For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகள்.. யாரைச் சொல்கிறார் மு.க.ஸ்டாலின்?

முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கு இப்போதைய அதிமுக அரசு திடீரென ஒப்புதல் அளிப்பது ஏன் என்ற கேள்வியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக ஆட்சி செலுத்த விரும்பும் முயல் வேடம் போட்ட முதலைகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதய் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், மருத்துவக் கல்லூரி நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசு தனது பழைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முற்றிலும் சரண் செய்து விட்டு, திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் பொறுப்பை வகிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை இப்போது ஆதரிப்போர் யார் என்ற கேள்வியையும் ஸ்டாலின் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நிர்வாகம் யார் கையில்

நிர்வாகம் யார் கையில்

உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. அவர் மருத்துவமனைக்கு சென்றவுடன் மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் முடிவு எடுக்க முடியாமல் ஆட்சி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையான காவேரி பிரச்சினையில் கூட கை கட்டி நின்று வேடிக்கை பார்த்ததை அனைவரும் அறிவர்.

ஆளுநரின் நேரடிக் கவனம்

ஆளுநரின் நேரடிக் கவனம்

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த தன்னெழுச்சியின் காரணமாக தமிழக அரசின் நிர்வாகத்தில் மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்களே நேரடிக் கவனம் செலுத்தினார். குறிப்பாக, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நியமித்த குழு தமிழகத்தைப் பார்வையிட வந்த போது அந்த குழுவிற்கான ஏற்பாடுகள் குறித்து 7.10.2016 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்களே நேரடியாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைத்துக் கேட்டறிந்தார். ஆளுனர் அவர்களின் நிர்வாக நடவடிக்கை குறித்து ஆளுநர் அலுவலகமே செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.

முதல்வர் பொறுப்பு

முதல்வர் பொறுப்பு

மேலும் நிதியமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதலமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அனைத்து இலாகா பொறுப்புகளையும் வழங்கி 11.10.2016 அன்று ஆளுநர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். நிதியமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கலாம் என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தினார். மாநில நிர்வாக நலன் மற்றும் மக்கள் நலன் கருதி ஆளுநரின் இந்த முடிவை எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நானே வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். ஆளுநரின் இந்த உத்தரவுக்குப் பிறகு இருமுறை அமைச்சரவைக் கூட்டத்தை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். ஆனால் அந்த அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிக்கை செய்திக் குறிப்புகள் ஏதும் இல்லை.

வேதனைக்குரியது

வேதனைக்குரியது

கழக ஆட்சி நடைபெற்ற போது அமைச்சரவைக் கூட்டத்தை தலைவர் கருணாநிதி கூட்டினால், அங்கே எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக செய்திக் குறிப்பாக வெளியிடப்படும் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளையே ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அதிமுக ஆட்சிக்கு ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, அந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ரகசியமாக வைத்துக் கொள்ளும் அதிமுக அரசின் போக்கு வேதனைக்குரியது.

பழைய கருத்துக்களை சரண்டர் செய்த அதிமுக அரசு

பழைய கருத்துக்களை சரண்டர் செய்த அதிமுக அரசு

இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் உதய் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், மருத்துவக் கல்லூரி நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசு தனது பழைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முற்றிலும் சரண்டர் செய்து விட்டு, அந்த திட்டங்களுக்கு எல்லாம் ஒப்புதல் தெரிவித்து உள்ளதையும் பத்திரிக்கை செய்திகள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.

ஜெயலலிதா மனு

ஜெயலலிதா மனு

மாண்புமிகு பாரதப் பிரதமரை 14.6.2016 அன்று நேரில் சந்தித்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், 9270 கோடி ரூபாய் இழப்பீட்டை உருவாக்கும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்கு சம்மதிக்க முடியாது, என்றார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தும் உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் அதே நேரத்தில் மாநிலத்தின் சமூக பொருளாதார நோக்கங்களை சிதைக்கும் மருத்துவக் கல்லூரிக்கான நீட் தேர்வு முறையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆதார் எண்களை உணவு அட்டைகளுடன் இணைக்கும் பணி மாநிலத்தில் துவங்கியிருக்கிறது. அந்தப் பணி முடிந்த பிறகுதான் உணவு அட்டைப்படியான பயனாளிகளை கண்டு பிடிக்க முடியும். ஆகவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

கை கட்டி சம்மதம் தெரிவித்தது யார்

கை கட்டி சம்மதம் தெரிவித்தது யார்

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துமனையில் சேர்க்கப்படும் முன்பு இப்படி எதிர்ப்பு தெரிவித்த நான்கு முக்கியப் பிரச்சினைகளிலும் இப்போது அதிமுக அரசு மத்திய அரசின் முடிவுகளுக்கு கை கட்டி நின்று சம்மதம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுடன், மாநில அரசு நிர்வாக ரீதியாக நெருங்கிச் செல்வது வரவேற்புக்குரியது. ஆனால் உதய் திட்டம், நீட் தேர்வு, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகிய அனைத்தையும் அதிமுக அரசு தான் முன்பு எடுத்த நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டாமா? "மக்களுக்காகவே நாங்கள்" என்று கூறிக் கொள்ளும் அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்புக்கொண்ட உண்மைகளை ஏன் விளக்க மறுக்கிறார்கள்? இப்போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க அதிமுக அரசு முன் வந்துள்ளது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

யார் ஆட்சி செய்ய வசதி செய்யப்படுகிறது

யார் ஆட்சி செய்ய வசதி செய்யப்படுகிறது

முதலமைச்சர் பொறுப்புகளைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசு கூட்டும் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் படி வரி விதிப்பு குறித்து விவாதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்திற்கு நிதியமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்தும் கூட அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது. அரசியல் சட்டப்படி அரசு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய மிக உயர்ந்த பொறுப்புள்ள ஆளுநர் பதவிக்கு தமிழகத்தில் முழு நேர ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலைகள் யாருக்காக உருவாக்கப்படுகின்றன? யாருடயை நிகழ்ச்சி நிரலின்படி அதிமுக ஆட்சி செயல்படுகிறது? யார் ஆட்சி செய்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது என்ற கேள்வி ஒவ்வொரு தமிழர்கள் மனதிலும் தினம் தினம் எழுகிறது.

குளிர் காய நினைப்பது யார்

குளிர் காய நினைப்பது யார்

மாநில நிர்வாகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவும் நேரத்தில் அரசு முன்பு எதிர்ப்பு தெரிவித்த அத்தனை திட்டங்கள், சட்டங்கள் எல்லாவற்றிற்கும் அவசர அவசரமாக அனுமதியளிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த ஆட்சிக்கு ஏன் வந்திருக்கிறது? மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார்? என்ற கேள்விகள் எல்லாம் அடுக்கடுக்காக எழுகின்றன.

முயல் வேடம் போட்ட முதலைகள்

முயல் வேடம் போட்ட முதலைகள்

ஆகவே, அதிமுக அரசு பல வருடங்களாக எதிர்த்து வந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் பொறுப்பை வகிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில் ஜனநாயக மரபுகளுக்கு விரோதமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக, மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக, பினாமியாக, உண்மைகளைப் புரட்டிப் போட்டு ஆட்சி செலுத்த விரும்புகிறவர்களை, முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகளை, பொதுமக்கள் அடையாளம் கண்டு விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK leader and opposition leader MK Stalin has questioned why ADMK govt has taken U turn in vital issues like GST and others, which was opposed by CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X