திருக்குடந்தையில் (கும்பகோணத்தில்) மகாமகத்தன்று மகாமகக் குளத்தில் நீராடுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகுவதோடு, அவர்களிடமிருந்தும் பாவங்கள் விலகிவிடும் என்றார்.உடனே 9 தீர்த்தங்களும் கன்னிகை வடிவெடுத்து குடந்தை வந்து மகாமகக் குளத்தில் புனித நீராடி வடகரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இந்த மகாமக தீர்த்தத்தை ஒரு தடவை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

மகாமகம் குளம்

மகாமகம் குளம்

இந்த மகாமகக் குளத்தை ஒருமுறை சுற்றி வந்தால் இந்த பூமியை 100 முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தில் ஒரு தடவை நீராடினால் கங்கைக் கரையில் 100 ஆண்டுகள் வாழ்ந்து 3 காலமும் நீராடிய பலன் கிடைக்கும்.

மகாமக குளத்தில் உள்ள தீர்த்தங்கள்

மகாமக குளத்தில் உள்ள தீர்த்தங்கள்

வாயு தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், யமுனை தீர்த்தம், குபேரத் தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், ஈசானிய தீர்த்தம், நர்மதை தீர்த்தம், இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவேரி தீர்த்தம், யம தீர்த்தம், குமரி தீர்த்தம், நிருதி தீர்த்தம், கிருஷ்ணா தீர்த்தம், தேவ தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், கன்னிகா தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் மகாமக குளத்தில் உள்ளன.

தலைமுறைகளுக்கும் புண்ணியம்

தலைமுறைகளுக்கும் புண்ணியம்

இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தில் வடபுறத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம், மனைவியின் கோத்திரம், உள்ளிட்ட 7 கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் (7 தலைமுறைகளுக்கு) நற்கதி அடைவர் என்பது நம்பிக்கை. இப்புனிதத் திருநாளில், ஈரேழு உலகம் சேர்ந்த தேவர்கள் ஒன்றுகூடி மகாமகக்குளத்தில் புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம். ஒரே நேரத்தில் 12 சைவத் கோவில்களின் சுவாமிகள், ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது கும்பகோணம் மகாமகத்திருக்குளத்தில் மட்டுமே. இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது.

தேரோட்டம்

தேரோட்டம்

மகாமகத்தையொட்டி 48 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் பிப்ரவரி 21, 22ம் தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கோயில்களின் நடைகளும் திறந்திருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The ten-day Mahamaham festival, celebrated once in 12 years, will begin with flag hoisting on Feb 1 in Saivite temples in Kumbakonam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X