For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு: கம்பத்தில் முழங்கிய வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கம்பம்: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு கேடாக இருக்கும் கேரள அரசை கண்டித்து, நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்தும் திங்கட்கிழமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

MDMK protest against Neutrino Observatory

கம்பம் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஏராளமான மதிமுக நிர்வாகிகளும், கட்சியினரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய வைகோ, கடந்த இரண்டு மாதகாலமாக ஓய்வின்றி பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டத்தில் பங்கேற்று வருவதாக தெரிவித்தார்.

தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியில் பொட்டிப்புரம் கிராமத்தில், இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் (ஐ.என்.ஏ.) ரூ.1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கின்றது.

MDMK protest against Neutrino Observatory

நியூட்ரினோ ஆய்வு மையத்தால் இயற்கை சுற்றுச் சூழல் நாசமாகி, அந்த மலைப்பகுதிகளே அழிந்துவிடும் என்பதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முதலில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இமயமலை தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள தட்பவெப்பம் சரிவராது என்பதால் கைவிடப்பட்டது. பிறகு அஸ்ஸாமிலும், கேரளாவிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், சிங்கார் பகுதி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, வனவிலங்கு சரணாலயம் இருப்பதாலும், எதிர்ப்புகள் வந்ததாலும் முயற்சி கைவிடப்பட்டது.

MDMK protest against Neutrino Observatory

இப்போது, தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிப்புரம் மலைத்தொடரான 'ஐம்பது ஊர் அப்பர் கரடு மலை' என்று மக்கள் அழைக்கும் பகுதியை இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் தேர்வு செய்து இருக்கின்றது.

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்காக மலை உச்சியில் இருந்து 1.5. கிலோ மீட்டர் ஆழத்தில் 400 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட ஒரு சுரங்கம் அமைக்கப்படும். அருகிலேயே 170 அடி நீளம், 38 அடி அகலம், 15 அடி உயரம் கொண்ட இன்னொரு குகைச் சுரங்கமும் அமைக்கப்படுகிறது.

சுமார் 2.5. லட்சம் கன சதுர மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டுவதற்காக, மலையை வெடி வைத்துத் தகர்க்கும்போது, அந்தப் பகுதி முழுவதுமே பூமி அதிர்ச்சி ஏற்படுவதைப்போல குலுங்கும். மலையைத் துளைக்கும் கனரக வாகனங்களும், ராட்சத இயந்திரங்களும் ஊருக்குள் வர சாலை அமைக்கவும், கழிவுகளைக் கொட்டவும் விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படும்.

இதனால் தேனி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் அடியோடு நாசமாவதுடன், மலைப்பகுதி விவசாயமும் அழிந்துவிடும். இதனால், தமிழகத்தில் தேனி மாவட்டமும், கேரளாவில் இடுக்கி மாவட்டமும் முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வைகோ எச்சரிக்கை விடுத்தார்.

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தொழிற்சாலையோ, வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனமோ அல்ல. இது முழுக்க முழுக்க ஆராய்ச்சிப் பணி மட்டுமே.

இத்தாலி நாட்டில் கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு ரசாயனக் கசிவு ஏற்பட்டதன் விளைவாக போராட்டம் வெடித்தது. மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டதால் இத்தாலி அரசு, நியூட்ரினோ ஆய்வு மையத்தை 2003 இல் மூடியது.

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் இயற்கையை அழித்து மக்களை வெளியேற்ற நடக்கும் சதித் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தமிழக,கேரளா அரசுகள் இணைந்து இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றும் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

English summary
MDMK leader Vaiko addressing party men at the protest at Kambam in Theni district against Neutrino Observatory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X