For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெறும் விளம்பரத்துக்காகவே உலக முதலீட்டாளர் மாநாடு.. எந்த பயனுமே ஏற்படுத்தாது: டாக்டர் ராமதாஸ்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு நடத்த உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது விளம்பரத்துக்கானது மட்டுமே; இதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இம்மாநாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால், அதைவிட அதிக முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அரசே செய்திகளை கசிய விடுகிறது.

PMK slams TN's Global Investors Meet

இவை அனைத்தும் வெற்று முழக்கங்கள் என்பதைத் தான் கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.46,602 கோடி தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக சட்டப் பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கமணி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் எந்தெந்த நிறுவனங்கள் எங்கெங்கு என்னென்ன தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன? அவற்றில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி பா.ம.க. வலியுறுத்தி இருந்தது. ஆனால், இன்று வரையில் தமிழக அரசிடமிருந்து இந்த வினாவிற்கு பதில் வரவில்லை.

உண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் தமிழகத்தில் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்ட முதலீட்டின் மதிப்பு ரூ.29,558 கோடி மட்டும் தான். இதில் கூட ரூ.10,660 கோடி மட்டுமே இதுவரை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை கடந்த 03.02.2014 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ரூ.42,400 கோடி முதலீடு செய்ய 16 நிறுவனங்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். ஆனால், அதன்பின் 18 மாதங்கள் ஆகி விட்ட நிலையில், சூரிய ஒளி மின் திட்டத்திற்காக ரூ.4536 கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்திட்டதைத் தவிர, இதுவரை ஒரு பைசா கூட முதலீடு வரவில்லை.

அ.தி.மு.க. ஆட்சி 6 மாதங்களில் முடிவுக்கு வரப் போகிறது. அதற்கு முன்பாக ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துவிட்டோம் என விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும் தான் இந்த மாநாடு பயன்படுமே தவிர வேறு எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த நோக்கியா, பாக்ஸ்கான் உள்ளிட்ட தொழிற்சாலைகள் வெளியேறிவிட்டன. இவற்றில் பாக்ஸ்கான் ரூ.30,000 கோடி செலவில் மராட்டியத்தில் தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த பல வாகன உதிரிபாக நிறுவனங்கள் ஆந்திராவில் ஸ்ரீசிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளன.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி முதலீடு வெளியேறியிருக்கிறது.

விளம்பரத்திற்காகவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஜெயலலிதா தலைமையில் இம்மாநாடு நடத்தப்படவேண்டும் என்பதற்காகவே, 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. தொழில் வளத்தைப் பெருக்குவதில், அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், இம்மாநாடு எப்போதோ நடத்தப்பட்டிருக்கும்.

எந்த பயனும் ஏற்படுத்தாத ஒரு மாநாட்டிற்காக பல நூறு கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி முதலீடு குவிந்து விட்டதாக மக்களை ஏமாற்றலாம் என ஜெயலலிதா கருதினால் ஏமாற்றமே பரிசாக கிடைக்கும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss slammed the Tamilnadu gov'ts Global Investors Meet in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X