For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசு அப்பட்டமான தலித் விரோத அரசாகச் செயல்படுகிறது: திருமா குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: மோடி தலைமையிலான பாஜக அரசு அப்பட்டமான தலித் விரோத அரசாகச் செயல்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்று ஓராண்டு முடிந்துவிட்டது. இந்த ஓராண்டில் நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அதுதான் இந்த ஆட்சியின் சாதனை என்று சொல்லவேண்டும்.

Modi govt is anti dalit: Thiruma

கடந்த மார்ச் மாதம் வரையிலான 300 நாள் பாஜக ஆட்சியில் நாடெங்கும் 600 வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றுள்ளன. அதில் 451 தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், 149 தாக்குதல்கள் கிறித்தவர்களுக்கு எதிராகவும் நடைபெற்றன என்றும், அந்தத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர் எனவும் 'சப்ரங்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாஜக அரசின் ஆதரவுபெற்ற இந்துத்துவ அமைப்புகளின் மீள்மதமாற்றம், மாட்டிறைச்சி உண்ணத் தடை முதலான மதவாத நடவடிக்கைகளால் தலித்துகள் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் பாஜக ஆளும் மகராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஹரியானா முதலான மாநிலங்களில் தலித்துகள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

நிலப் பறிப்பு மசோதாவை இரண்டுமுறை அவசரச் சட்டமாகப் பிறப்பித்த மோடி அரசு காங்கிரஸ் ஆட்சியின் கடைசிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட வன்கொடுமைத் தடுப்பு திருத்த அவசரச் சட்டத்தைக் காலாவதியாக விட்டது அதன் தலித் விரோதப் போக்குக்குச் சான்றாகும்.

தலித்துகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டிய நிதியில் மிகப்பெரிய மோசடியை மோடி அரசு செய்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டத்தின் (எஸ்சிஎஸ்பி) அடிப்படையில் 77,236 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசாங்கம் 30,850கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. பழங்குடியினர் துணைத் திட்டத்தின் (டிஎஸ்பி) அடிப்படையில் 40,014 கோடி ஒதுக்குவதற்கு பதிலாக வெறும் 19,980கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது மோடி தலைமையிலான பாஜக அரசு அப்பட்டமான தலித் விரோத அரசாகச் செயல்படுகிறது என்றே கூறத் தோன்றுகிறது.

இனிவரும் ஆண்டுகளிலாவது தனது போக்கை பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு நேர்ந்த கதிதான் பாஜக அரசுக்கும் ஏற்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாகக் கூறிக்கொள்கிறோம்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:

இதேபோல், மோடியின் ஓராண்டு கால ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஏமாற்றத்தையும், சுமையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவேன் எனக் கூறி கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளார். 12 மாதங்களில் 11 அவசர சட்டங்களை கொண்டுவந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்போம் என வாக்குறுதி அளித்தவர்கள், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டும் வகையில் பாஜகவினர் பேசிவருகின்றனர். காஷ்மீரில் அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினைவாத சக்திகள் தலைதூக்குவதை மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. பல்வேறு மாநிலங்களில் தலைதூக்கியுள்ள மாவோயிஸ்ட்கள், நக்சலைட்களை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் அவலம் தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 75 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்காக கொண்டுவரப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தையும், போதிய நிதி ஒதுக்காமல் மகளிர் சுயஉதவிக் குழுக்களையும் முடக்க நினைக்கின்றனர்.

முக்கிய சட்டங்கள் நிறைவேறும்போது பிரதமர் நாடாளுமன்றத்தில் இருப்பதில்லை. ஏற்கெனவே இருக்கும் திட்டங்களில் பெயர்களை மாற்றுவதிலும், திட்டங்களை முடக்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இந்த ஓராண்டில் புதிய திட்டங்கள் எதையும் வகுக்கவில்லை. தேர்தலின்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த மோடி, இப்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை குறைக்கும் வகையில் பேசி வருகிறார். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.

கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தையும், சுமையையும் மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Viduthalai Chiruthaigal party president Thirumavalavan has accused that the Modi government is anti dalit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X