ஆர்.கே. நகரில் இரட்டை இலை எங்களுக்கே... தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் சந்திக்கும் பின்னணி!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையரை இன்று நேரில் சந்தித்து பேசப்போகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குத்தான் என்று கூறி வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் என்று சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் மல்லுக்கட்டுகின்றனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்காக தனிச்சின்னம் ஒதுக்கக் கோரி ஃபார்ம் பி, ஃபார்ம் ஏ ஆகிய தேர்தல் ஆவணங்களில் சசிகலா போடும் கையெழுத்து செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக என்பது உறுதியாகிவிடும். மக்களின் வாக்கும் இரட்டை இலைக்குக் கிடைக்கும். இரட்டை இலைக்காக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி போடும் சண்டை ஒருபக்கம் இருக்க தீபாவும் இரட்டை இலையை மீட்பேன் என்று கூறி வருகிறார். எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலைதான் அதிமுக வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

ஜெயலலிதா கையெழுத்து

ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தவரை வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரும் ஃபார்ம் பியில் கையெழுத்து போட்டு வந்தார். அவர் உடல் நலம் குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்ட போது கூட கை ரேகை வைத்தார். இதனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை கிடைத்தது.

 

 

சசிகலாவிற்கு சிக்கல்

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த நியமனமே செல்லாது என்று இப்போது ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் மீது தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைதான் சசிகலா அணிக்கு எதிர்காலத்தையே நிர்ணயம் செய்யும்.

அங்கீகார படிவம்

அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்கு தனிச்சின்னம் பெறுவதற்காக கட்சித்தலைவரோ, பொதுச்செயலாளரோ ஃபார்ம் பி அத்தாட்சி படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். அதை தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் அளிக்க வேண்டும். அதோடு ஃபார்ம் ஏவிலும் கையெழுத்து போட்டு அளிக்க வேண்டும்.

 

 

யாருக்கு அதிகாரம்

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டாலும் ஃபார்ம் ஏ, ஃபார்ம் பியில் கையெழுத்து போடும் அதிகாரம் யாருக்கு என்பதுதான் இப்போதைய கேள்வி. சசிகலா போடும் கையெழுத்து செல்லுமா என்பதே சந்தேகமாக உள்ளது.

கடைசி நாள்

சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்காக அளிக்கப்பட்ட விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் மீண்டும் பொதுக்குழு, செயற்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 23ஆம் தேதி முடிவடைகிறது. 24ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 27ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறும் நாள். 27ஆம் தேதி மாலைக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் ஃபார்ம் பி, ஃபார்ம் ஏவில் கையெழுத்து போட்டு அளிக்க வேண்டும். அதற்குள் பொதுச்செயலாராக சசிகலாவை மீண்டும் தேர்வு செய்ய முடியுமா என்பதே கேள்வி.

டெல்லியில் ஓபிஎஸ்

ஓபிஎஸ் அணி சசிகலாவிற்கு செக் வைத்தது ஒருபுறம் இருக்க டெல்லியில் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து பேச உள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவர் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று கூறி அதற்கான ஆவணங்களையும் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இரட்டை இலை

ஆர்.கே. நகரில் அதிமுகவிற்கு இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க கையெழுத்து பற்றிய சர்ச்சை புதிதாக சசிகலா அணிக்கு உருவாகியுள்ளது. இரட்டை இலை எங்களுக்குத்தான் என்று டிடிவி தினகரன் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார். ஓபிஎஸ் ஐ சுயேட்சையாக கேரளாவில் போட்டியிட்டு இரட்டை இலை வாங்கச் சொல்கிறார். முதலில் அவரது அணிக்கே இரட்டை இலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

English summary
Former chief minister O. Panneerselvam will knock on the doors of Election Commission seeking to allot the party’s Two Leaves symbol to his camp while declaring the appointment of V.K. Sasikala as general secretary as null and void.
Please Wait while comments are loading...