For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டத்தை மதிக்காத முதல்வர் ஓ.பி.எஸ் மீது 356 ஐ பயன்படுத்துக: ஆளுநரிடம் பாமக மனு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத முதல்வர் பன்னீர்செல்வம் மீது 356-ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் ரோசய்யாவுக்கு பாமகவினர் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக தலைவர் ஜி.கே.மணி அளித்துள்ள மனு விபரம்:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான ஜி.கே. மணி எனும் நான், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25.03.2015 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அலுவல் ரீதியாக வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறியது குறித்து மேதகு ஆளுநர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

PMK seeks action against OPS

"உன்னத தலைவியாகிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எழுச்சிமிகு ஆற்றலினால் வழிநடத்தப்படும் இந்த அரசு கடினமான நிதிச் சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை முனைந்து செயல்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. தமிழக மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் மட்டுமே லட்சியமாகக் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டும் வழியில் அயராது பயணிக்கும் அதே வேளையில், மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

"தமிழக சட்டசபையில் கடந்த 25.03.2015 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அலுவல் ரீதியாக வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறியுள்ளார். அவரது செயல்பாடுகளால் தமிழகத்தில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடுகள் தோல்வியடைந்து விட்டன.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட விவரத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கும், மாநில ஆளுநராகிய உங்களுக்கும் பெங்களூரு நீதிமன்றம் முறைப்படி தெரிவித்தது. பின்னர் இந்தத் தகவல் உங்கள் இருவருக்கும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெ. ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர், மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு 29.09.2014 அன்று முதலமைச்சராக பதவியேற்பதற்கான உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (3) பிரிவின் கீழ் நீங்கள் செய்து வைத்தீர்கள்.

மேதகு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதி மொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது" என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் மூலம், அவருக்கு செய்து வைக்கப்பட்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அவர் மீறியிருக்கிறார்; அரசியலமைப்புச் சட்ட விதிகளை அவமரியாதை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்றாவது நபர் ஒருவரிடம் நிதிநிலை அறிக்கை அம்சங்கள் குறித்த ரகசிய தகவல்களை நேரடியாக தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம், தமிழக அரசு நிர்வாகத்தை, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்றவாறு நடத்த முடியாது என்ற மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதையே காட்டுகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான மூன்றாவது நபர் ஒருவரிடம் மாநில நிதிநிலை அறிக்கை குறித்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வது இந்திய அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்ட விதிகளின்படி குற்றமாகும். இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கான பணியை செய்வதில் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலை கோர வேண்டிய கட்டாய சூழல் எதுவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இல்லை.

நிதிநிலை அறிக்கை தயாரிப்புடன் அலுவல் ரீதியாகவோ, அல்லது நிர்வாக ரீதியாகவோ எந்த வகையிலும் சம்பந்தப்பட்டாத ஜெயலலிதாவின் உதவியுடனும், வழிகாட்டுதலுடனும் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதன் மூலம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியிருக்கிறார். இதற்காக, மனநிறைவு தத்துவத்தைப் பயன்படுத்தி முதலமைச்சரை ஆளுநர் தகுதி நீக்கம் செய்ய முடியும், ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தன்விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சரை பதவிநீக்கம் செய்ய முடியும். முதலமைச்சரின் நடவடிக்கையால் தமிழகத்தில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடு தோல்வியடையும் நிலை ஏற்பட்டிருப்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தன்விருப்ப அதிகாரத்தின்படியும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக ஆளுனருக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மனு அனுப்பியுள்ளார்.

இந்த மனுவின் நகல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று பாமக தலைவர் ஜி.கே. மணி குறிப்பிட்டுள்ளார்.

English summary
PMK has urged the Governor to take action against CM O Pannerselvam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X