For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி மையத்தை மாற்றினால் எழுச்சிப் போராட்டம் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை!

செம்மொழி மையத்தை மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: செம்மொழி ஆய்வு மையத்தை மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல எழுச்சி போராட்டம் வெடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே -வாளோடு முன்தோன்றி மூத்தக் குடி" எனும் தொன்மை சிறப்பிற்குரிய தமிழ் இனத்தின் உயர்தனிச் செம்மொழியான தமிழ், உலகின் செவ்வியல் மொழிகளுள் காலத்தால் மூத்தது. பல்லாண்டு கால காத்திருப்புக்குப் பின்னர் 2004 ஆம் ஆண்டில்தான் தமிழ் மொழிக்கு இந்திய அரசு 'செம்மொழி' எனும் சிறப்பை நல்கியது. இதனைத் தொடர்ந்துதான் வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகள் 'செம்மொழி' பட்டியலில் இணைக்கப்பட்டன.

 MDMK chief Vaiko insists government to stop the actions taken by centre to merge Classical tamil language centre

செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காவும், பண்பாட்டு மேன்மைக்காவும் செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், செம்மொழி உயராய்வு மையம் 2006 ஆம் ஆண்டு முதல் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம் தன்னாட்சி தகுதியுடன் சென்னையில் இயங்கி வருவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி அளித்தது.

செம்மொழி தமிழின் தொன்மையையும், தனித்தன்மையையும் நன்கு புலப்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுப் பணிகளை செம்மொழி ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு, பழந்தமிழ் நூல்களை மொழி பெயர்த்தல், வரலாற்று முறைத் தமிழ் இலக்கணம் வகுத்தல், தமிழின் தொன்மை -பன்முக ஆய்வு, தமிழ் திராவிட பிற மொழிக் குடும்பங்கள் ஒப்பாய்வு, தமிழ் வழக்காறுகள் ஆய்வு, பழந்தமிழ் ஆய்வுக்கான மின் நூலகம், இணையவழிச் செம்மொழித் தமிழ்க் கல்வி, பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம், செம்மொழித் தமிழ்க் காட்சிக் குறும்படங்கள் தயாரிப்பு போன்ற பணிகளைத் தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், செம்மொழி ஆய்வு நிறுவனம் மூலம் தமிழ் மொழி ஆய்வில் சிறந்து விளங்கும் தமிழ் அறிஞர்களுக்கு இளம் அறிஞர் விருது, தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதன் செயற்பாட்டை முடக்கியுள்ளது.

தற்போது சென்னை தரமணியில் இயங்கி வரும் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் ஓர் உறுப்பாக இணைத்துவிட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தின் தன்னாட்சி உரிமையைப் பறித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல வகைகளில் அந்நிறுவனத்தின் ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்தும் உள்நோக்கத்துடன் அந்நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் சமஸ்கிருத மொழி, இந்தி மொழித் திணிப்பைத் தீவிரப்படுத்தி வருவதுடன், தொன்மை சிறப்பு மிக்க தமிழ்த் தேசிய இனத்தின் மொழி, இன மற்றும் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது. தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுத் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் கீழடியில் அகழ்வு ஆய்வின் மூலம் பல சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், மத்திய அரசின் தொல்லியல் துறை கீழடி ஆய்வுப் பணிகளை முடக்குவதன் மூலம், தமிழ் இனத்தின் பண்டைய பண்பாட்டுத் தரவுகளை இருட்டடிப்பு செய்ய முயலுகிறது. தற்போது தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தைச் சீர்குலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழக அரசு, மத்திய அரசின் இம்முயற்சியைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஜல்லிக்கட்டுக்காக நடந்ததைப் போன்று தமிழகம் பொங்கி எழுந்து போராடும், என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK general secretary warns tamilnadu government not to merge classical tamil language centre with central university. And also adds if not stopped again a marina protest will emerge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X