For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் மோசடி… பூசாரி தற்கொலை எதிரொலி: ஓ.பி.எஸ். உறவினர்களுக்கு கல்தா கொடுத்த ஜெ.,

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெரியகுளம்: கோவில் பூசாரி தற்கொலை, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் ஆகிய நெருக்கடிகளைத் தொடர்ந்து பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மற்றும் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த அவரது உறவினர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை காரணமாகவே இவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்து வந்தார். சமீபத்தில் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் போது ஓ.பி.எஸ். தம்பி ராஜாவின் ‘டார்ச்சர்' காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்து இறந்து விட்டார். இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது.

O.Panneerselvam brother Raja resigns his municipality chairman post

அ.தி.மு.க ஆளும் கட்சியாக அரியணையில் ஏறும் போதெல்லாம் ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுவது வழக்கம்.

அதிகாரிகளை மிரட்டுவது, வைகை ஆற்றுப்படுகையில் திருட்டு மணல் அள்ளி விற்பது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் ராஜா மீது உண்டு.

இந்நிலையில், பெங்களூரு தனி நீதிமன்றத்தால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 220 நாட்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் முடங்கியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவுக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்தார்.

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத போது எந்தெந்த துறைகளில் பைல்கள் கையெழுத்தானது, எவ்வளவு முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் மூலம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த குழுவினர் ஒவ்வொரு துறையில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் பற்றி தனியாக விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அந்த ரகசிய குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சென்னை வீடு உள்பட அவரது உறவினர்கள் பலரது வீடுகளில் காவல்துறையினர் ரகசியமாக அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொள்ளாமல் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா அதே 23ஆம் தேதி தனது 60வது கல்யாண நாளையொட்டி திருக்கடையூரில் குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டுள்ளார். இதற்கான ஏற்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்திருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக தலைமையிடம் இருந்து உடனே சென்னைக்கு வருமாறு ராஜாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சொத்துக்கள் வாங்கியது, பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பெரியகுளம் பூசாரி நாகமுத்து கொலை சம்பவம் தொடர்பான பைல்களை உடனே சென்னைக்கு கொண்டு வரும்படி பெரியகுளம் டி.எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டதாம். இதைத் தொடர்ந்து ராஜாவிடம் இருந்து பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக தலைமை எழுதி வாங்கியுள்ளது.

மேலும் சென்னையில் தங்கியுள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராஜாவை தொடர்ந்து சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜாவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் சக்திவாய்ந்த பினாமியாக விளங்கிய அவரது உறவினர்களான வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தார். அதுபோல் அவரது மகன் காசிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வீட்டு வசதி வாரியத்தின் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதிமுக தலைமையின் உத்தரவின் பேரில் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பி ராஜா மீதான நடவடிக்கையை தொடர்ந்து இன்னும் சில அமைச்சர்கள் மீது அதிமுக தலைமை கடும் கோபமடைந்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழல் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படுவதோடு அவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
O.Paneerselvam brother and Periyakulam municipalaity chairman Raja has resigned his post on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X