For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் கடன் தொல்லையை குறைக்க எந்த அறிவிப்புமே இல்லையா? ராமதாஸ் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கவோ, தொழில்துறையை வளர்ச்சியைடையச் செய்யவோ, பொருளாதாரத்தை பெருக்கி தமிழகத்தின் கடன் தொல்லையை குறைக்கவோ எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தின் 15-வது சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிக புகழுரைகள்

அதிக புகழுரைகள்

தமிழ்நாட்டில் 15-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் அதிகாரப்பூர்வ அலுவல்கள் ஆளுனர் ரோசய்யாவின் உரையுடன் இன்று தொடங்கியுள்ளன. சட்டப்பேரவைக்கு இது முதல் கூட்டத்தொடர் என்றாலும், தமிழக ஆளுநருக்கு இதுதான் கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் புகழுரைகள் நிறைந்துள்ளன. மற்றபடி மக்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. அ.தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்ட இன்னொரு ஆளுநர் உரை என்பதைத் தவிர இதற்கு வேறு எந்த சிறப்பம்சமும் இல்லை.

முதல்வருக்கு துதிபாடும் சடங்கு

முதல்வருக்கு துதிபாடும் சடங்கு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுனருக்கு அதிகாரம் கிடையாது என்ற போதிலும் மாநில சட்டப்சபைகளில் ஆளுநர்கள் ஆற்றும் உரைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதற்குக் காரணம் ஆளுநர் உரைகளின் போது அடுத்த ஓராண்டில் மாநில அரசு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளது என்பதற்கான முன்னோட்ட அறிவிப்புகள் இடம் பெறும் என்பது தான். ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் ஆளுநர் உரை என்பது கடந்த காலங்க்களில் அதிமுக, மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் செயல்படுத்தப்பட்ட அரைகுறை திட்டங்களை பாராட்டுதல், முதலமைச்சருக்கு துதிபாடுதல் உள்ளிட்டவை அடங்கிய சடங்காக மாறி விட்டது. இந்த ஆண்டிற்கான ஆளுநர் உரையும் இதற்கு விதிவிலக்கல்ல.

எதிர்பார்த்த அறிவிப்பு இல்லை

எதிர்பார்த்த அறிவிப்பு இல்லை

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான ஆளுநர் உரையில் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட 500 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும்? படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவர்களின் கல்விக்கடன்கள் எப்போது தள்ளுபடி செய்யப்படும்? என்பது குறித்த அறிவிப்புகள் தான். ஆனால், அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.

டாஸ்மாக் மூடல் எப்போது?

டாஸ்மாக் மூடல் எப்போது?

தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த மாதம் 23 ஆம் தேதி பொறுப்பேற்றது. அன்று முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு உள்ளிட்ட 5 ஆணைகளில் கையெழுத்திட்டார். அதற்காக இன்றைய ஆளுநர் உரையில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல்வரால் அறிவிக்கப்பட்ட 500 மதுக்கடைகள் மூடல் குறித்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.

கைவிடப்பட்டு விடுமோ?

கைவிடப்பட்டு விடுமோ?

மூடப்பட வேண்டிய மதுக் கடைகளின் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு வெளியாகாதது கவலை அளிக்கிறது. மூடப்படவுள்ள 500 மதுக்கடைகளின் குடிப்பகங்கள் ஆளும்கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டமே கைவிடப்பட்டு விடுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்களின் கல்விக்கடன் அறிவிப்பு தொடர்பாக ஆளுநர் உரையில் அறிவிக்கப்படாதது வேலையில்லா பட்டதாரிகளிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

காணல் நீராகும் லோக் அயுக்தா

காணல் நீராகும் லோக் அயுக்தா

ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள வேறு சில திட்டங்கள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்டவை என்ற போதிலும் அவை எந்த அளவுக்கு செயல்வடிவம் பெறும் என்பது சந்தேகமே. உதாரணமாக தமிழகத்தில் ஊழலை ஒழித்து, வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்த வசதியாக லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லோக் அயுக்தா சட்டத்தில் மத்திய அரசு தேவையான சட்டத் திருத்தங்களை செய்த பிறகு தான் தமிழகத்தில் லோக் அயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இப்போதைக்கு லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டத்தில் எந்த திருத்தத்தையும் செய்யப் போவதில்லை. எனவே, தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது காணல் நீராகவே இருக்கும்.

கிரானைட் - ஏமாற்று அறிவிப்புகள்

கிரானைட் - ஏமாற்று அறிவிப்புகள்

புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும், தாது மணல் விற்பனையை அரசே மேற்கொள்ளும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் நல்ல அறிவிப்பு போன்று தோன்றினாலும் அவை ஏமாற்று அறிவிப்புகள் தான். சகாயம் குழுவின் அறிக்கையை செயலிழக்கச் செய்யவும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தாதுமணல் கொள்ளை நிறுவன அதிபர் வைகுண்டராஜனை தங்களுக்கு ஆதரவாக கொண்டு வரவும் தான் இப்படி ஒரு அறிவிப்பை அதிமுக அரசு வெளியிட்டிருக்கிறதே தவிர, இதில் மக்கள் நலன் எதுவும் இல்லை.

ஜெயலலிதா தயாரா?

ஜெயலலிதா தயாரா?

தாதுமணல் மற்றும் கிரானைட் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதா அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் இவை தொடர்பான சகாயம் குழு அறிக்கையையும், ககன்தீப்சிங் பேடி குழுவின் அறிக்கைகளை உடனடியாக வெளியிட்டு அவற்றில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். இதற்குத் தயாரா? என்பதை ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும்.

மின்உற்பத்தி - நகைச்சுவை

மின்உற்பத்தி - நகைச்சுவை

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், விவசாயிகளின் வருவாயை பெருக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும், தூத்துக்குடி - மதுரை தொழில்தாழ்வாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நிறைவேற்றப்படாதவை தான். கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு மெகாவாட் மின் திட்டத்தைக் கூட செயல்படுத்தாத ஜெயலலிதா அரசு அடுத்த ஐந்தாண்டுகளில் 16,000 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்திச் செய்யப் போவதாக கூறுவது நகைச்சுவை.

இன்னொரு நகைச்சுவை

இன்னொரு நகைச்சுவை

தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றப்போவதாக 1967 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை திராவிடக் கட்சி அரசுகள் கூறிவருகின்றன. ஆனால், அவற்றுக்கு செயல்வடிவம் ஒடுக்கப்படாத நிலையில், இப்போது மீண்டும் அதே அறிவிப்பை மீண்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்ற அரசு முயல்கிறது. ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு கொலைகள் மற்றும் கொள்ளைகள் அதிகரித்து விட்ட நிலையில், தமிழகத்தில் சமூக விரோத சக்திகள் ஒடுக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பது இன்னொரு நகைச்சுவையாகும்.

மக்களை ஏமாற்றும் அறிக்கை

மக்களை ஏமாற்றும் அறிக்கை

உண்மையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கவோ, தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்யவோ, பொருளாதாரத்தை பெருக்கி தமிழகத்தின் கடன் தொல்லையை குறைக்கவோ எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை. அந்த வகையில் ஜெயலலிதாவை பாராட்டி மகிழ்ச்சிடையச் செய்யவும், மக்களை ஏமாற்றவும் வெளியிடப்பட்ட அறிக்கை தான் தமிழக ஆளுநர் உரை ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Pattali Makkal Katchi Founder Ramadoss said that Govener's speech had no announcement for increasing of employment and development of industry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X