For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக... கட்சிகள் உடைந்தது எப்படி, இணைந்தது எப்படி தெரியுமா?

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள், பிளவுபட்டு ஒன்றிணைந்துள்ளன, சில இணைப்பு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. அப்படிப்பட்ட முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரை விளக்குகிறது.

சென்னை: அரசியல் கட்சிகள் இந்தியாவில் இணைவதற்குப் பல்வேறு காரணங்கள் அமைந்துள்ளன. கட்சிகளின் பிளவுக்கு எது காரணமாக இருக்கிறதோ, அதைச் சரிப்படுத்தும்போது, கட்சிகள் இணைந்துவிடுகின்றன.

நகைச்சுவையாகச் சொல்லப் போனால், தாளை ஒட்டுவதற்குப் பசை வேண்டும், மரங்களைச் சேர்ப்பதற்கு ஃபெவிகால், வஜ்ரம் போன்றவை தேவை. செங்கற்களை இணைப்பதற்கு சிமென்ட் தேவை. மனங்களை இணைப்பதற்கு மட்டும் தான் என்ற ஈகோவை விட்டால் போதும். தானாகவே இணைந்துவிடும் என்று இலக்கிய நயத்துடன் சொல்வார்கள்.

அப்படியானால், அரசியல் கட்சிகள் இணைவதற்கு எது தேவையாக இருக்கும் என்ற கேள்விக்கு பல பதில்களைக் கூறலாம்.

அதிமுக அணிகள்

அதிமுக அணிகள்

இந்திய அரசியலில் இரு கட்சிகளையோ, அல்லது கட்சிகளின் இரு வேறு அணிகளையோ இணைப்பது கொள்கையா, தலைமையா, பிரச்சினைகளா, அரசியல் வியூகமா என்று கேட்டால் எல்லாமே என்று கூடக் கூறிவிடலாம். தற்போது அண்ணா திமுகவின் இரு வேறு அணிகள் இணைவது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், முன்னாள் முதலமை்சரான ஓ. பன்னீர்செல்வம் அணியும் பேச்சுவார்த்தைகளை முன் வைத்துள்ளன.

இரு நிபந்தனைகள்

இரு நிபந்தனைகள்

இவர்களது பொது நோக்கம் கட்சியின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை மீட்பதுதான். அப்படி சின்னத்தைப் பெற்றால்தான் அரசியல் எதிர்காலம் உறுதியாகும் என்பதை இரு தரப்பினரும் உணர்ந்திருக்கிறார்கள். இந்த இரு அணிகளும் இணைவதற்கு ஓ.பி.எஸ். அணி முன் வைத்திருக்கும் இரு முக்கிய நிபந்தனைகள் சசிகலா, தினகரன் குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து முழுவதுமாக வெளியேற்ற வேண்டும் என்பது. அடுத்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது இரண்டாவது முக்கிய நிபந்தனை.

மக்கள் கோபம்

மக்கள் கோபம்

இதில் சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கு அவப் பெயர்தான் என்பதை இரு அணிகளும் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். அதற்கு முதல் காரணம், கட்சித்தொண்டர்களும், தொகுதிகளில் உள்ள மக்களும் அந்தக் குடும்பத்தின் மீது கடுமையான கோபத்துடன் இருக்கிறார்கள் என்பது. இதை எடப்பாடி பழனிச்சாமி அணி மெல்ல மெல்ல உணர்ந்து வருகிறது.

எடப்பாடி அணி இறங்கிவரும்

எடப்பாடி அணி இறங்கிவரும்

சசிகலா குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்ந்தால், மூன்று சிக்கல்கள் வரும். 1) இரு அணிகளும் இணைவது இயலாது. அதனால், கட்சியின் சின்னம் கிடைக்காது. அரசியல் எதிர்காலம் மங்கிவிடும். 2) நீதிமன்றத் தீர்ப்புகள், வழக்குகள் என எல்லா வகையிலும் சசிகலா, தினகரன் ஆகியோர் சிக்கியிருப்பதால், கட்சியின் மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற இயலாது. 3) ஆட்சியைத் தொடர்ந்து சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசின் ஆதரவோ உதவியோ கிடைக்காது. இதன் காரணமாக அந்த அணியினர் மெல்ல மெல்ல இறங்கி வருகிறார்கள் என்று தெரிகிறது.

