For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓயாத போராட்டம்... ஓடிப்போயிருச்சு ஒருவருஷம்! - அதிமுக 365

அதிமுக அரசு 2வது முறையாக ஆட்சியைப் பிடித்து ஓராண்டாக போகிறது. இந்த ஓராண்டில் 3 முதல்வர்கள் மாறியதுதான் சாதனை.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து ஓராண்டு நிறைவடையப்போகிறது. இந்த ஓராண்டில் சாதனையென்று எதுமில்லை. ஆனால் 3 முதல்வர்கள் மாறியிருக்கின்றனர்.

எம்ஜிஆருக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஜெயலலிதா சரியாக 4 மாதங்கள் மட்டுமே முழுதாக அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்தினார். அதற்குப் பின்னர் அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5ல் மரணமடைந்தார்.

ஜெயலலிதாவிற்குப் பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு முதல்வர்கள் மாறிவிட்டனர். போட்ட ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்களை பார்த்ததுதான் மிச்சம் இந்த ஓராண்டில் ஒரு சாதனையும் இல்லை என்கின்றனர் சாமானிய மக்கள். கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்ற போது ஓராண்டு சாதனையை நூறாண்டு பேசும் என்று 2012ஆம் ஆண்டு போஸ்டர் ஒட்டினார்கள். இப்போதோ நூறு நிமிடத்தில் கூறிவிடலாம்.

மே 23, 2016

மே 23, 2016

ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி பதவியேற்றது. இந்த வெற்றிக்காக ஜெயலலிதா தனது உடல்நலனையும் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து வாக்கு சேகரித்தார். அவருக்காகவே விழுந்த வாக்குகள்தான் இரண்டாவது முறையாக அதிமுகவை அரியணை ஏற்றியது. ஆனால் 5 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆள அவருக்குத்தான் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை.

பிரேக் இல்லாத பிரேக்கிங் நியூஸ்

பிரேக் இல்லாத பிரேக்கிங் நியூஸ்

செப்டம்பர் 21 மெட்ரோ ரயில் திட்டப்பணி விழாவில் ஜெயலலிதா பங்கேற்றதுதான் கடைசியாக அவர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி. செப்டம்பர் 22 இரவு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி இந்த நிமிடம் வரை ஒரே பிரேங்கிங் நியூஸ்தான். ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர்களின் முகம் கூட தமிழக மக்களுக்கு சரியாக தெரியாது ஆனால் இப்போது செல்லூர் ராஜூ என்றாலே யாரு தெர்மாகோல் புகழ் அமைச்சரா என்று கேட்கும் அளவிற்கு ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அந்த 4 மாதம்

அந்த 4 மாதம்

செப்டம்பர் 21, 2016 வரை தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அப்போதுவரை காணொலி ஆட்சி என்று எதிர்கட்சிகள் சொன்னாலும் ஒரு கட்டுப்பாடு இருந்தது. சட்டம் ஒழுங்கு இருந்தது.

அந்த 75 நாட்கள்

அந்த 75 நாட்கள்

செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 நள்ளிரவு வரை 75 நாட்கள் தமிழகத்தின் ஆட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியாத நிலையில் இருந்தது. ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டாலும் அரசு நடந்தது. அமைச்சர்கள்தான் கோவில் கோவிலாக அலைந்தனர்.

ஒபிஎஸ், ஈபிஎஸ்

ஒபிஎஸ், ஈபிஎஸ்

டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ். அவருக்கு கழுத்துக்கு மேல் கத்திதான். வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்சினை என அதை தீர்க்கவே நேரம் சரியாக இருந்தது. நிமிர்வதற்குள் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கி விட்டார்கள்.

ஜெ.,சமாதியே சரணம்

ஜெ.,சமாதியே சரணம்

பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் இருந்த ஓபிஎஸ், வீரவேஷமாக பேசினார். ரகசியங்களை அம்பலமாக்குவேன் என்றார். ஆனால் எதையும் சொல்லவில்லை. இன்னும் எத்தனை நாள் கழித்து அதை சொல்வாரோ தெரியவில்லை. அவருக்குப் பின்னர் ஆள் ஆளுக்கு ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்ய கிளம்பி விட்டனர்.

போராட்டகளமான தமிழகம்

போராட்டகளமான தமிழகம்

ஜல்லிக்கட்டு பிரச்சினை தொடங்கி,குடிநீர் பிரச்சினை, ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு, டாஸ்மாக் போராட்டம், என கடந்த ஜனவரி தொடங்கி ஒரே போராட்டகளமாக மாறியுள்ளது தமிழகம். இந்த போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் இப்போது ஆள்பவர்களின் கவலை. அதைவிட பெரும்கவலை ஒன்றிருக்கிறது அது ஆட்சியை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்று.

நூறாண்டு ஆளும்

நூறாண்டு ஆளும்

எனக்கு பின்னரும் அதிமுக 200 ஆண்டுகள் தமிழகத்தில் இருக்கும் என்றார் ஜெயலலிதா. ஆனால் அவர் மறைந்த இரண்டு மாதங்களுக்குள் கட்சி சிதறிப்போய்விட்டது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அதிமுக. கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு விட்டது.

ஆள்வது யார்?

ஆள்வது யார்?

சசிகலாவும், டிடிவி தினகரனும் ஜெயிலுக்கு போய் விட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை பினாமி அரசு என்றுதான் எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அமைச்சர்களோ எல்லா பைலும் மூவ் ஆகுதே என்று கூறுகின்றனர். மேஜையில் இருந்து பைல்கள் நகர்வது மட்டும்தான் வேலையா? வேறெதும் இல்லையா என்று கேட்கின்றனர் மக்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது யாருக்கும் தெரியவில்லையா?

அம்மாவின் அரசு

அம்மாவின் அரசு

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எனது தலைமையிலான அரசு என்று கூறி வந்தார். இப்போதே அம்மாவின் அரசு நடைபெறுகிறது என்று ஓபிஎஸ் அவருக்கு வந்த ஈபிஎஸ், அவரது அமைச்சரவை சகாக்கள் கூறி வருகின்றனர். ஆனால் இவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் நிஜமாகவே ஜெயலலிதாவின் அரசு நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஒவ்வொரு அதிமுக தொண்டருக்கும் எழாமல் இல்லை. ஒண்ணுமே புரியல... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்று மட்டுமே பாட தோன்றுகிறது. மிச்சமுள்ள 4 ஆண்டுகால ஆட்சியும் இப்படியேதான் நடக்குமா?

English summary
ADMK government will complete oneyear on May 23, TamilNadu witnessed protest events in Jallikattu, farmers protest, tasmac shop protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X