For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்விலிருந்து தமிழகத்து விலக்கு கோரி.. 27ம் தேதி திமுக மனித சங்கிலி போராட்டம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

NEET : DMK To Stage Human Chain Protest On July 27

நீட் தேர்வு தொடர்பான தீர்மானத்தில், "மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 'நீட்' என்ற நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாகத் தமிழகத்தின் மீது திணித்து இன்றைக்கு கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

21.12.2010ல் இந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த போது திராவிட முன்னேற்றக் கழக அரசு கடுமையாக எதிர்த்து, அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாதுக்கு கடிதம் எழுதி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் உடனடியாக வழக்குத் தொடர்ந்து 'நீட்' தேர்வுக்குத் தடை பெற்று, தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விடாமல் தடுத்தவர் கருணாநிதி.

அன்றைக்கு கழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீட் தேர்வு செல்லாது என்று 18.7.2013 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி இருந்த வரையிலும், மத்தியில் திமுக பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரையிலும், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விடவில்லை. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜகவும் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் அதிமுகவும் கூட்டணி அமைத்துக் கொண்டு இடஒதுக்கீட்டுக் கொள்கையை வேரறுக்கவும், மாநில உரிமைகளில் சமாதானம் செய்து கொள்ளவும், கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை தகர்க்கவும் இந்த நீட் நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாக மாணவர்கள் மீது நுழைத்துள்ளன.

இந்த நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக 1.2.2017 அன்றே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் அதிமுக அரசு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டது.

22.6.2017 அன்று தமிழக மாணவர்களின் நலனை காக்கப் போகிறோம் என்று கபட நாடகம் போட்டு ஒரு அரசாணையை வெளியிட்டு, அந்த அரசாணையும் இப்போது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் மாநிலப் பாடதிட்டத்தில் பிளஸ் டூ படித்த 4.2 லட்சம் மாணவர்களுக்கான 85 சதவீத இடங்கள் மருத்துவக் கல்லூரிகளில் பறிபோயிருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 4,675 மாணவர்கள் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டு, தமிழகத்தில் சமூக நீதிக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதுடன் மாணவர்களிடையே பாகுபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகவேதான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் மாநிலத்தின் ஜனநாயகப் பொறுப்பைச் சிறிதும் மதிக்காமல் மத்தியில் உள்ள பாஜக அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் ஈவு இரக்கமற்ற முறையில் விபரீத விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு 'விதிவிலக்கு' அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்ற 27ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை அறவழியில் அமைதியான முறையில் நடத்துவது என்று இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும், சமுதாய அமைப்புகளும், மாணவ- மாணவியரும் பெரும் அளவில் கலந்து கொண்டு தமிழகத்தின் ஒருமித்த உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 27ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திமுகவினர் மட்டுமல்ல, இளைஞர்களும், பெற்றோர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதி தேர்தலின் போதே ஆளும்கட்சி அழுத்தம் தர தவறிவிட்டது. துணை குடியரசுத்தலைவர் தேர்தல் வருகிறது இப்போதாவது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

English summary
DMK today said it would form a human chain on July 27, protesting against the Centre's NEET Exam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X