For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ டிஸ்சார்ஜ்... அப்பல்லோவுக்கும், அதிகார மையத்துக்கும் 'உள்ளே வெளியே' மோதல்?- Exclusive

By Oneindia Staff Writer
Google Oneindia Tamil News

-ஒன்இந்தியா டீம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இன்றுடன் 52 நாட்கள் ஆகின்றன. அப்பல்லோ அக்டோபர் 21 ம் தேதியிட்ட அறிக்கையில் சுமார் 15 ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் ஜெ வுக்கு சிகிச்சை கொடுப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஜெ மற்றவர்களுடன் இன்டரேக்ட் செய்கிறார் என்றும், அவரது உடல்நிலையில் கிராஜுவல் இம்புரூவ்மெண்ட் அதாவது கொஞ்சங் கொஞ்சமாய் முன்னேற்றம் உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது. அதன் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை.

இதனிடையே அக்டோபர் 28 ம் தேதி முன்னணி ஆங்கில நாளிதழில் வந்த செய்தியில் ஜெ மூன்று நாட்களில் சிசியூ விலிருந்து சாதாரண வார்டுக்கு வந்து விடுவார், எல்லாம் சரியானால் அவர் மூன்று வாரங்களில் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டது.

Oneindia Tamil's exclusive story on Jayalalithaa's health

அன்று மதியமே சென்னையில் செய்தியாளர்களிடம் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அப்பல்லோ சேர்மன் டாக்டர் பிரதாப் சி ரெட்டி ஜெ பூரண நலம் பெற்று விட்டார். ஜெ எப்போது வீடு திரும்புவார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இது விவரம் அறிந்தவர்களின் புருவங்களை உயர்த்தியது. ஒரு நோயாளி அதுவும் சிசியூ வில் உள்ளவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றால் பிரதாப் ரெட்டி நடத்துவது மருத்துவமனையா அல்லது லாட்ஜா என்ற கேள்வி எழுந்தது. இதன் பிறகு இந்த 8 நாட்களில் எந்த அறிக்கையும் அப்பல்லோவிலிருந்து வரவில்லை. ஜெ மூன்று நாட்களில் சிசியூ வில் இருந்து சாதாரண வார்டுக்கு வந்து விடுவார் என்ற அந்த ஆங்கில நாளிதழும் அதன் தொடர்ச்சியாக எந்த செய்தியும் வெளியிடவில்லை.

இதன் நடுவே அசாதரணமான ஒரு நிகழ்வாக அப்பல்லோ மருத்துவமனையின் முக்கியமான ஒரு அதிகாரி குறிப்பிட்ட சில செய்தியாளர்களை கடந்த இரண்டு நாட்களாக தொடர்பு கொண்டு பேசுகிறார். அப்பல்லோவின் ஒரு கருத்தரங்கம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுவதற்காக அவர் அழைக்கிறார். ஆனால் செய்தியாளர்கள் ஜெ வின் உடல் நலம் பற்றி கேட்கும் போது அவர் சொல்லுவது, 'சி.எம். ஏற்கனவே ஸ்பெஷல் வார்டுக்கு வந்துவிட்டார். இதற்கு முன்பு மருத்துவ அறிக்கைகளை சிஎம் சார்பாக அவரை சுற்றியிருந்தவர்கள் கொடுத்தனர். தற்போது சிஎம் நன்றாக இருப்பதால் அவர்தான் கொடுக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் எதுவும் கொடுக்கவில்லை' என்கிறார்.

கடந்த 50 நாட்களாக செய்தியாளர்களைப் பார்த்து ஓடிய அதிகாரிதான் இவர். 'இன்று வலிய வந்து இந்த தகவல்களை இவர் என்னுடன் பகிர்வது புரியாத புதிராக இருக்கிறது' என்கிறார் இந்த அப்பல்லோ அதிகாரியுடன் பேசிய ஒரு மூத்த செய்தியாளர்.

அதே சமயம் அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் சி பொன்னையன், ஜெ சிசியூ வில் இருப்பதாகவும், விரைவில் வார்டுக்கு வந்து விடுவார் என்றும், ஐஏஎன்எஸ் என்ற ஆங்கில செய்தி ஏஜன்சிக்கு பேட்டிக் கொடுக்கிறார். இதுவரையில் அப்பல்லோ ஒரு முறை கூட ஜெ சிசியூ வில் இருக்கிறார் என்று சொல்லாதபோது பொன்னையன் ஏன் இந்த தகவலை சொல்லுகிறார்? ஜெ சிசியூ விலிருந்து வார்டுக்கு வந்து விட்டார் என்று அப்பல்லோ அதிகாரி சில செய்தியாளர்களிடம் சொல்லும் அதே நேரத்தில்தான் முதலமைச்சர் இன்னமும் சிசியூ வில் உள்ளார் என்கிறார் பொன்னையன்.