சசிகலா பேனர் அகற்றம்

சசிகலா பேனர் அகற்றம்

இதன் அடையாளமாக, அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. சசிகலாவைக் கட்சியைவிட்டே நீக்க வேண்டும் வலியுறுத்தும் ஓபிஎஸ் அணியினர் அக்கட்சியின் அலுவலகத்துக்கு வரும்போது, சசிகலாவின் பேனர் தருமசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை எடப்பாடி அணியினர் கவனத்தில் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இந்திய அரசியலில் அண்ணா திமுக இப்போதைய நிலையில் இணைந்தால், ஒரு கட்சி இரண்டுமுறை பிளவு பட்டு சிறிது காலத்துக்குப் பின் இணைந்து கட்சியின் சின்னத்தை மீட்டது என்ற பெருமை பெறும். வேறு எந்தக் கட்சிக்கும் இதுபோன்ற நிலைமை இருந்ததில்லை.

மிகப்பெரிய பிளவு

மிகப்பெரிய பிளவு

இந்திய தேசிய அளவில் 1962ம் ஆண்டு சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, சீனப் படையெடுப்பின் விளைவாக இந்தப் பிரிவு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுவாக நேருவின் நிலையை ஆதரித்தும், அவரது ரஷிய ஆதரவுப் போக்கை வரவேற்றும் இருந்தனர். ஆனால், சீனாவின் படையெடுப்பை அடுத்து, அக்கட்சியில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் சீன ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டனர். இதுதான் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய கட்சிப் பிளவு ஆகும்.

முயற்சி எடுக்கப்படவில்லை

முயற்சி எடுக்கப்படவில்லை

கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது மட்டுமின்றி, காங்கிரஸ் ஆதரவு நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை மார்க்சிஸ்ட் கட்சியும் தொடர்ந்து எடுத்து வந்தன. 1977ம் ஆண்டு வரையில் இது நீடித்தது. நெருக்கடி நிலையைக் கொண்டுவந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தோல்வியடைந்ததால், நெருக்கடி நிலையை ஆதரித்தது தவறு என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி பகிரங்கமாக அறிவித்துவிட்டு, அப்போது முதல் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பொதுவான தளத்தில் இணைந்தே செயல்பட்டு வந்தன. கேரளம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இடதுசாரி தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த இரு கட்சிகளின் இணைப்பு குறித்து பல முறை பேசப்பட்டு வந்தாலும், அதற்கான முன் முயற்சி எப்போதும் ஏற்படவில்லை.

காமராஜர் vs இந்திரா காந்தி

காமராஜர் vs இந்திரா காந்தி

1969ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் விளவுதான் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் பிளவுக்கு காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, சஞ்சீவ ரெட்டி போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம். குடியரசுத் தலைவர் தேர்தலில் சஞ்சீவ ரெட்டியை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என அனைத்து தலைவர்களும் முடிவு செய்தபோது, இந்திரா காந்தி தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியினர் மனச்சாட்சிப்படி வாக்களிக்கலாம் என்று கேட்டுக் கொண்டு, அப்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வி.வி. கிரியைப் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்தார்.

காங்கிரசுக்கு இரு சின்னங்கள்

இதனால் கடுமையான அதிருப்தி அடைந்த கட்சியின் மூத்த தலைவர்கள் இந்திரா காந்தியின் செயலை ஆட்சேபித்தனர். அதுவே காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரியக் காரணமானது. அதுவரை காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் இரட்டைக் காளைகள் பூட்டிய மாட்டு வண்டிச் சின்னம் இருந்தது. கட்சி இரண்டாக உடைந்த பின், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு பசுவும் கன்றும் சின்னமும், பழைய காங்கிரஸ் கட்சிக்கு இராட்டை நூற்கும் பெண் சின்னமும் பெற்றன.

ஒரே அணி

ஒரே அணி

காமராஜர் காலத்தில் இந்த இரு காங்கிரஸ் கட்சியும் இணைவது குறித்துப் பேசப்பட்டு வந்தது. அப்போது, தமிழகத்தில் காமாராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணையலாம் என்று இந்திரா காந்தி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை காமராஜர் ஏற்கவில்லை. அகில இந்திய அளவில் எல்லோரும் இணைந்தால் மட்டுமே இணைப்பு நடவடிக்கையை ஏற்க இயலும் என்று மறுத்துவிட்டார். அதாவது, காமராஜர் மட்டுமின்றி, மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, சஞ்சீவரெட்டி ஆகிய தலைவர்களும் நாடு முழுவதும் இணையவேண்டும் என வலியுறுத்தினார். ஒரே ஒரு முறை இரு கட்சிகளும் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு தேர்தலில் ஒரே அணியில் இணைந்து பணியாற்றின.

