For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் நலன் விரோத மோடி அரசு.. தூத்துக்குடி மதிமுக பொதுக்குழுவில் கடும் தாக்கு!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நடந்த மதிமுகவின் 23வது மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மத்திய அரசைக் கண்டித்து முதல் தீர்மானம் போடப்பட்டது. மோடி அரசு மக்கள் நலன் விரோத அரசாக மாறி விட்டதாக கடும் தாக்குதலைக் கொண்டிருந்தது அந்த தீர்மானம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 23வது மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று காலை 10மணிக்கு தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் துவங்கியது.

மாநில பொதுக்குழுக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். துணைபொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் டாக்டர். மாசிலமாணி, முன்னாள் எம்.பி.,கணேசமூர்த்தி, பாலவாக்கம் சோமு, புலவர் செவ்வந்தியப்பன், செந்தில் அதிபன், உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல் அறிமுக உரை ஆற்றினார்.

கூட்டத்தின் துவக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறைந்த தியாகச்சுடர் கே.வி.கே.சாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து உயிர்நீத்த கழக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடம் இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்:

மக்கள் விரோத மோடி அரசு

மக்கள் விரோத மோடி அரசு

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்கள் அவைத் தேர்தலில் இந்திய நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புகளுடனும் வாக்கு அளித்ததால், மிகப் பெரும்பான்மை பலத்துடன் நரேந்திரமோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்தது. ஆனால், கடந்த எட்டு மாத கால ஆட்சியில் மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் நலனுக்கு எதிராகவே இருக்கின்றன. இதற்கு மதிமுக கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

215 அமைப்புகளுக்கு நன்றி

215 அமைப்புகளுக்கு நன்றி

தலைவர் வைகோ அவர்களின் அழைப்பு ஏற்று தஞ்சையில் கடந்த ஜனவரி 20ம் தேதி, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கும் தீர்மானத்தைச் செயல்படுத்த இசைவு அளித்த அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கப் பேரவை, மீத்தேன் எதிர்ப்பு இயக்கங்கள் உள்ளிட்ட 215 அமைப்புகளுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

முற்றுகைப் போராட்டம்

முற்றுகைப் போராட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தவும், நாசக்கார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கவும், மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக பிப்ரவரி 18ம் தேதி தலைநகர் சென்னையைத் தவிர்த்து புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், மார்ச் 11ம் தேதி தலைநகர் சென்னையிலும், மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23ல் தலைநகர் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் முற்றுகைப் போராட்டத்தை காவிரி பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவது என்று கழகப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

3, 4வது அணு உலை கட்டக் கூடாது

3, 4வது அணு உலை கட்டக் கூடாது

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி, 39 ஆயிரத்து 746 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது. மேலும், 6 அணுஉலைகள் அமைப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதி கூடங்குளத்தில் இருப்பதாக அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு கைவிட வேண்டும்

மத்திய அரசு கைவிட வேண்டும்

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் வெறும் 2.7 விழுக்காடு அளவு மட்டுமே உள்ள அணுமின்சக்தி தயாரிப்புக்காக மக்கள் நலனைப் பலியிடும் மத்திய அரசுக்கு கழகப் பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணுஉலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

தாமிரபரணி அணையை தூர் வாரக் கோரிக்கை

தாமிரபரணி அணையை தூர் வாரக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணியின் குறுக்கே ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ள அணை சுமார் 100 வருட காலமாக தூர்வாரப்படாமல் மண்மேடாகி விட்டது. மண்மேடான அணையால் மழைக்காலங்களில் ஆற்றில் வரும் அதிகப்படியான தண்ணீர்(ஆண்டுக்கு 10முதல் 16டி.எம்.சி) சேமித்து வைக்க வழியின்றி வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனால் சுமார் 25ஆயிரத்து 560ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி இன்றி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரி ஆழப்படுத்திட துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக இருப்பதுடன், பொதுமக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வரும் வகையில் செயல்பட்டுவரும் நாசக்கார நச்சு ஆலையான ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மக்கள் நலன் கருதி உடனடியாக அகற்றிடவேண்டும்.

தாது மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி

தாது மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடலோர மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவரும் கனிமவள தாதுமணல் கொள்ளைக்கு நிரத்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும். கனிமவள தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்திட நேர்மையான அதிகாரி தலைமையில் மாநில அரசு விசாரணைக்குழுவை அமைத்து தாதுமணல் கொள்ளையர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுத்திடவேண்டும்.

மதுக் கடைகளை மூடும் வரை மதிமுக ஓயாது

மதுக் கடைகளை மூடும் வரை மதிமுக ஓயாது

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடும்வரை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் போராட்டம் ஓயாது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மேற்கு மாவட்டங்களில் தலைவர் வைகோ அவர்கள் மதுஒழிப்பு விழிப்புணர்வு முதல்கட்ட வாகனப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று கழகப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

25 தீர்மானங்கள்

25 தீர்மானங்கள்

பொதுக் குழுக் கூட்டத்தில் இவ்வாறாக மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாய்க் கழகத்திற்கு திரும்பிய இலக்குமணன்

தாய்க் கழகத்திற்கு திரும்பிய இலக்குமணன்

இக்கூட்டத்தில் மதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த டி.கே.ஏ.இலக்குமணன் மீண்டும் வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார். இந்தநேரத்தில் வைகோவும், இலக்குமணனும் தங்களின் கடந்த கால நிகழ்வுகளை உணர்ச்சி பெருங்குடன் பகிர்ந்துகொண்டனர்.

கூட்டத்தினை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த மாவட்ட செயலாளர் ஜோயல் மற்றும் மதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பெரும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வைகோவுக்கு ரூபாய் மாலை

வைகோவுக்கு ரூபாய் மாலை

கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அரசியலுக்கு வந்த 50 வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக ரூ.5 லட்சத்தை மாவட்ட செயலாளர் ஜோயல் மாலையாக வடிவமைத்து வழங்கினார்.

கூட்டத்தில் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், தமிழகம் முழுவதுமுள்ள மாநில, மாவட்ட செயலாளர்கள், செயற்குழு&பொதுக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் என 1500க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்கேற்றனர்.

English summary
MDMK has adopted 25 resolution in its Tuticorin general body meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X