For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமக வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மாநாட்டுக்கு தடை விதிக்க முயல்வதா? - ராமதாஸ் கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாடு வரும் 14-ஆம் தேதி சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பா.ம.க. மாநாட்டுக்கு உயர்நீதிமன்றம் மூலமாக தமிழக அரசு இடைக்காலத் தடை பெற்றிருக்கிறது. அதிமுக அரசின் இந்த சதி கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடந்த 15.02.2015 அன்று சேலத்தில் நடந்த பா.ம.க. மண்டல மாநாட்டில் அறிவிக்கப்பட்டார். அதன்பின் தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் மொத்தம் 8 மண்டல மாநாடுகள் மிகச் சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 14.02.2016 அன்று வண்டலூரில் மாநில மாநாடு நடத்தப்படும் என்று 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

pmk founder ramadoss Condemned to state government for court stays vandalur conference

மண்டல மாநாடுகளின் தொடர்ச்சியாக மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தவும், மாநாட்டில் பங்கேற்கவும் மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் தயாராகி விட்டனர். தமிழ்நாடு, புதுவை முழுவதும் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பா.ம.க. மாநாட்டுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி, மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் 29 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

அதைத்தொடர்ந்து மாநாட்டுப் பணிகள் முடுக்கி விடப்பட்டு 60% பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் 3 நாட்களில் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பா.ம.க. மாநாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழக அரசு திடீரென மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை பெற்றிருக்கிறது. நாளை மறுநாள் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நீதிபதிகள், அதுவரை மாநாட்டுத் திடலில் எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

ஜனநாயக நாடான இந்தியாவில் மாநாடு உள்ளிட்ட கொள்கை பரப்பும் நிகழ்வுகளை நடத்துவது அரசியல் கட்சிகளின் கடமையும், உரிமையும் ஆகும். அதற்கு தடை விதிக்க தமிழக அரசு துடிப்பது முறையல்ல. கடந்த ஓராண்டில் பா.ம.க. சார்பில் மொத்தம் 8 மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அனைத்து மாநாடுகளிலும் லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்ட போதிலும், அதனால் மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ துளியும் பாதிப்பு ஏற்படவில்லை.

மாறாக பா.ம.க.வுக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை மாநாடுகள் பறைசாற்றி வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத அ.தி.மு.க. மக்கள் மன்றத்தில் பா.ம.க.வை நேரடியாக வீழ்த்த முடியாது என்பதால் புறவாசல் வழியாக மாநில மாநாட்டுக்கு இடைக்காலத் தடை பெற்றிருக்கிறது.

மாநாட்டுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக இருந்தால் அடுத்த நாளே செய்திருக்கலாம். ஆனால், மாநாட்டுக்கு 3 நாட்கள் முன்பாக மேல்முறையீடு செய்து தடை பெறுவது நேர்மையான செயலா? என்பதை ஆட்சியாளர்களே சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் நலன் சார்ந்த காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாத நிலையில் அதை விரைவுபடுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டு தடை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு 22 மாதங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், அதை விரைவுபடுத்தி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசால் முடியவில்லை. உழவர்களை பாதிக்கும் கெயில் எரிவாயுக் குழாய் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரு ஆண்டுகள் தாமதமாக விசாரணைக்கு வந்த போது தமிழகத்தின் சார்பில் வாதாட மூத்த வழக்கறிஞரை அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பும் அதிமுக அரசுக்கு இல்லை.

பா.ம.கவின் மாநில மாநாட்டுக்கு தடை கோரும் வழக்கில் மட்டும் தீவிரம் காட்டி, அரசின் தலைமை வழக்கறிஞரை அனுப்பி தடை வாங்க துடிக்கிறது என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியைக் கண்டு ஜெயலலிதாவும், அவரது கட்சியும் எந்த அளவுக்கு அச்சமடைந்துள்ளனர் என்பதை உணரலாம்.

எது எப்படியாக இருந்தாலும் சட்டத்தையும் நீதியையும் மதிக்கும் கட்சி என்ற முறையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி மதிக்கிறது. இதில் இறுதி முடிவு பா.ம.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறது. இந்த மேல்முறையீடு மனு வரும் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிறகு பா.ம.க. மாநில மாநாடு குறித்த முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
The Madras High Court today set aside an order of a single judge bench which granted permission to the PMK to hold the party's State conference in Vandalur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X