For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை உடனடியாக வெளியிட வேண்டும்... பாமக தீர்மானம்

Google Oneindia Tamil News

திண்டிவனம்: ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

பாமகவின் தலைமைச் சிறப்பு செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் 13 சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள விவரங்களில் ஊரகப் பகுதி மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்த தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. நகர்ப்புற மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ள நிலையில், சாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி ஊரக இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 68.52% என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகள்

சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகள்

ஊரக மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு நிலைமை மிக மோசமாக உள்ள நிலையில் இடஒதுக்கீடு போன்ற சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகளின் மூலம் தான் அவர்களை முன்னேற்ற முடியும். இந்தியாவில் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சாதி அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு தான் பொருத்தமானதாக இருக்கும். அதற்கான அடிப்படைத் தேவை சாதி அடிப்படையிலான மக்கள் தொகை எனும் நிலையில், அதுகுறித்த தகவல்களை வெளியிடாமல் முடக்கி வைப்பது சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் நோக்கத்தையே சிதைந்து விடும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைமை சிறப்பு செயற்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு

சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு

இந்தியாவில் நடத்தப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கும் ஊரக இந்தியாவின் நிலை குறித்த புள்ளி விவரங்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. தேசிய அளவில் 74.5% குடும்பங்களும், தமிழகத்தில் 79 % குடும்பங்களும் மாதத்திற்கு ரூ. 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டுகின்றன. 85% குடும்பங்கள் அமைப்பு சாராத் தொழில்களையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. ஊரக மக்களில் பெரும்பாலானோருக்கு சொந்த நிலமோ, கல்வியறிவோ இல்லாததால் கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. அதேநேரத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடித்திருப்பதாகவும், இதன் பயன்களை பணக்காரர்கள் மட்டுமே அனுபவிப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தாராளமயமாக்கல் என்ற பெயரில் நடைமுறைப் படுத்தப்படும் தவறான கொள்கைகள் தான். சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அவலமான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்த பிறகாவது மத்திய, மாநில அரசுகள் தங்களின் கொள்கைகளை மாற்றிக் கொண்டு, உண்மையாகவே உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

முடங்கிப் போய்க் கிடக்கும் ஜெயலலிதா அரசு

முடங்கிப் போய்க் கிடக்கும் ஜெயலலிதா அரசு

தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறுகிறதா? என்பதே தெரியாத அளவுக்கு அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது. தமிழக மக்களுக்காக நாள்தோறும் 20 மணி நேரம் உழைப்பதாகக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா வாரத்திற்கு இரு நாட்கள் கூட தலைமைச் செயலகம் வந்து மக்கள் பணியாற்றுவதில்லை. முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் 44 நாட்கள் ஆகும் நிலையில் 10 நாட்கள் மட்டுமே தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்தில் எந்த பணியையும் அவர் மேற்கொள்வதில்லை. அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை மட்டுமே தலைமைச் செயலகத்தில் இருக்கும் ஜெயலலிதா பெயருக்கு சில திட்டங்களைத் தொடங்கி வைத்து விட்டு இல்லம் திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஆனால், தினமும் செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு நாளில் அவர் தொடங்கிவைத்த திட்டங்கள் குறித்து தினமும் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்படுகிறது.

ஒருமுறை கூட கூட்டப்படாத அமைச்சரவை கூட்டம்

ஒருமுறை கூட கூட்டப்படாத அமைச்சரவை கூட்டம்

ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்று இதுவரை ஒருமுறை கூட அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படவில்லை. இதற்கு முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமது 8 மாத ஆட்சியில் ஒரே ஒரு முறை மட்டுமே அமைச்சரவையை கூட்டினார். அதிலும் சட்டப்பேரவையில் ஆளுனர் உரையாற்றும் தேதி முடிவு செய்யப்பட்டதை விட வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடைசியாக பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு பிறகு இன்றுடன் 150 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படாவிட்டால் மக்கள் நலத்திட்டங்கள் எந்த முடிவும் எடுக்கப்படாமல் அரச நிர்வாகம் முடங்கிக் கிடப்பதாகத் தான் பொருள் கொள்ள முடியும். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் புதுமையான திட்டங்களை அறிவித்து தமிழகத்திலிருந்து முதலீட்டை ஈர்த்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சரும், அரசு நிர்வாகமும் முடங்கிக் கிடப்பது மாநில நலனுக்கு நல்லதல்ல. செயல்படாத நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கி வைத்திருக்கும் ஜெயலலிதா அரசுக்கு பா.ம.க. தலைமை சிறப்பு செயற்குழு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

