சதானந்த கவுடாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

சென்னை: சதானந்தகவுடாவை அமைச்சரவையிலிருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும். இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 18 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் ஒருபோக சம்பா சாகுபடியும் துவக்க முடியாமல் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. நேரடி விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு விதை முளைப்பதற்கு கூட தண்ணீர் இன்றி விதைப்பு நிலையிலேயே தொடர்கிறது.

 P.R.Pandian urges to remove Sadananda Gowda from cabinet

மேட்டூர் அணையில் திறக்கப்பட்டிருக்கிற தண்ணீர் குறைந்த அளவு விடுவிக்கப்படுவதால் இருக்கும் தண்ணீரைக் கொண்டு சாகுபடி பணிகளை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 27ம் தேதி வரையிலும் விடுவிப்பதற்கும், உடன் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு ஏற்படுத்த பிரதமருக்கு உத்தரவிட்டும், பிரதமரும், மத்திய நீர்வளத்துறையும் தொடர்ந்து மவுனம் காப்பதால் கர்நாடகாவில் மீண்டும் இனக்கலவரம் உருவாகுமோ தமிழர்கள் தாக்கப்படுவார்களோ என்ற பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் அமைச்சரவை, அனைத்து கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டங்களை எல்லாம் நடத்தி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றுவதும், தண்ணீர் விட மறுப்பதும், சட்ட விரோதமானது. இந்நடவடிக்கை எதுவும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை கட்டுப்படுத்தாது.

இன்றைய நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழ் ஆக்கப்பட்ட உடனேயே 2013ம் ஆண்டு முதல் இரு மாநில அணைகளின் நிர்வாக அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் பிரதமருக்கு கண்டனம் தெரிவித்தது. எந்த சட்ட அதிகாரமும் இல்லாத நிலையில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மத்திய நீர்வள ஆணையம் உடனடியாக தண்ணீரை விடுப்பதற்கும், பிரதமர் காவிரி மேலாண்மைவாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு உடன் ஏற்படுத்துவதற்கும். அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பிரதமர் காலம் கடத்துவாரேயானால் கர்நாடகாவில் மீண்டும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்படுமேயானால் அதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.

மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கோடும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், தமிழகத்திற்கு தண்ணீரை விடுவிக்க கூடாது என்றும் காவிரி மேலாண்மைவாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுவை அமைக்க கூடாது என்றும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும், நீர்வளத்துறை ஆணையக அதிகாரிகளையும் மிரட்டுவதும், அச்சுறுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அவசர புகார்மனு ஒன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்.

பிரதமர், இந்திய ஒற்றுமை, ஒருமை பாட்டினை நிலைநிறுத்த சதானந்தாகவுடாவை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும். இதனை தமிழக முதல்வர் வலியுறுத்தவேண்டும். தமிழக அரசு காலம் கடத்துமேயானால் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும், டெல்லி அழைத்துச்சென்று தமிழகத்தை பாதுகாக்க நீதி கேட்டும் போராட்டத்தை பிரதமர் வீட்டின் முன் விரையில் துவங்குவோம்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Farmers leader P R Pandian urges PM modi to sack Sadananda Gowda from cabinet
Please Wait while comments are loading...

Videos