For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிப்பழக்கத்தால் விபரீதம்: 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தினசரி கணவர் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்ததால், இரு குழந்தைகளை பாவாடை நாடாவினால் இறுக்கி கொன்றுவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கீழ்பாக்கம் பனபி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தோஷ். இவர் சரக்கு லாரிகள் மூலம் இரும்பு பொருட்களை கையாளும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மம்தா, 35. இவர்களது மகள் யாஷி,14, மகன் அனுஷ்,7 ஆகியோர் சேத்துப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

தற்கொலை மிரட்டல்

சந்தோஷ் தினமும் மது குடித்துவிட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையே ஏற்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி காலை சந்தோஷ் குடித்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து குடித்துவிட்டு வந்தால் 2 குழந்தைகளுடன் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று மம்தா மிரட்டி உள்ளார். இதை சந்தோஷ் கண்டு கொள்ளவில்லை.

குழந்தைகள் கொலை

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சந்தோஷ் பணிக்கு சென்று விட்டார். மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய யாசி அம்மா என்று ஓடி வந்தாள். அப்போது யாசியை படுக்கையறைக்கு அழைத்து சென்ற மம்தா, பாவாடை நாடாவால் அவளது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் 4 மணிக்கு வீட்டுக்கு வந்த மகன் அனுஷையும் பாவாடை நாடாவினால் கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளார்.

தற்கொலை முயற்சி

தனது கணவர் சந்தோஷ் சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தும் 30 மாத்திரைகளை எடுத்து விழுங்கியதுடன் கத்தியை எடுத்து தனது கையை வெட்டிக்கொண்டார். அதன் பின்னர் அக்கா கவுசல்யாவுக்கு போன் செய்து, "குழந்தைகளை பாவாடை நாடாவினால் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டேன். நானும் மாத்திரை தின்று விட்டு உயிருக்கு போராடுகிறேன் என்று கூறி அழுதார் மம்தா.

குழந்தைகள் மரணம்

இதைக் கேட்டு பதறிப்போன கவுசல்யா, தனது கணவருக்கு போனில் தகவல் கூறி உள்ளார். கவுசல்யாவின் கணவர், சந்தோஷூக்கு தெரிவித்துள்ளார். அங்கு மயக்க நிலையில் கிடந்த 2 குழந்தைகளையும், உயிருக்குப் போராடிய மம்தாவையும் மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 2 குழந்தைகளையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மம்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாக்குமூலம்

இந்த நிலையில், நேற்று அதிகாலை மம்தாவுக்கு மயக்கம் தெளிந்ததும், எழும்பூர் 2வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் ஜெயந்தி முன்னிலையில் மரண வாக்குமூலம் அளித்தார். அதன் பின்னர் கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து மம்தாவிடம் விசாரணை நடத்தினார்.

தினசரி குடி போதை

அப்போது கண்ணீருடன் மம்தா கூறியதாவது: எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகு அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து திருத்தி விடலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. பல தடவை கோபித்துக்கொண்டு சவுகார்பேட்டையில் உள்ள எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றேன். ஆனாலும் அவர் திருந்தவில்லை. கடந்த 7ம் தேதி மதியம் கணவர் குடித்து விட்டு வந்து வீட்டில் ரகளையில் ஈடுபட்டார்.

சாவதே மேல்

குடிகார கணவருடன் சேர்ந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்தேன். நான் மட்டும் செத்தால் எனது குழந்தைகள் அனாதையாகி மிகவும் கஷ்டப்படும். எனவே, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு நான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். அதன்படி, நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து 2 குழந்தைகள் வந்ததும் எனது மனதை கல்லாக்கிக்கொண்டு பாவாடை நாடாவால் 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கிக் கொன்றேன். பிறகு குழந்தைகள் இறந்ததை பார்த்து கதறி அழுதேன். 2 குழந்தைகளையும் கொன்ற என்னை தூக்கில் போடுங்கள் எனக் கூறி கதறி அழுதார்.

கொலை வழக்கு பதிவு

இதன் பிறகு 2 குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை தந்தை சந்தோஷிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகளின் உடலை பார்த்த சந்தோஷ், ‘எனது குடிப்பழக்கத்தால் அருமை குழந்தைகளின் உயிர் போய் விட்டதே' என கூறி கதறி அழுதார். போலீசார், மம்தா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தனர். குடியால் இரு குழந்தைகள் பலியான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Two children died of poisoning while their mother has been hospitalised for cut injuries on her wrist in what police believe to be a case of suicide on Thursday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X