For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏலத்திற்கு வரும் பி.ஆர்.பி.யின் சொத்துக்கள்.. மதுரையில் சலசலப்பு!

Google Oneindia Tamil News

ndian bank to auction lands belong to P R Palanichamy
மதுரை: மதுரை பி.ஆர். பழனிச்சாமிக்குச் சொந்தமான பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளதாக மதுரை இந்தியன் வங்கி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. மேலூர் பகுதிகளில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளிலும் சோதனை நடத்தியதின் அடிப்படையில் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது உறவினர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடுகள் தொடர்பாக 77 வழக்குகளை மதுரை கலெக்டர் மேலூர் கோர்ட்டில் நேரடியாக தாக்கல் செய்தார். இந்த வழக்குகளில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மீதுதான் அதிக வழக்குகள் பாயந்துள்ளன. பி.ஆர்.பியின் நிறுவனங்களும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மதுரையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் பி.ஆர்.பி. கிரானைட் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் அடமான கடன் வாங்கியதில் ரூ.149 கோடியை முறையாக திருப்பி செலுத்தவில்லை. எனவே அதற்குரிய அடமானம் வைத்த சொத்துக்களை ஏலம் விடுவதாக இந்தியன் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கடந்த 20 ம் தேதி நிலவரப்படி பி.ஆர்.பி. கிரானைட், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்தியன் வங்கிக்கு ரூ.149 கோடி கடன் நிலுவை தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதுகுறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அந்த தொகையை செலுத்த அவர்கள் முன்வரவில்லை. எனவே அடமானமாக எழுதி கொடுத்த நிலங்களை கையகப்படுத்தியுள்ளோம். அவற்றை ஏலத்தில் விட்டு கடன் தொகையை ஈடுகட்ட முடிவு செய்துள்ளோம். இதற்கான கோர்ட் அனுமதியும் கிடைத்துள்ளது என்று வங்கித் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மதுரை நகர் மற்றும் உத்தங்குடி, வண்டியூர், முகாம்பிகை நகர், இலந்தைகுளம், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பி.ஆர்.பிக்குச் சொந்தமான 135 ஏக்கர் நிலங்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் காலிமனைகள்தான் அதிகம்.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பல பிரிவுகளாக பிரித்து ‘‘இ-டெண்டர்'' மூலம் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு ஏலம் நடைபெறவுள்ளது.

கிரானைட் மோசடி தொடர்பான விசாரணையில் சகாயம் குழு இறங்கவுள்ள நிலையில் பி.ஆர்.பியின் நிலங்கள் ஏலத்திற்கு வருவது மதுரையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

English summary
An Indian bank branch in Madurai will auction lands belong to P R Palanichamy to get its dues back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X