For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்தடுத்து மரணம்.. செல்லா நோட்டால் மக்களுக்குத்தான் நஷ்டம்... ஜி.ராமகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

சென்னை: அதிர்ச்சி தரும் வகையில் அடுத்தடுத்து மரணம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் செல்லா நோட்டு நடவடிக்கையால் சாதாரண மக்களுக்கே பேரழிப்பு என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து சாதாரண மக்கள்தான் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார். வங்கியில் பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நின்றவர்கள் இதுவரை சுமார் 80 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Nearly 100 death in Bank queues: CPM condemns

இதுகுறித்து ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரிசையில் நின்று 100 பேர் பலி

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் சந்தித்துவரும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. நாடு முழுவதும், வங்கி வரிசையிலும், ஏடிஎம்வரிசையிலும் தன் சொந்தப் பணத்தை எடுப்பதற்காக நிற்கும் மக்களும், கடும் பணியாற்றும் வங்கி ஊழியர்களும் பல்வேறு இழப்புகளை சந்திக்கின்றனர். பீகாரில் நடைபெற்ற பச்சிளம் குழந்தையோடு, மரணங்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டது.

சுருண்டு விழுந்து சாவதுதான் இயல்பு நிலையா?

தமிழகத்திலும் கொடூரமான மரணச் செய்திகள் நம்மை வேதனையில் விம்மச் செய்கின்றன. தஞ்சை மாவட்டத்தில், அரசின் ஓய்கூதியப் பணத்தை வங்கியிலிருந்து பெறுவதற்காக வரிசையில் நின்ற சுப்பிரமணியம் என்ற விவசாயி, பரிதாபகரமாக மரணமடைந்து கேட்பாரற்று கிடந்ததாக இணையத்தின் வழியே வந்திருக்கும் வீடியோ பதிவு
காட்டுகிறது. இதுதான் மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வருகிற 'இயல்பு நிலையா'?. இத்தகைய சூழலில் மக்களைத் தவிக்கவிடுவதுதான் அரசின் பணியா? என்ற கேள்வி எழுகிறது. விவசாயி சுப்பிரமணியம் உள்ளிட்டு மரணமடைந்தோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

வாய்ப்பந்தல் வீரர் மோடி

செல்லா நோட்டு அறிவிப்பால் கறுப்பு பணமோ, சட்டவிரோத நடவடிக்கைகளோ எதுவும் தடைபடவில்லை. இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள பல்வேறு மோசடிகள் குறித்து விவாதிக்க பிரதமர் நாடாளுமன்றத்திற்கும் வரச் சொல்லி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. கேள்விகளுக்கு பதில் சொல்லாத பிரதமர், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வாய்ப்பந்தல் போடுவதை மட்டும் குறைவில்லாமல் செய்துவருகிறார். வரிசையில் நிற்போரெல்லாம் கருப்புப் பண முதலைகள் என்பதில் தொடங்கி நாட்டில் பிச்சைக்காரர்கள் கூட பணமற்ற பரிவர்த்தனைக்கு மாறிவிட்டார்கள் என்பது வரையில் அவரின் உரைகளுக்கும், களத்தில் நடந்துவரும் உண்மைகளுக்கும் தொடர்பில்லை.

கடுமையாக பாதிக்கப்பட்ட வணிகம்

விவசாயம், சிறுவணிகம், சிறு தொழில்கள், வாரச் சந்தைகள், வணிகத் தெருக்கள் என எல்லாவிடத்தும் வியாபாரம் பின்னுக்குச் சென்று, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவருகின்றன. மற்றொரு பக்கம், அரசின் பகட்டான எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, செல்லாதென அறிவிக்கப்பட்ட பணம் அனைத்துமே வங்கிக்கு வந்துவிடும் என்பது அதாவது இந்த நடவடிக்கையால் முறைகேட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. வங்கிகளிடம் வராக்கடன் வைத்துள்ள நபர்களின் பெயர்களையோ, வரிசெலுத்தாமல் ஏமாற்றி வெளிநாடுகளில் பணம் பதுக்கியிருப்போர் பெயர்களையோ வெளியிட அரசு தயாரில்லை.

அரசின் பொருளாதார பேரழிவு

தனது தோல்வியை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த நாடகத்தால் இழப்புகள் தொடர்வது பற்றி பிரதமர் மோடிக்கு எந்தக் கவலையுமிருப்பதாக தெரியவில்லை. இது அரசே ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பேரழிவு நடவடிக்கையாகும்.

அமர்த்தியா சென்னின் கடும் எதிரப்பு

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் 'அறிவுப்பூர்வமற்ற, மனிதத்தன்மையற்ற' நடவடிக்கை என கண்டித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற மற்றொரு பொருளாதார அறிஞர் பால் க்ரக்மன், எவ்வித பலனும் கொடுக்காத நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

மோசடி நடவடிக்கை வேண்டாம்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு எதேச்சதிகாரமான, அறிவுப்பூர்வமற்ற இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. பலனற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ள உயிர்களுக்கும், தொழில், விவசாய, வணிக பாதிப்புகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். பணப்புழக்கம் சீராகும் வரையில் தனது மோசடி நடவடிக்கையை விலக்கிக் கொள்வதுடன், உண்மையாகவே கருப்புப்பண மற்றும் கள்ளப்பண முதலைகளைப் பிடிக்க என்ன செய்ய வேண்டுமோ, அவற்றைச் செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

English summary
CPM condemned BJP government that nearly 100 people died due to stand in front of bank to get money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X