அரசு அலுவலகங்களில் ஜெ. படம்.. இதுக்குதானாம்... தமிழக அரசின் அடடே காரணம்

மறைந்த முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதில் எந்த தவறும் இல்லை என சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதில் எந்த தவறும் இல்லை என சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைப்பதில் எந்த விதி மீறலும் சட்டவிரோதமும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம், பெயர் ஆகியவற்றை அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களிலும் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதி வழக்கறிஞர் பேரவையின் தலைவர் கே.பாலு, தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

அரசாணைப்படி வைக்கப்படுகிறது

"தமிழக பொதுத்துறை கடந்த 1970, 1989 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி, அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சிதம்பரனார், காயிதே மில்லத், இந்திரா காந்தி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள், தமிழக முதல்வர் ஆகியோரது புகைப்படங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைகளின் படி ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்படுகிறது.

படத்தை வைப்பதில் தவறில்லை

ஜெயலலிதா இறந்துவிட்டதால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தண்டனை விதிக்கவில்லை. எனவே, மறைந்த முதல்வர் என்ற வகையில் அவரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பதில் தவறு இல்லை. இந்த புகைப்படத்தை வைப்பதில் எந்த விதிமீறலும், சட்டவிரோதமும் இல்லை.

அம்மா என்பது பொது வார்த்தை

மேலும், அரசு திட்டங்களுக்கு 'அம்மா' என்று பெயர் சூட்டப்படுவதும் தவறில்லை. 'அம்மா' என்பது பொதுவான வார்த்தையாகும். எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு

இந்த பதில் மனுவை நீதிபதிகள் படித்து பார்த்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு, விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

English summary
Tamil nadu government says in Chennai High court that, there is nothing wrong in keeping Former Chief minister Jayalalitha's photo in government office.
Please Wait while comments are loading...