சட்டசபையைக் கூட்டுக

சட்டசபையைக் கூட்டுக

தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு, ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கைகள் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவது தான் வழக்கம். அப்போது தான் சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பிலான திட்டங்களைச் செயல்படுத்த முடியும். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி முதலமைச்சரான பிறகு தான் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்த வேண்டும் என்ற நோக்குடன் கடந்த ஏப்ரல் 1&ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை இன்று வரை கூட்டப்படவில்லை. இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டு ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக்கப்பட்ட பிறகும் பேரவைக் கூட்டத்திற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டுள்ள ஜெயலலிதா ஓய்வுக்காக கொடநாடு செல்லவிருப்பதால் உடனடியாக சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றவில்லை. தனிநபரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப சட்டப்பேரவை பகடைக்காயாக்கப்படுவதை பா.ம.க. கண்டிக்கிறது. தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறது.

மாற்றுக தலைமைத் தேர்தல் அதிகாரியை

மாற்றுக தலைமைத் தேர்தல் அதிகாரியை

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்ட இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அரங்கேற்றப்பட்ட விதிமீறல்கள் எண்ணிலடங்காதவை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசு செலவில் சாலை அமைப்பது, குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வசதிகள் செய்வது உள்ளிட்ட விதிமீறல்கள் செய்யப்பட்டன. அதிமுகவுக்கு ஆதரவாக காவல்துறை அதிகாரி பிரச்சாரம் செய்வதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய போதிலும் அவர் மீது எந்த நடவடிக்கையையும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா எடுக்கவில்லை. வாக்குப்பதிவு நாளன்று அதிமுகவினர் கும்பல் கும்பலாகச் சென்று வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டனர். ஆனால், இதைத் தடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதுடன், அதை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்தார். இந்த நிலை தொடர்ந்தால் பிகாரில் நடப்பது போல் தமிழகத்திலும் தேர்தலின் போது படைபலத்தைப் பயன்படுத்தும் ஆபத்து உள்ளது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் சந்தீப் சக்சேனா தொடர்ந்தால் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, சந்தீப் சக்சேனாவை நீக்கி விட்டு நேர்மையான அதிகாரி ஒருவரை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை பாட்டாளி மக்கள் கட்சிக் கேட்டுக் கொள்கிறது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்

நிலம் கையகப்படுத்தும் சட்டம்

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் மற்றும் அவசர சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே முதன்முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதும், இச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதும் மருத்துவர் அய்யா அவர்கள் தான். இதற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்த செயற்குழு பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரத்தில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றியே என்பதில் நரேந்திர மோடி அரசு பிடிவாதமாக உள்ளது. ஆனால், அந்த மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்திலும் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. வரும் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள கூட்டத் தொடர் முடிவதற்குள் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும். அதன்பிறகும் மீண்டும் அவசரச் சட்டத்தை பிறப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அதிமுக அரசின் ஊழல்கள்

அதிமுக அரசின் ஊழல்கள்

தமிழக அரசு நிர்வாகத்தில் எங்கும் ஊழல்... எதிலும் ஊழல் என்ற அவல நிலை தான் காணப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 18 ஊழல்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 17.02.2015 அன்று மேதகு தமிழக ஆளுனர் ரோசய்யா அவர்களிடம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையிலான குழு ஆதாரங்களுடன் கூடிய 209 பக்க ஊழல் புகார் பட்டியலை அளித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167(பி) பிரிவின் படி மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்கவும், விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால் விசாரணைக்கு ஆணையிடவும் மாநில ஆளுனருக்கு அதிகாரம் உள்ளது. அரசு மீது ஆதாரங்களுடன் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுனரின் கடமை என்ற போதிலும், அதை செய்ய தமிழக ஆளுனர் தவறியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் பா.ம.க. அளித்த புகார் பட்டியல் மீதான நடவடிக்கையை இனியும் தாமதப்படுத்தாமல், அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுனரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கர்நாடகத்திற்குப் பாராட்டு

