For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள்தொகைக்கேற்ப ஜாதிவாரியாக இடஒதுக்கீடு வழங்குவதே சரியானது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் தொகைக்கு ஏற்ப ஜாதிவாரியாக இடஒதுக்கீடு வழங்குவதுதான் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமையும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

குஜராத்தில் பட்டிதார் வகுப்பைச் சேர்ந்த படேல் சமுதாயத்தினர் தங்களை பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. முன்னேறிய பிரிவைச் சேர்ந்த படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டுமா...வேண்டாமா? என்பது பற்றி நாடு முழுவதும் விவாதம் தொடங்கியுள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியமாகியுள்ளது.

PMK calls for proportionate reservation

கல்வி அதிக செலவு பிடிக்கும் ஒன்றாகவும், அரசு வேலைவாய்ப்பு என்பது அரிதாக வழங்கப்படும் ஒன்றாகவும் மாறி விட்ட நிலையில், இட ஒதுக்கீடு என்ற ஒன்று இருந்தால் தான் கல்வி, வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதைக்காரணம் காட்டி தான் படேல் வகுப்பினர் ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞரின் தலைமையில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

1981 ஆம் ஆண்டில் குஜராத்தில் முதலமைச்சராக இருந்த மாதவ்சிங் சோலங்கி, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது, அதற்கு பட்டிதார் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இப்போது அதே சமூகத்தினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என போராட வந்திருப்பது சமூக நீதியின் தேவை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது.

ஆனால், படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு கடைபிடித்து வரும் அதே 49.5% இடஒதுக்கீட்டைத் தான் குஜராத் அரசும் கடைபிடிக்கிறது.

படேல் சமூகத்தினரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வந்தால், அப்பிரிவில் ஏற்கனவே உள்ள சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் படேல் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கினாலோ, பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து அதற்கான இட ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தாலோ அது உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50% உச்சவரம்பை தாண்டி விடும் என்பது தான் குஜராத் மாநில அரசின் வாதம் ஆகும்.

சட்டரீதியாக பார்த்தால் இது சரியாக தோன்றினாலும், சமூக நீதியின் வழியாக பார்க்கும் போது இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பிரச்சினைக்கான தீர்வை 1928 ஆம் ஆண்டிலேயே தமிழகம் வழங்கியிருக்கிறது. நீதிக்கட்சி ஆதரவுடன் அமைந்த சுப்பராயன் தலைமையிலான அரசில் கல்வி அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் 1921 ஆம் ஆண்டின் 1021 ஆவது அரசாணையில் சில திருத்தங்களைச் செய்து வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இம்முறையில் 100% இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் கிட்டத்தட்ட அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டது.

இந்த வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை தந்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். இவ்வாறு முன்னேறிய வகுப்பினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்கும் 100% வகுப்புவாரி இடஒதுக்கீட்டை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது தான் குஜராத்தில் இப்போது எழுந்துள்ள சிக்கலுக்கு தீர்வாக அமையும்.

இந்தத் தீர்வைத் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். இந்த முறையில் மற்ற பிரிவினருக்கும் அவர்கள் கேட்பதற்கு முன்பே இடஒதுக்கீட்டு வழங்கப்படும் என்பதால் எதிர்காலத்தில் சிக்கல் எழாது. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரே தடை உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% உச்சவரம்பு தான்.

கேசவானந்த பாரதி வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பும், அதனடிப்படையில் இந்திரா சகானி வழக்கில் இட ஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தான் சமூக நீதிக்கு தடையாக உள்ளன. இவை அகற்றப்பட வேண்டும்.

சமூக நீதியை அளந்து வழங்க அது ஒன்றும் கடைச்சரக்கல்ல. அனைத்து பிரிவினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் 100% இட ஒதுக்கீடு வழங்குவதே உண்மையான சமூக நீதியாக இருக்கும். இதை உச்ச நீதிமன்றத்திற்கு புரிய வைக்க வேண்டும். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள் தொகை எத்தனை விழுக்காடு உள்ளதோ, அவ்வளவு இட ஒதுக்கீட்டு வழங்கலாம் என்பது தான் இந்த தீர்ப்பில் பொதிந்திருக்கும் பொருள் ஆகும். அதன்படி பார்த்தால் வகுப்புவாரி இடஒதுக்கீடு முறைக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகும். மேலும், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கும் மிகக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியதன் நோக்கம் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான். அனைவருக்கும் உரிய அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, ஒரு பிரிவினருக்கு பாதிப்பு என்ற பிரச்சினை எழ வாய்ப்பில்லை.

எனவே, நாடு முழுவதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து பொது விவாதத்தை மத்திய அரசு தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதியரசர்கள், சமூக நீதி ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்? சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்? என்பது குறித்து பரிந்துரை பெறலாம். அதற்கு முன்பாக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறை தொடர்பான கொள்கை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
The PMK founder Dr Ramadoss has demanded that the reservations should be in proportion to their population, on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X