For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூதாகரமாகும் தலித் பூசாரி தற்கொலை வழக்கு… தம்பியால் தலைவலியில் தவிக்கும் ஓ.பி.எஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது என்று இதுநாள்வரை ஓ.பி.எஸ் வீட்டு முன் சொல்லி வந்த சாமக்கோடாங்கி இனி கெட்ட காலம் ஆரம்பிக்குது என்று குடுகுடுப்பை அடித்து குறி சொல்லிவிட்டாரோ என்னவோ? முன்னாள் முதல்வர் வீட்டில் நிலவரம் ஒரே கலவரமா இருக்காம்.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க... ஆனா இங்கே தம்பியாலதான் தலைவலியேவாம். தனக்கு துணையாக இருப்பாரு தம்பி அப்படின்னு ஓ.பி.எஸ் நம்பி இருக்க, தலையையே வாங்கும் தம்பியானதில் தடுமாறித்தான் போயிருக்கிறாராம் பச்சைப்புள்ளை பன்னீர் செல்வம். தலித் பூசாரி தற்கொலை வழக்கு விஸ்வரூபம் எடுத்ததுதான் பிரச்சினைக்கு காரணமாம்.

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் அதிமுக தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் தலைநகரில் குவிந்திருக்க அதே நாளில் திருக்கடையூரில் மணிவிழா நடத்தியதுதான் ஓ.பி.எஸ் தம்பி ராஜாவிற்கு சிக்கலாகிவிட்டது. இதுதான் தலைமையின் நெற்றிக்கண் திறந்துவிட்டதாம். வரச்சொல் சென்னைக்கு என்று உத்தரவு பறக்கவே பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு பறந்தாராம் ஓ.பி.எஸ் தம்பி ராஜா.

பதவியை ராஜினாமா செய் இல்லாவிட்டால் பறித்துவிடுவோம் என்று சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ராஜா பதவியை ராஜினாமா செய்து விட்டாராம். ராஜாவின் கைக்கு காப்பு மாட்டிவிட்டார்கள் என்று சிலர் கிளப்பிவிட இல்லை இல்லை அது பொய் என்று பேட்டியளித்தார் ராஜா.

நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ஏன்? ஏன் இப்படி சிக்கல் ஒருவேலை கட்டம் சரியில்லையோ? நம்ம வாழ்க்கையில ஏற்றம் இறக்கம் வர்றது சகஜம்தானே என்று ஓ.பி.எஸ் யோசித்தாலும் அவரைச் சுற்றியுள்ளவர்களே அவரைப்பற்றி மேலிடத்திற்கு புகார் தட்டி விடுகின்றனராம். அதனால்தான் பொதுப்பணித்துறை ஊழல் பூதாகரமாக ப்ளக்ஸ் பேனர் வைக்கும் அளவிற்கு போனதாம். இப்போது தலித் பூசாரி கொலை வழக்கும் தம்பி மீது வகையாக வந்துள்ளதால் கொஞ்சம் அப்செட் ஆகித்தான் போயிருக்கிறாராம் பன்னீர் செல்வம்.

தலித் பூசாரி தற்கொலை

தலித் பூசாரி தற்கொலை

பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து என்பவரின் தற்கொலைதான் சிக்கலின் மூல காரணமே. தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த பூசாரி, தனது தற்கொலைக்கு ஓ.ராஜாதான் காரணம் என்று கைப்பட கடிதம் எழுதி வைத்திருந்தார். அதனால் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கொடிபிடித்தனர் எதிராளிகள்.

கண்டுகொள்ளாத காவல்துறை

கண்டுகொள்ளாத காவல்துறை

அண்ணன் முதல்வராக இருக்கும் போது தம்பி மீது வழக்கா? என்று எண்ணிய போலீஸ் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் விடுவோமா என்று எதிர்கட்சிக்காரர்கள் களமிறங்க, தற்கொலை பற்றி விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு போட்டனர். இதையடுத்து காவல் துறையை நீதிமன்றம் கடிந்து கொண்டது.

சேதாரம் ஏற்படுத்திய ஆதாரம்

சேதாரம் ஏற்படுத்திய ஆதாரம்

இதையடுத்து நடந்த விசாரணையின்போது, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரே இதில் முகாந்திரம் இருப்பதாக கூறியதால், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. எதிர்பார்த்தது போலவே பிரச்சினை பூதகரமாகியுள்ளது.

முதன்முறையல்ல

முதன்முறையல்ல

ஓ.பி.எஸ் தம்பி ராஜா மீது புகார்கள் எழுவது முதல்முறையல்ல. இதுவரை பல புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ராஜா மீது நிலுவையில் உள்ளன. 2001ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் ராஜாவின் பல்வேறு புகார்கள் எழுந்தன. 2006ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்த ராஜா, 2011ல் மீண்டும் தனது விஸ்வரூபத்தை ஆரம்பித்து விட்டாராம். தமிழக முதல்வராக ஓ.பி.எஸ் அமைதியாக (ஒண்ணும் தெரியாதது மாதிரி) இருந்தாலும் ராஜா பெரியகுளத்தில் உட்கார்ந்து கொண்டு தனி ராஜாங்கமே நடத்தினாராம். எல்லாவற்றையும் போலீசார் துருவ ஆரம்பித்துள்ளனர்.

