For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு.. பா.ம.க. நிபந்தனை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஒரு மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று பாஜக தலைமை அறிவித்தால் அதையேற்று அக்கட்சியின் வேட்பாளருக்கு பாமக ஆதரவளிக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி டெல்லியிலும், மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கும்படி அக்கட்சித் தலைவர்கள் கோரினர். இதுகுறித்து பாமகவின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் விவாதித்து தமிழகத்திற்கு நன்மை அளிக்கும் முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

1991- ஆம் ஆண்டு முதல் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்நாடுதான் திகழ்கிறது என்றாலும், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை தடுப்பதோ, இழந்த உரிமைகளை மீட்பதோ சாத்தியம் ஆகவில்லை. இதற்குக் காரணம் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாக திகழ்ந்த அதிமுகவும், திமுகவும் தமிழகத்தின் நலனை விட தங்களின் நலனை முக்கியமாகக் கருதி சுயநலத்துடன் செயல்பட்டது தான்.

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை வழங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளும், 5 மாதங்களும் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், அத்தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவில்லை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏழரை ஆண்டுகளும், இப்போதைய ஆட்சியில் மூன்று ஆண்டுகளும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அணை கட்டுவதற்கு தடை

அணை கட்டுவதற்கு தடை

மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்த இரு கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடியை மூன்று முறையும், நீர்வள அமைச்சர் உமாபாரதியை இரு முறையும் பாமகவின் மக்களவை உறுப்பினர் அன்புமணி சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்த ஒப்புக்கொண்ட மத்திய அரசு, கர்நாடகத்தின் அழுத்தத்திற்கு பணிந்து அடுத்த 3 நாட்களில் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு ஆணையிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து விட்டனர். அதுமட்டுமின்றி, நடுவர் மன்றத் தீர்ப்பையே செல்லாததாக்க நிரந்தரமான ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மத்திய அரசு மவுனம்

மத்திய அரசு மவுனம்

வட தமிழகத்தில் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளில் கடந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டிய ஆந்திர அரசு, இப்போது பாலாற்றில் மட்டுமின்றி, கொசஸ்தலை ஆற்றிலும் தடுப்பணைகளைக் கட்டத் தொடங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்துவதிலும், அணையின் பாதுகாப்பை மத்தியப் படைக்கு மாற்றுவதிலும் போடப்படும் முட்டுக்கட்டைகள், சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரள அரசின் தடுப்பணை கட்டும் திட்டம், பவானி, அமராவதி ஆகிய ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்கும் கேரளத்தின் திட்டம் ஆகியவற்றையும் தடுக்காமல் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

மத்திய அரசு துரோகம்

மத்திய அரசு துரோகம்

முந்தைய காங்கிரஸ் அரசால் அறிமுகம் செய்யப்பட்டு, இப்போதைய அரசால் செயல்படுத்தப்படும் நீட் தேர்வு ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை காவு வாங்கியிருக்கிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டிருப்பது, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாதது, மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திணிப்பது என தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைக்கிறது.

நிபந்தனை விதிக்கலாம்

நிபந்தனை விதிக்கலாம்

தமிழகத்தை ஆளும் அரசு வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், பணம் கொட்டும் பதவிகளை தக்கவைத்துக் கொள்ளவும் வசதியாக மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கிறது. இந்த அரசு தமிழகத்தின் உரிமைகளை மீட்கும் என்ற நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு வங்கியில் அதிமுகவின் 59,224 வாக்குகள் (5.36%) , திமுகவின் 18,352 வாக்குகள் (1.66%) உட்பட மொத்தம் 8% வாக்குகள் தமிழகத்திடம் உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் தமிழக வாக்குகளுக்கு பங்கு உண்டு. அனைத்துக் தமிழகக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தங்களின் வாக்குகள் தேவை என்றால் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை நிபந்தனையாக விதித்திருக்கலாம். ஆனால், அதை யாரும் செய்யவில்லை.

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் தற்கொலை

இன்றைய நிலையில் விவசாயிகளின் துயரம்தான் தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமுள்ள 10 பருவங்களில் மூன்று சம்பா பருவங்களில் மட்டும் தான் ஓரளவு சாகுபடி செய்யப் பட்டிருக்கிறது. இந்தத் துயரத்திற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதது தான்.

பாமக ஆதரவு

பாமக ஆதரவு

100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்தி காவிரிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தவறிவிட்டது. இத்தகைய சூழலில் அடுத்த ஒரு மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று பாரதிய ஜனதா தலைமை அறிவித்தால் அதையேற்று அக்கட்சியின் வேட்பாளருக்கு பாமக ஆதரவளிக்கும்; இல்லையேல் குடியரசுத் தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
president election: PMK to support bjp candidate ram nath Kovind if BJP led government sets up the Cauvery management board in a month, said ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X