சிறையில் அடைப்பு

இதனிடையில் 1975ம் ஆண்டு நெருக்கடி நிலையை இந்திரா காந்தி தலைமையிலான அரசு கொண்டுவந்ததற்கு பழைய காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. நிஜலிங்கப்பா, நீலம் சஞ்சீவ ரெட்டி, மொரார்ஜி தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் இந்திரா காந்திக்கு எதிராக முழுப் புரட்சி நடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயண், அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஜனசங்கத் தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய தலைவர்களும் திமுக தலைவர்கள் முரசொலி மாறன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இணைந்த காங்கிரஸ்

இணைந்த காங்கிரஸ்

அதையடுத்து காமராஜர் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் மட்டும் ஸ்தாபன காங்கிரஸும் இந்திரா காங்கிரஸும் 1976ம் ஆண்டு இணைந்தன. இணைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவன் பிள்ளை குறுகிய காலத் தலைவராகவும் பின்னர் ஜி.கே. மூப்பனார் நிரந்தரத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். எனினும், தேசிய அளவில் பழைய காங்கிரஸ் கட்சி தனியாகவே இருந்தது. பா.ராமச்சந்திரன் தலைமையில் தமிழகத்திலும் பழைய காங்கிரஸ் கட்சி இருந்தது.

ஜனதா கட்சி உதயம்

ஜனதா கட்சி உதயம்

நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு, 1977ம் ஆண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டபோது இந்திய அரசியலில் முதல் முறையாக பல கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி என்ற மிகப் பெரிய தேசிய கட்சி உருவானது. அத்துடன், அந்தக் கட்சியே ஆட்சியையும் பிடித்தது. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா ஆகியோரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி, சரண்சிங் தலைமையிலான பாரதீய லோக தளம் (பிஎல்டி), வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனசங்கம், மதுதந்தவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரது சோஷலிஸ்ட் கட்சி, ஜெகஜீவன்ராம் தலைமையிலான ஜனநாயகத்துக்கான காங்கிரஸ் (சிஎப்டி) ஆகியவை 1977 மே மாதம் முறைப்படி இணைந்து ஜனதா கட்சி உருவானது.

பாஜக உதயம்

எனினும் மூன்று ஆண்டுகள் கூட நீடிக்காத இந்த இணைப்பு மீண்டும் பழைய நிலைகளையே அடைந்தன. சரண் சிங் லோக் தளத்தை உருவாக்கினார். வாஜ்பாய் பாரதீய ஜனதா கட்சியை 1980ம் ஆண்டு தொடங்கினார். ஜெகஜீவன் ராம் ஜனநாயக காங்கிரஸ் கட்சியை அமைத்தார். பெர்னாண்டஸ் ஆகியோரும் வெளியேறினர்.
அதன் பிறகு அக்கட்சிகள் மீண்டும் இணையவேயில்லை.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றம்

திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றம்

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்ஜிஆர் . நீக்கப்பட்டதை அடுத்து அக்கட்சி பிளவுபட்டது. எனினும், எம்ஜிஆர் தன்னை இன்னொரு திமுக என்று அறிவித்துக் கொள்ளாமல் புதிய கட்சியாகவே தொடங்க நடத்தினார். எனினும், திமுகவையும் அதிமுகவையும் இணைக்கும் முயற்சி 1979ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

எம்ஜிஆர் கோபம்

எம்ஜிஆர் கோபம்

ஒரிசாவைச் சேர்ந்த பிஜு பட்நாயக் இதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றமும் காணப்பட்டது. எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய தலைவர்களை நேருக்கு நேர் சந்திக்கச் செய்து இணைப்பைப் பூர்த்தி செய்வதில் பட்நாயக் குறியாக இருந்தார். அதற்கான பேச்சுவார்த்தை இறுதியில், எம்ஜிஆர் முதலமைச்சராக நீடிப்பது என்றும் இணைந்த கட்சியின் தலைவராக கருணாநிதியும் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவைக் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடலாம் என்று இருந்த நிலையில், திமுக தரப்பில் முன்கூட்டியே செய்தியாளர்களிடம் வெளியிட்டதால், எம்ஜிஆர் அதிருப்தி அடைந்தார். பிறகு, முயற்சி முறிந்ததது.