தம்பியால் தலைவலி

தம்பியால் தலைவலி

தலைமைப் பதவியே தேடி வந்தாலும் பணிவாக ஏற்றுக்கொண்டு பெயர் வாங்கியவர் ஓ.பி.எஸ் என்றால் அவருக்கு நேர் எதிர் அவரது தம்பி ராஜா. அண்ணன் அமைச்சராக இருந்தாபோதே ராஜா ஆடாத ஆட்டமில்லை என்பார்கள். அதுவும் முதல்வர் நாற்காலியில் அண்ணன் அமர்ந்த பின்னர் கேட்கவா வேண்டும்? கொஞ்சம் நஞ்சமல்ல என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

தேனி டூ சென்னை

தேனி டூ சென்னை

தென் மாவட்டங்களில் மணல் மற்றும் குவாரிகள் உள்பட பல்வேறு ஒப்பந்தங்களை ராஜா தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டும் தந்துள்ளார். சில குவாரிகளை அவரே பினாமி பெயரில் நடத்தி வருகிறார். தேனி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்பட பல்வேறு துறைகளில் ராஜாவைக் கேட்காமல் எதுவும் நடக்காதாம். இதை அப்படியே சென்னை வரை விரிவுபடுத்தி சென்றுள்ளார்.

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரகுமார்

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரகுமார்

பன்னீருக்கு தலைவலி தம்பியோடு மட்டும் நிற்கவில்லை மூத்த மகன் ரவிந்திரநாத் குமார் மூலமும் சிக்கல் வரும் என்கின்றனர். தேனி மாவட்ட இளைஞர்கள் இளம்பெண் பாசறை செயலாளராக உள்ள ரவீந்திரநாத் குமார்தான் கட்சியில் சகலமும் என்கின்றனர். சமீபமாக சினிமாவிலும் கால் ஊன்றியுள்ளாராம். வெளிநாட்டில் வெளியாகும் தமிழ்த் திரைப் படங்களை இவர்தான் வினியோகம் செய்து வருகிறார்.

குடும்ப அரசியல்

குடும்ப அரசியல்

இதேபோல ரவீந்திரநாத் குமாரின் மாமனார் கந்தசாமி முன்னாள் காவல் துறை அதிகாரி. ஓ.பி.எஸ் தங்கை கணவர் சரவணன் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைப் பார்ப்பவர். பன்னீர் செல்வத்தின் மகளை திருமணம் செய்த காசிராஜன், வீட்டு வசதி வாரிய அரசு வழக்கறிஞர். காசிராஜன் அப்பாவான செல்லப்பாண்டியன், மதுரை உயர் நீதிமன்ற அடிஷனல் அட்வகேட் ஜெனரல். இளைய மகன் பிரதீப் மனைவியின் உறவினர் தங்கராஜ், வங்கி விவகாரங்களைப் பார்க்கும் அரசு வழக்கறிஞர் என ஒரு பட்டாளமே ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி அதிகார மட்டத்தில் ஆட்டம் காட்டியவர்கள் என்கின்றனர். இப்போது ஓ.ராஜா சிக்கலில் சிக்கிய பிறகு இப்போது அனைவருக்குமே உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டதாக கூறுகின்றனர்.

கொள்ளைகள்..

கொள்ளைகள்..

மொத்தத்தில் ஓ.பி.எஸ். ரொம்ப நல்லவர் மாதிரி ஆக்டிங் செய்ய, அவரது குடும்பத்தினர் எல்லா வேலைகளையும் பார்த்துள்ளனனர். பொதுப் பணித்துறையில் காண்ட்ராக்ட், லஞ்சம், இடமாற்றம், நியமனம் என ஆரம்பித்து கொடைக்கானல் மலைப் பகுதியில் ஏராளமான சொத்துக்களை வளைத்தது இவர்கள் மீது ஏராளமான புகார்கள். இவர்களது சமீபத்திய சொத்து விவரதத்தை தோண்டினாலே போதும் என்கின்றனர்.

சொந்தத்தில் சூனியம்

சொந்தத்தில் சூனியம்

முத்துக்குமரசாமி தற்கொலை வழக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிக்கலை ஏற்படுத்தியது என்றால் தலித் பூசாரி தற்கொலை வழக்கு ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியை வகையாக சிக்கவைக்கும் என்கின்றனர். எது எப்படியோ தோழி மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் முதல்வருக்கு சிக்கல் என்றால் சொந்த குடும்ப உறுப்பினர்களாலேயே சிக்கலை சந்தித்துள்ளார் ஓ.பி.எஸ் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

English summary
Finance minister O Panner Selvam is in trouble as his younger brother Raja has been charged in many controversies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X