இந்த செய்தி அஇஅதிமுக வின் அதிகார பூர்வ ஏடான 'நமது எம்ஜிஆர்' நாளிதழில் பேனராக நவம்பர் 10 ம் தேதி வருகிறது. ஆகவே என்னதான் நடக்கிறது அப்பல்லோவில்?

"அந்த குறிப்பிட்ட முன்னணி ஆங்கில நாளிதழின் உரிமையாளரும், நாடறிந்த பத்திரிகையாளருமான ஒருவர்தான் அப்பல்லோ குழுமத்திற்கு உதவி செய்கிறார். எப்படியென்றால் நேரடியாக தாங்கள் ஜெ வின் உடல்நிலை பற்றி அறிக்கையாக கொடுக்க முடியாதவற்றை அந்த நாளிதழ் மூலம் அப்பல்லோ வெளியிடுகிறது. அவ்வாறுதான் அக்டோபர் 21 மற்றும் 21 ம் தேதிகளில் செய்திகள் வந்தன. 28 ம் தேதி டிஸ்சார்ஜ் வரைக்கும் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. தற்போது அந்த நாளிதழ் சற்றே அடக்கி வாசிக்கிறது," என்கிறார் குறிப்பிட்ட நாளிதழிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவர்.

ஜெ எப்போது விரும்பினாலும் அவர் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று சொல்லும் பிரதாப் ரெட்டி அதனை ஏன் எழுத்துபூர்வமான அறிக்கையாகக் கொடுக்கவில்லை? அதே நேரத்தில் செலக்டிவ்வாக சில செய்தியாளர்களிடம் ஜெ சிசியூ விலிருந்து ஸ்பெஷல் வார்டுக்கு வந்து விட்டார் என்பதை ஏன் மருத்துவமனையின் சிலர் கூறுகிறார்கள்?

இது பற்றி ஓய்வு பெற்ற உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்:

"தற்போது நடப்பது அப்பல்லோ வுக்கும், ஜெ வை சுற்றியிருக்கும் அந்த குறிப்பிட்ட அதிகார மையத்திற்குமான குடுமிப்பிடிச் சண்டை. இன்றைய சூழ்நிலையில் ஜெ வை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அந்த குறிப்பிட்ட அதிகார மையம் விரும்பவில்லை. ஜெ வை இப்படியே வைத்துக் கொண்டிருக்க மருத்துவமனையும் விரும்பவில்லை. இதுதான் இரண்டு தரப்பும் மாறி, மாறி செய்திகளை தாங்கள் விரும்பிய வண்ணம் தங்களுக்குத் தோதான நாளிதழ்களில் வரவழைத்துக் கொண்டிருப்பது. இந்த மோதல் உக்கிரமான எல்லைக்கு போய்க் கொண்டிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது''.

ஜெயலலிதா அப்பல்லோவை விட்டு வெளியில் வரக்கூடாது என்பதில் அதிகார மையம் எந்த அளவு கருத்தாக இருக்கிறது என்பதற்கு இன்று நடந்த ஒரு சம்பவத்தையும் உதாரணமாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் இன்று நடந்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற அப்பல்லோ தலைவர் பிரதாப் சி ரெட்டி, 'ஜெயலலிதா நலமாகவே உள்ளார். அவர் எப்போது வீடு திரும்பலாம் என்பதை அவர்தான் முடிவு செய்வார்' என மீண்டும் கூறியுள்ளார். அவர் இதைச் சொன்னபோது மணி பகல். ஆனால் அதிகார மையத்துக்கு நெருக்கமான அந்த பத்திரிகையின் தமிழ்ப் பதிப்போ, "மீண்டும் ஜெயலலிதாவை காலை 8 மணிக்கே சிசியுவுக்கு அழைத்துப் போய் விட்டதாக", புளி கரைத்துள்ளது.

இதனிடையே 500, 1,000 ரூபாய் நோட்டு விவகாரம் ஜெ டிஸ்சார்ஜ் பற்றிய தகவல்களை கீழே தள்ளி விட்டது. இது ஜெ வை சுற்றியிருக்கும் அந்த அதிகார மையத்திற்கு கொண்டாட்டமாகி விட்டது. அப்பல்லோவுக்கோ திண்டாட்டமாகி விட்டது!

English summary
Here is an exclusive story on Jayalalithaa's health condition and her return to home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X