அதிமுகவிற்குள் கோஷ்டி

அதையடுத்து அண்ணா திமுகவில் எம்ஜிஆருக்கு எதிராகக் கொடிபிடித்த எஸ்.டி. சோமசுந்தரம் தனது தலைமையிலான கட்சியே அண்ணா திமுக என்று அறிவித்தார். ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரிதத்தால், வேறு வழியின்றி நமது கழகம் என்ற பெயரில் தனது தலைமையில் கட்சி நடத்தினார். பின்னர், அது அண்ணா திமுகவில் இணைந்தது.

திமுகவுக்கு சொந்தம் கொண்டாடிய வைகோ

திமுகவுக்கு சொந்தம் கொண்டாடிய வைகோ

1993ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்த வைகோ (அப்போது வைகோபாலசாமி) பொதுக்குழுவைக் கூட்டி, தனது தலைமையிலான கட்சியே உண்மையான திமுக என்று அறிவித்தார். ஆனால்,தேர்தல் கமிஷன் முன் அவரது தலைமையிலான கட்சி திமுக அல்ல என்று தீர்ப்பு வந்ததால், உதய சூரியன் சின்னத்தையோ, கட்சியின் கறுப்பு வெள்ளைக் கொடியையோ, கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையோ பயன்படுத்த இயலவில்லை. வேறு வழியின்றி மறுமலர்ச்சி திமுக என்ற கட்சியை உருவாக்கினார்.

திருநாவுக்கரசரின் பல்டிகள்

திருநாவுக்கரசரின் பல்டிகள்

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சியிலிருந்து வெளியேறி எஸ். திருநாவுக்கரசு எம்ஜிஆர் அண்ணா திமுகவை நடத்தினார். அது 1996ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுகவில் இணைந்தது. பிறகு, வெளியேறிய அவர் எம்ஜிஆர் அண்ணா திமுக கட்சியைத் தொடர்ந்து நடத்தி, வாஜ்பாய் தலைமையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் காங்கிரஸுக்கு மாறினார்.

கம்யூனிஸ்ட், காங்கிரஸ்

கம்யூனிஸ்ட், காங்கிரஸ்

இப்படி நாடு முழுவதும் கட்சிகள் பிரிவதும் இணைவதும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், அந்தப் பிரிவுக்கும் இணைப்புக்கும் காரணங்கள் மட்டும் மாறுபடுகின்றன.
கம்யூனிஸ்ட் கட்சி 1962ம் ஆண்டு கொள்கை அடிப்படையில் இரண்டாக உடைந்தது. ஆனால், கூட்டாக மட்டுமே செயல்படுகின்றன,. இணையவில்லை. காங்கிரஸ் கட்சி அரசியல் வேறுபாட்டினால் 1969 பிளவுண்டது. பிறகு, கட்சித் தலைவர்கள் வெவ்வேறு கட்டங்களில் இணைந்துகொண்டனர்..

வரலாறு முக்கியம்

வரலாறு முக்கியம்

ஜனதா கட்சி 1979ம் ஆண்டு கொள்கை ஒட்டாத காரணத்தால் உடைந்தது. அதன் பிறகு இணையவேயில்லை. ஜனதா கட்சி காணாமல் போனது. திமுக-அதிமுக ஊழல் புகார் காரணமாக உடைந்தது. ஒரே ஒரு முயற்சிக்குப் பின் இணையவில்லை. 1988ம் ஆண்டு உடைந்த அதிமுக 1989ம் ஆண்டு கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு, இணைந்தது. 2017ம் ஆண்டு அண்ணா திமுக பிளவுபட்டு தனித்தனி சின்னங்களைப் பெற்றிருந்தாலும், மீண்டும் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இந்த இரு அணிகளும் முழுமையாக இணையுமா, இரட்டை இலைச் சின்னத்தை மீட்குமா என்பது ஒரிரு நாளில் தெரிந்துவிடும்.

English summary
In the past, many parties have joined hands after a difference of opinion in India, including Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X