For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒருபுறம் சுரங்க மெட்ரோ ரயில் தொடக்கம், மறுபுறம் நியாயமான கோரிக்கைகளுக்காக பஸ் ஸ்டிரைக்!

சென்னை மாநகரில் சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கிய நிலையில் மறுபுறம் நியாயமான கோரிக்கைகளுக்காக பஸ் ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது.

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

சென்னை மாநகரில் ஒரு நாள் மெட்ரோ ரயில் போக்குவரத்தின் புதிய வழித்தடம் தொடங்கிய சில மணி நேரத்தில் அரசுப் பேருந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியிருக்கிறது.

சென்னை மாநகரில் முதல் முறையாக சுரங்கவழி ரயில் பாதை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. அதே தினம் அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திங்கள் (மே 15) முதல் வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.

எனினும் அரசுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வதற்கு போக்குவரத்துத் தொழிளாளர் சங்கங்கள் இசைந்துள்ளது வரவேற்கத் தக்கது. தங்களது 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொழிலாளர் சங்கங்கள் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தின.

Paa Krishnan's Article on Transport workers Strike

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம், நிலுவைத் தொகை உள்ளிட்ட பணப் பயன்கள் மொத்தம் ரூ 7000 கோடி தரப்படவில்லை என்பது அதிர்ச்சியான தகவல். ஆனால், ரூ. 750 கோடி மட்டும் நிலுவைத் தொகை தரப்படும் என்று அறிவிப்பது மிகவும் குறைவு என்று தொழிலாளர்கள் கூறுவதும் நியாயமே.

ரூ. 7000 கோடியைத் தராமல் இருக்கும் போது, ரூ. 2000 கோடியைத் தந்தால் மட்டுமே வேலைநிறுத்தம் வாபஸ் என்பது தொழிலாளர்கள் எவ்வளவு அனுசரித்துப் போகிறார்கள் என்பதையும் அரசின் மீது சந்தேகத்தையும் காட்டுகிறது. 1972ம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உதயமானது. நேரடி அரசு துறையாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. தற்போது நடத்துநர், ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில், 1.43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

1977ல் ஊதிய வரன் முறை கேட்டு தொழிலாளர்கள் 8 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு, முதல் முறையாக ஊதிய ஒப்பந்தத்தை போட்டது.

Paa Krishnan's Article on Transport workers Strike

இதில் 7 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மாற்றியமைக் கவும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

அதிமுக அரசு 1980, 1983, 1986 வரையிலான ஊதிய ஒப்பந்தத்தில், தொழிலாளர்களுக்கு 7 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வாக அளித்தது. அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 1989, 1995, 1998ம் ஆண்டில் போட்ட ஒப்பந்தத்தில் 7 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக உயர்த்தி வழங்கியது.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளையும் வழங்கியது. அடுத்து வந்த அதிமுக அரசு 1992 மற்றும் 2003ம் ஆண்டில் 9 சதவீதமாக ஊதிய உயர்வை குறைத்தது. மேலும், 2001ல் போட வேண்டிய ஒப்பந்தத்தை காலம்தாழ்த்தி 2003ல் போட்டது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

திமுக அரசு 2007, 2010ல் தொழிலாளர்களின் நலனுக்காக ஒரேயடியாக 40 சதவீதமாக ஊதியத்தை உயர்த்தியது. இந்த 11வது ஊதிய ஒப்பந்தம், 2013 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏற்கனவே பல்வேறு பணப்பலன்கள் கிடைப்பதில் குளறுபடி இருப்பதாகப் புகார் உண்டு.

இந்நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் கேள்விக்குறியாக இருப்பதால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 12வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பென்சன் திட்டத்தில் பிடித்தம் செய்த பணம், கடந்த 2 ஆண்டாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கவில்லை.

Paa Krishnan's Article on Transport workers Strike

போக்குவரத்து தொழிலாளர்களின் பென்ஷன், பி.எஃப் உள்ளிட்ட தொகைகளை அவர்கள் அனுமதியின்றி தமிழக அரசு எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டது என்ற புகார் அரசு மீதான சந்தேகத்தை வலுவாக்குகிறது. ஊழியர்கள் திருப்பிக் கேட்கும்போது "பேசித் தீர்த்துக்கொள்ளலாம்" என்று அரசு தரப்பில் யோசனை முன்வைப்பது முறையற்றது.

இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான். அதே சமயம் தாங்கள் சேமித்த பணத்தை அரசிடம் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலையையும் சிறிது யோசித்துப் பார்க்கும்போதுதான் அவர்களது வேலைநிறுத்தத்தில் உள்ள நியாயம் புரியும். போக்குவரத்துத் தொழிலாளர்களும் பொதுமக்களின் ஒரு பகுதிதானே. இவர்களுக்கு யார் துணை நிற்பது?

இன்று போக்குவரத்து ஊழியர்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்திய அரசாங்கம் நாளை மற்ற ஊழியர்களின் பணத்தையும் அதே போல் கையாளாது என்பது எப்படி நிச்சயமாகும்?

English summary
Columnist Paa Krishnan says that the strike called by Transport workers is very reasonable, as they were allegedly betrayed by government authorities by using the money deposited by workers. It is unfair on the part of Transport department to invite the workers for table talk instead of telling the real position.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X