கர்நாடகத்திற்குப் பாராட்டு

நீதித்துறையில் ஒரு தீர்ப்பு எப்படி வழங்கப்படக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்தத் தீர்ப்பு ஆகும். ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்பட்டது, ஜெயலலிதாவின் வருவாய் உயர்த்தி மதிப்பிடப்பட்டது என தீர்ப்பில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இதற்கெல்லாம் மேலாக ஜெயலலிதாவின் கடன் வருவாயை கூட்டுவதில் செய்யப்பட்ட தவறு காரணமாக அவரது கணக்கில் ரூ.13.50 கோடி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. பிழைகள் நிறைந்த இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்; அதற்காக இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய மருத்துவர் அய்யா அவர்கள், இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அவர்களுக்கு கடிதம் எழுதி அதை பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையிலான குழு மூலம் ஒப்படைக்கச் செய்தார். அதையேற்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த செயற்குழு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும், கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைமை சிறப்பு செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மது விலக்கை கொண்டு வருக

மது விலக்கை கொண்டு வருக

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது மது தான். தமிழகத்தில் மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். பெரியவர்கள் மட்டுமே மது அருந்தும் நிலை மாறி சிறுவர்களும், பெண்களும் கூட மது அருந்துவது சாதாரண நிகழ்வாகி விட்டது. மதுவின் தீமைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், குடிப்பழக்கத்தால் ஆண்டு தோறும் 25 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், மது குடிப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கொடிய விளைவுகளை மது ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், தெருவுக்குத் தெரு கடைகளை திறந்து இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது சரியா? என தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

மாவட்டந்தோறும் மகளிர் கூட்டம்

மாவட்டந்தோறும் மகளிர் கூட்டம்

இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டுவதற்காகத் தான் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தலைமையில் மாவட்டம் தோறும் மிகப்பெரிய அளவில் மகளிர் பங்கேற்கும் மது ஒழிப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களை வெற்றி பெறச்செய்த மக்களுக்கு இக்கூட்டம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் மீதமுள்ள மாவட்டங்களிலும் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும் இக்கூட்டம் உறுதியேற்கிறது. மேலும், பா.ம.க. ஆட்சிக்கு வந்த பின்னர் முதலமைச்சரின் முதல் கையெழுத்தே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காகத் தான் இருக்கும் என்ற நிலைப்பாட்டை பா.ம.க. செயற்குழு மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது.

மேகதாது அணை

மேகதாது அணை

கர்நாடகத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்காக கர்நாடக அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும். இத்திட்டத்தை தடுக்க தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நாடாளுமன்ற மக்களவையில் பிரச்சினை எழுப்பியும், மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதியை நேரில் சந்தித்தும் மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தினார். இதுதொடர்பாக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கு மத்திய அமைச்சர் உமாபாரதி அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அனுமதி கோரினாலும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாவிட்டால் அதை திருப்பி அனுப்பி விடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் மேகதாது அணை திட்டம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமான அன்புமணி இராமதாசு அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
அதேபோல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், காவிரியில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழு வலியுறுத்துகிறது.

கடும் வறட்சி

கடும் வறட்சி

தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், குறுவை சாகுபடி செய்ய முடியாமலும், சாகுபடி செய்த பயிர்கள் வறட்சியில் கருகியதாலும் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல், காவிரி பாசன மாவட்டங்களில் ஏராளமான உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்து 500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், வாங்கிய கடனை திரும்ப செலுத்தாவிட்டால், உழவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்வோம் என்று வங்கிகள் அறிவிக்கை அனுப்புவதை பா.ம.க. கண்டிக்கிறது. உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கவும், அவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்வதை உறுதி செய்யவும் வசதியாக உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், வேளாண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ. 15,000 வீதமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு செயற்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.

152 அடியாக உயர்த்துக

152 அடியாக உயர்த்துக

முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டு விவசாயிகளின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி நிறைவேற்றப்பட்டது. முல்லைப் பெரியாற்றில் இப்போதுள்ள அணைக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக வல்லுனர் குழு உறுதி செய்துள்ள நிலையில், அதை புறந்தள்ளிவிட்டு, புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளில் கேரள அரசு ஈடுபட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது. எனவே, கேரளத்தின் இந்தத் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பேபி அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். மற்றொருபுறம், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசை இக்கூட்டம் கோருகிறது.

மீனவர் மீதான தாக்குதலை நிறுத்துக

மீனவர் மீதான தாக்குதலை நிறுத்துக

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப் படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. சிங்களப் படையினரால் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் 46 படகுகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில், மேலும் 14 மீனவர்கள் அவர்களின் 3 படகுகளுடன் கடந்த ஜூன் முதல் நாள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்படவில்லை. உடனடியாக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் நிரந்தரமாக தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது என்று அந்த 13 தீர்மானங்களிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

English summary
PMK has urged the centre to release caste based census ASAP. It has adopted a resolution in this regard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X